குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்: மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி

மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டத்தில் டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

எள்

எள்

டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

விதை நேர்த்தி:

ஏக்கருக்கு 2 கிலோ விதையினை 1.5 லிட்டர் நீரில் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாத்திரத்தினை மூடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை விதையை நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் எஞ்சியுள்ள நீரை வடிகட்டிவிட்டு, நிழலில் சாக்குகளை விரித்து விதைகளை உலர்த்தி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிட்டு 15 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த விதையுடன் 8 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான உரத்தை கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

விதைப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பூஞ்சான விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையுடன், உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் ஆடையினை நீக்கிவிட்டு இதில் மேற்குறிப்பிட்ட 2 பொட்டலங்களையும் நன்கு கலக்க வேண்டும். இக்கலவையினை விதையுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலம் தயார் செய்தல்:

நிலத்தினை ஏர் கலப்பை கொண்டு 5 முதல் 6 முறை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அவசியம் இடவேண்டும். மேலும் தேவையான அடியுரம், 80 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.

விதைப்பு:

விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணலை கலந்து சீராக குறுக்கும் நெடுக்குமாக விதைக்க வேண்டும்.

விதைத்தபின் படல் கொண்டு இழுத்து விதைகளை மூடவேண்டும். பின்னர் சரிவின் குறுக்கே வாய்க்கால்களும், பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளும் அமைக்க வேண்டும். எள் பயிருக்கு உரமிடுதல் மிக அவசியமானது.

உரமிடுதல்:

மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையறிந்து உரமிடுவதால் மட்டுமே உரச்செலவை குறைத்து உர விரயத்தை தவிர்த்து, உயர் மகசூல் பெற இயலும். மண் பரிசோதனை மேற்கொள்ள இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை இடலாம்.

களை மேலாண்மை:

விதைத்த முதல் 30 நாள்களுக்கு களையின்றி வயலை பராமரிப்பதால் மட்டுமே கால் பங்கு மகசூல் கூடுதலாகப் பெறலாம். விதைத்த 3ஆம் நாள் தண்ணீர் பாய்ச்சியவுடன் மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்கும் போது ஏக்கருக்கு 1.6 லிட்டர் ஆலாகுளோர் என்னும் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்து களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 20ஆம் நாள் நீர்ப் பாய்ச்சி மேலுரமிட்டு பயிர் கலைத்தலை மேற்கொள்ளும்பொழுது, இருக்கும் களைகளை எடுத்துவிடவேண்டும்.

நீர்ப் பாசனம்:

பொதுவாக மாலை 5 மணியளவில் செடி வாட்டமாகக் காணப்பட்டால் உடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மாசிப்பட்ட எள் சாகுபடியைப் பொறுத்தவரை 5 நீர்ப்பாசனங்கள் தேவைப்படும். இவை முறையே, விதைத்த முதல் நாள், 20-25ஆம் நாள், 35-40ஆம் நாள், 50-55ஆம் நாள் மற்றும் 65ஆம் நாள் ஆகும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தினை 12 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய 2 கிலோ டிஏபி கரைசலுடன் 200 லிட்டர் நல்ல தண்ணீர் கலந்து விதைத்த 25, 45 மற்றும் 60ஆம் நாள்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் தன்மை அதிகமாகும்.

பயிர் பாதுகாப்பு:

எள் பயிரை கொண்டைப்புழு, எள் குடையான், எள் காய் ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை தாக்கி சேதம் விளைவிக்கும். மேலும் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் போன்றவையும் எள் பயிரை தாக்கும்.

இறவை எள்பயிரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படத் தொடங்கியவுடன் பொருளாதார சேத நிலையினை கணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாள்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.

பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் உடன் அருகிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மையங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஒட்டுண்ணியினை இலவசமாகப் பெற்று கட்டுப்படுத்தலாம்.

