குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்: மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி

மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டத்தில் டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

எள்

எள்

டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

விதை நேர்த்தி:

ஏக்கருக்கு 2 கிலோ விதையினை 1.5 லிட்டர் நீரில் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாத்திரத்தினை மூடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை விதையை நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் எஞ்சியுள்ள நீரை வடிகட்டிவிட்டு, நிழலில் சாக்குகளை விரித்து விதைகளை உலர்த்தி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிட்டு 15 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த விதையுடன் 8 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான உரத்தை கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

விதைப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பூஞ்சான விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையுடன், உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் ஆடையினை நீக்கிவிட்டு இதில் மேற்குறிப்பிட்ட 2 பொட்டலங்களையும் நன்கு கலக்க வேண்டும். இக்கலவையினை விதையுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலம் தயார் செய்தல்:

நிலத்தினை ஏர் கலப்பை கொண்டு 5 முதல் 6 முறை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அவசியம் இடவேண்டும். மேலும் தேவையான அடியுரம், 80 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.

விதைப்பு:

விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணலை கலந்து சீராக குறுக்கும் நெடுக்குமாக விதைக்க வேண்டும்.

விதைத்தபின் படல் கொண்டு இழுத்து விதைகளை மூடவேண்டும். பின்னர் சரிவின் குறுக்கே வாய்க்கால்களும், பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளும் அமைக்க வேண்டும். எள் பயிருக்கு உரமிடுதல் மிக அவசியமானது.

உரமிடுதல்:

மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையறிந்து உரமிடுவதால் மட்டுமே உரச்செலவை குறைத்து உர விரயத்தை தவிர்த்து, உயர் மகசூல் பெற இயலும். மண் பரிசோதனை மேற்கொள்ள இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை இடலாம்.

களை மேலாண்மை:

விதைத்த முதல் 30 நாள்களுக்கு களையின்றி வயலை பராமரிப்பதால் மட்டுமே கால் பங்கு மகசூல் கூடுதலாகப் பெறலாம். விதைத்த 3ஆம் நாள் தண்ணீர் பாய்ச்சியவுடன் மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்கும் போது ஏக்கருக்கு 1.6 லிட்டர் ஆலாகுளோர் என்னும் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்து களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 20ஆம் நாள் நீர்ப் பாய்ச்சி மேலுரமிட்டு பயிர் கலைத்தலை மேற்கொள்ளும்பொழுது, இருக்கும் களைகளை எடுத்துவிடவேண்டும்.

நீர்ப் பாசனம்:

பொதுவாக மாலை 5 மணியளவில் செடி வாட்டமாகக் காணப்பட்டால் உடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மாசிப்பட்ட எள் சாகுபடியைப் பொறுத்தவரை 5 நீர்ப்பாசனங்கள் தேவைப்படும். இவை முறையே, விதைத்த முதல் நாள், 20-25ஆம் நாள், 35-40ஆம் நாள், 50-55ஆம் நாள் மற்றும் 65ஆம் நாள் ஆகும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தினை 12 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய 2 கிலோ டிஏபி கரைசலுடன் 200 லிட்டர் நல்ல தண்ணீர் கலந்து விதைத்த 25, 45 மற்றும் 60ஆம் நாள்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் தன்மை அதிகமாகும்.

பயிர் பாதுகாப்பு:

எள் பயிரை கொண்டைப்புழு, எள் குடையான், எள் காய் ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை தாக்கி சேதம் விளைவிக்கும். மேலும் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் போன்றவையும் எள் பயிரை தாக்கும்.

இறவை எள்பயிரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படத் தொடங்கியவுடன் பொருளாதார சேத நிலையினை கணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாள்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.

பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் உடன் அருகிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மையங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஒட்டுண்ணியினை இலவசமாகப் பெற்று கட்டுப்படுத்தலாம்.

அறுவடை:

ரகத்தைப் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும். தண்டு மஞ்சள் நிறமாக மாறுவதும் கீழ்பகுதியிலிருந்து எட்டாவது காய்களில் உள்ள விதைகள் நிறம் மாறத் துவங்குவதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அறுவடை செய்யப்பட்ட செடியின் முன்பகுதி உட்புறமாகவும், அடிப்பகுதி வெளிப்புறமாகவும் உள்ளவாறு வட்ட வடிவமாக செடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வர வேண்டும். இவ்வாறு அடுக்கும்போது, வேப்பங்கொட்டைத்தூளை தூவி வருவதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம். பின்னர், வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.

போரினை 3 நாள்களுக்குப்பின் பிரித்து செடிகளை உதறி, கிடைக்கும் எள்ளை தனியாக சேகரிக்க வேண்டும். பின்னர், செடிகளை வெயிலில் உலர்த்தி அடுத்த 2 நாள்களுக்கு உலுக்கி கிடைக்கும் எள்ளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். இவ்விதைகளை தனித்தனியாக 7 முதல் 8 சதவீத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் எள் சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம் என்றனர்.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

dn

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் முனைவர் முரு. ராமநாதன், பேராசிரியர் சு. ராஜேந்திரன்

குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையைக் காக்க…

தென்னையில் இளம் பருவத்தில் குருத்துப் பகுதியைத் தாக்கி குருத்து அழுகலை ஏற்படுத்தும் இந்நோய் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. வடிகால் வசதியற்ற நீர் தேங்கும் தன்மையுள்ள நிலங்களிலும், காற்றின் ஈரத் தன்மை அதிகமாக காணப்படும் பருவ மழைக் காலங்களிலும் இந்நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும்.

