தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால் பயிரிட்டுள்ள விவசாயிகள்

சவுண்டல் (அ) வேலிமசால்

சவுண்டல் (அ) வேலிமசால்

http://erodelive.com/velanmainews/index.php?id=62

ஈரோடு – கரூர் சாலையில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்’ பயிரிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. ஒரு ஏக்கர் தென்னை மரத்துக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படுகிறது. விதையை கொதிநீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் அந்த விதையை தென்னை தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக பயிரிடலாம்.

விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். ஈரோடு – கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் புதூர் அருகே கேட்புதூர் பகுதியில் வேலிமசால் செடி அதிகளவு தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக பயிரடப்பட்டுள்ளது. பார்க்க அழகாகவும், வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளது. செடியில் பச்சியம் சத்து அதிகளவு உள்ளதால், கால்நடைகளுக்கு மட்டுமல்ல தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.

நவீன தொழில்நுட்பம் – செலவில்லாத தீவன சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன் பசுந்தீவனத்துக்காக தனித் தோட்டத்தையே பராமரித்து வருகிறார். பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பாநாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத்தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சூபாபுல்) போன்ற பலவித தீவனப் பயிர்களை வளர்த்து வருகிறார். 230 சென்டில் மல்பெரி, ஊடுபயிராக வேலி மசால், முயல்மசால், கலப்பக்கோணியம் சாகுபடி செய்துள்ளார் விவசாயி. 5 அடி இடைவெளியில் 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு மேட்டுப்பாத்தி அமைத்த, வாய்க்கால்களின் வெளிப்புற இரு ஓரங்களிலும் கரணைக்குக் கரணை 3 அடி இடைவெளிவிட்டு மல்பெரி விதைக் கரணைகளை நடவேண்டும். கரணையில் 2 பருக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டும். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.

மேட்டுப்பாத்திகளின் மையத்தில் அரை அங்குல ஆழத்திற்கு நீளமான கோடு இழுத்து ஒரு பாத்தியில் முயல் மசால், அடுத்த பாத்தியில் கலப்பக்கோணியம், அடுத்த பாத்தியில் வேலிமசால் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா 2 கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடன் 6 கிலோ மணல் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்து, உயிர்த்தண்ணீர் விட வேண்டும். 3 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக்கொட்டகைக் கோமிய சகதி ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பாசனநீர் கலந்து விடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்ய வேண்டும். 90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்குத் தயாராகிவிடும். முயல்மசால், வேலிமசால் ஆகியவற்றை அறுவடை செய்யும்போது தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் சுமார் 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் ஒரு வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும் முயல்மசால் 300 கிலோவும் கலப்பக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும். உயிர்வேலியாக சவுண்டல்: வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு 3வது நாள் தண்ணீர் பாய்ச்சினால்போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவை யில்லை. தானாகவே வளர்ந்துவிடும். 3 மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மாதத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும். பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் மல்பெரி: பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும்தான் மல்பெரி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனமாகிறது என்ற விபரம் நிறைய விவசாயிகளுக்கு தெரியவில்லை என்கிறார் விவசாயி. இது மாதிரியான பசுந்தீவனத்தை கால்நடைகள் விரும்பி உண்ணும். சீக்கிரம் செரிமானம் ஆகிறது. கால்நடைகளுக்கு வெறும் அடர்தீவனத்தையும் புல்லையும் மட்டம் கொடுத்தால் கண்டிப்பாக ஆராக்கியமாக இருக்காது. விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுத்து, விதைகளையும், விதைக் கரணைகளையும் இலவசமாக கொடுத்து வருகிறேன்.

தொடர்புக்கு: ஆதிநாராயணன், 98656 13616. (தகவல்: பசுமை விகடன், ஜனவரி 2010)