அறுவடை:

ரகத்தைப் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும். தண்டு மஞ்சள் நிறமாக மாறுவதும் கீழ்பகுதியிலிருந்து எட்டாவது காய்களில் உள்ள விதைகள் நிறம் மாறத் துவங்குவதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அறுவடை செய்யப்பட்ட செடியின் முன்பகுதி உட்புறமாகவும், அடிப்பகுதி வெளிப்புறமாகவும் உள்ளவாறு வட்ட வடிவமாக செடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வர வேண்டும். இவ்வாறு அடுக்கும்போது, வேப்பங்கொட்டைத்தூளை தூவி வருவதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம். பின்னர், வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.

போரினை 3 நாள்களுக்குப்பின் பிரித்து செடிகளை உதறி, கிடைக்கும் எள்ளை தனியாக சேகரிக்க வேண்டும். பின்னர், செடிகளை வெயிலில் உலர்த்தி அடுத்த 2 நாள்களுக்கு உலுக்கி கிடைக்கும் எள்ளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். இவ்விதைகளை தனித்தனியாக 7 முதல் 8 சதவீத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் எள் சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம் என்றனர்.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

dn

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் முனைவர் முரு. ராமநாதன், பேராசிரியர் சு. ராஜேந்திரன்

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடித் தொழில்நுட்பம்

கார்த்திகைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக இருப்பது எள் மட்டுமே. இப்போது கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

எண்ணெய் வித்துகளின் இளவரசி என்று அழைக்கப்படும் எள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

ரகங்கள்:

கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு

  • கோ-1,
  • டிஎம்வி-3,
  • டிஎம்வி-5,
  • எஸ்விபிஆர்-1

ஆகிய ரகங்கள் தகுதியானவை.

எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.

உழவு முறை:

எள் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், விதைகள் நன்கு முளைக்க மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து, நுண்மைப்படுத்த வேண்டும். எனவே, நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.

இல்லையெனில், இரும்புக் கலப்பையால் மூன்று முறையோ அல்லது நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.

இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைக் கணக்கிட்டு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு நீர் தேங்காத வகையில் நன்கு சமன் செய்யப்பட்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கான்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விருடி என்ற அளவில் கலந்து, 24 மணி நேரம் காற்றுப் புகாத வகையில் வைத்திருந்து, உயிர் உர விதையை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
விதைகள் சீராகப் பரவ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக விதைக்க வேண்டும்.

தொழில்நுட்ப முறைகள்:

விதைத்த 15ஆம் நாள் செடிக்கு, செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளைக் கலைந்து விட வேண்டும். 30ஆம் நாள் செடிக்கு, செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைந்து விடவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும்.

இல்லையெனில், பொதுப் பரிந்துறையான இறவை எள்ளுக்கு ஏக்கருக்கு 14:9:9 கிலோ தலை, மணி, சாம்பல் சத்து தரும் உரங்களை இடவேண்டும். விதைப்புக்குப் பின் ஓர் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நூண்ணூட்டச் சத்தை, நன்கு மக்கிய 8 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராக தூவ வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்த பென்டிமெத்தலின் 1.3 லிட்டர் களைக் கொல்லி மருந்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 3 நாள்களுக்குள் சீராகத் தெளிக்க வேண்டும். இல்லையெனில், 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
களைக் கொல்லி பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15 நாள்கள் கழித்து ஒரு கைக் களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக் களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

நீர்ப் பாய்ச்சுதல்:

மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு 5 அல்லது 6 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதைத்தவுடன் 7ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25ஆவது நாள் பூக்கும் தருவாயில் இரண்டு முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் இரு முறையாக 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். இறவைப் பயிரில் 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.

அறுவடை:

செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து, காய்கள், தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறுவதே பயிர் அறுவடை செய்ய உகந்த காலமாகும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10ஆவது காயில் உள்ள விதைகள் கறுப்பாக மாறியவுடன் அறுவடை செய்தால், காய்கள் வெடித்துச் சிதறி ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்தி –

தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன்

வேளாண் அரங்கத்தில்