பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புமுறை என்பது

  • உழவியல் முறைகள்,
  • கைவினை முறைகள்,
  • உயிரியல் முறைகள்

ஆகிய மூன்று முறைகளும் அடங்கியதாகும்.

பருத்தி பாதுகாப்பில் உயிரியல் முறைகள்
1. டிரைக்கோடெர்மா விரிடி என்ற விதைநேர்த்தி பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைப்பதால் விதையுடன் பரவும் நோய்களைத் தடுக்கலாம். இதனால் ஏக்கருக்கு ரூ.3/- மட்டுமே செலவாகும்.
2. டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி விடுதல்: ஒரு ஏக்கருக்கு ஒரு தடவை 4,000 வீதம் 6 தடவைகள் மொத்தம் 24,000 எண்கள் விடப்பட வேண்டும். இதை பருத்தி விதைத்த 40ம் நாளிலிருந்து ஆரம்பித்து 15 நாள் இடைவெளியில் மொத்தம் 6 தடவைகள் விடப்பட வேண்டும். இவை காய்ப்புழுக்கள் முட்டைகளின்மீது தன் முட்டைகளை இட்டு காய்ப்புழுக்கள் தோன்றாமல் தடுக்கின்றது.
3. கிரைசோபா, பொரிவண்டு, செலானஸ் குளவி ஆகியவை காய்ப்புழுக்களின் அந்துப்பூச்சிகள், முட்டைகள், புழுக்கள் ஆகியவற்றினைப் பெருமளவில் தாக்கி அழிக்கின்றன. எனவே நன்மை செய்யும் இப்பூச்சிகளை அதிகப்படுத்த பருத்தியில் ஊடுபயிராக மக்காச்சோளம், தட்டைப்பயறு போன்றவைகளை சாகுபடி செய்ய வேண்டும்.
4. ரெடுவட் நாவாய்ப்பூச்சி ஏக்கருக்கு 2000 பூச்சிகள் வெளியிடுவதால் அனைத்துவகை புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
5. பல்வேறு வகையான சிலந்திகள் காய்ப்புழுக்களையும், அதன் அந்துப் பூச்சிகளையும் பெருமளவு உணவாக்கிக் கொள்கின்றன. மேலும் பல்வேறுவகையான குளவிகள் காய்ப்புழுக்களையும் அந்துப் பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றது. சிலவகை குளவிகள் தன் இனத்தைப் பெருக்குவதற்காக காய்ப்புழுக்களின் முட்டைகளின் மேல் தன் முட்டைகளை இட்டு காய்ப்புழுக்கள் தோன்றாமல் தடுக்கின்றன. எனவே இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை அழிக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி உபயோகத்தினை தவிர்த்திட வேண்டும்.
6. என்.பி. வைரஸ் தெளித்தல்: காய்ப் புழுக்களைத் தடுக்க ஒரு ஏக்கருக்கு 200 வைரஸ் தாக்கிய புழுக்களின் திரவம் தேவைப்படும். இத்துடன் 200 மில்லி டீப்பாலை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். முதல் மற்றும் 2ம் நிலை புழுக்களைப் பார்த்த நாளிலிருந்து 15 நாள் இடைவெளியில் 3 தடவைகள் தெளிக்க வேண்டும். இதனால் காய்ப்புழுக்களின் தாக்குதல் இந்தப் பருவத்திலும், அடுத்த பருவத்திலும் வெகுவாகக் குறையும். ஒவ்வொரு புழுவிற்கும் தனித்தனி வைரஸ் உண்டு.
7. பாசில்லஸ் துரின்ஜின்சிஸ் (ஆ.கூ) எனும் பாக்டீரியா காய்ப்புழுக்களை நோயுறச் செய்து அழிக்கும். இதனையும் பருத்தியில் தெளிக்கலாம். 1 ஏக்கருக்கு 400 கிராம் பாக்டீரியா தேவைப்படும்.
8. ‘கூ’ வடிவ குச்சிகளை நட்டு வைத்தல்: வெளியிலிருந்து வந்து பெருமளவு சேதம் விளைவிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்த பருத்தி வயலில் 4,5 இடங்களில் சுமார் 5 அடி கூ வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும். எலிகளை விரும்பி உண்ணும் ஆந்தை போன்ற பறவைகள் இதன்மேல் உட்கார்ந்து எலிகளை சுலபமாக பிடித்து உண்ண இக்குச்சிகள் உதவிபுரியும். ஒரு ஆந்தை ஒரு இரவில் குறைந்தது 5-6 எலிகளை உண்ணும்.

உயிரியல் முறையினால் நன்மைகள்:
1. ரசாயன மருந்துகளை விட சிக்கனமானது.
2. ஒரு தடவை பயன்படுத்தினால் பயிர் அறுவடைக்காலம் வரை நிலைத்து நிற்கும்.
3. மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
4. சுற்றுப்புற சூழ்நிலையோ அல்லது மனிதர்கள், கால்நடைகள் பயன்படுத்தும் நீர் நிலைகளைப் பாழாக்குவதில்லை. வேறு எந்தக் கெடுதலும் ஏற்படுத்தாது.
5. பயிரைத் தாக்கும் பூச்சிகளில் எதிர்ப்புசக்தி உருவாவதில்லை.
மேற்கண்ட முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதற்கு மேலும் பூச்சிகளின் சேதம் பொருளாதார சேத நிலையினை எட்டினால் மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். இதனால் பருத்தி சாகுபடி செலவினம் மிகவும் குறைவாகி கூடுதல் லாபம் உறுதியாகக் கிடைக்கும்.

தினமலர் செய்தி  -பா.வன்னியராஜன், எம்.எஸ்சி(விவ), வேளாண்மை உதவி இயக்குனர், உழவர் பயிற்சி நிலையம், பரமக்குடி.

Leave a comment