இந்நோய் ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இது மண்ணில் வாழும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மரத்தில் இருந்து நீரின் மூலம் சுற்றி உள்ள ஆரோக்கியமான மரங்களுக்கும் இது பரவி குருத்து அழுகலை ஏற்படுத்தும்.

இந்நோய் தாக்கப்பட்ட கன்றுகளின் குருத்து இலை வறண்டு காணப்படும். நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது குருத்து முழுவதும் அழுகி அனைத்து இலைகளும் வறண்டு மரம் பட்டுவிடும்.

பாதிக்கப்பட்ட குருத்து இலைகளை இழுத்தால் கையோடு வந்து விடும். அதன் அடிப்பாகம் அழுகி நுர்நாற்றம் வீசும். இந்நோய் முதலில் இலைகளின் வெளிப்புறத்தை தாக்கி, பின்னர் குருத்து இலையை நோக்கி பரவும். அந்த நேரத்தில் தடுப்பு முறைகளை செய்தால் தென்னையை இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.

தடுப்பு முறைகள்:

வரும்முன் காக்கும் வழிமுறையாக தோப்புகளில் வடிகால் வசதியை மேம்படுத்தி அதிகப்படியான நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களை தனிமைப்படுத்தி அதற்கு தனியாக நீர் பாய்ச்ச வேண்டும். பரிந்துரை செய்யப்படும் உரங்களுடன் ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

குருத்து அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு பட்டுபோன மரங்களை வேர்ப் பகுதியுடன் வயலில் இருந்து அகற்றி எரிக்க வேண்டும். அவ்வாறு தோண்டிய குழிகளில் சருகுகளை வைத்து தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற மரங்களுக்கு இந்நோய் உண்டாகும் பூசணம் பரவுவது தடுக்கப்படும்.

மட்டையின் வெளிப்பகுதியில் அழுகல் ஆரம்பித்தவுடன் அந்த அழுகிய பகுதியை வெட்டி அகற்றி விட்டு, வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையை தடவ வேண்டும்.

மரம் முழுவதும் நன்றாக படும்படி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது குளோரோ தலானில் 0.1 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையை காப்பாற்றலாம்

தினமணி செய்தி : 15 Sep 2011 12:00:00 AM IST
திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சா. தேவசகாயம்

பயிர்காக்கும் இயற்கை மருந்துகள்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.

எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.

நோய்/பூச்சி தீர்வு
அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்
இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
நெல் குலை நோய் வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
நெல் இலைச் சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
அனைத்து காய் துளைப்பான் பூச்சிகள் 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்
வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம்
பாக்டீரியா, பூஞ்சாணம் 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்
சாறு உறிஞ்சும் பூச்சி 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
கம்பளிப் புழு பாக்டீரீயா 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம்
கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
மிளகாய்ப் பேன், வெள்ளை ஈ 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம்
நெல் இலை சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம்
நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
பாக்டீரியா இலைக் கருகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்
நிலக்கடலை தூர் அழுகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.
பயறு வகை சாம்பல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம்
தென்னை வாடல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

 

விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை என்று பேசுபவர்களுக்கான தொழில்நுட்பம்

வேரைப் பாதுகாத்தால் விளைச்சல் அதிகரிக்கும்
விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும்.

  • மனிதனுக்கு இதயம், நுரையீரல் எப்படி முக்கியமோ பயிருக்கு அந்த அளவு வேர் முக்கியம். வேர் திடமாக இருந்தால்தான் பயிர் செழித்து வளரும்.
  • மனிதன் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்ப்பன்- டை-ஆக்ஸைடை வெளியிடுகிறான். பயிர்களின் வேர் கார்ப்பன்-டை- ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வேர் வலிமையாக இருந்தால்தான் சுவாசிக்கும் திறன் நன்றாக இருக்கும்.

வேரைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

வேர் வலிமையாக இருக்க அங்ககப் பொருள்களை அதிகமாகப் பயிர்களில் பயன்படுத்த வேண்டும். வேர் சுவாசம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வேர் கிளைக்கும். அதிகமான கிளைப்பு காரணமாக மகசூல் அதிகரிக்கும்.
ஆடி, தை ஆகிய 2 பட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகளுக்குத் தொழு உரத்துக்குப் பதிலாக தேங்காய்நார் கழிவு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அங்ககக் கரிமசத்து இதில் அதிகமாக இருக்கிறது. இந்த உரத்தைப் பயன்படுத்தினால் வேர் திடமாக இருக்கும்.

கிளைப்பு நிறைய வரும். சுவாசம் நன்றாக இருக்கும். ஈரம் காக்கும் தன்மையும் கூடவே கைக்கூடும். மேலும் நன்மை தரும் நுண்கிருமிகள் வேர்ப்பகுதியில் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரைவகைகள் மற்றும் தோட்டப் பயிர்களான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு தேங்காய் நார் உரத்தைப் பயன்படுத்தலாம்.

எந்தப் பயிராக இருந்தாலும் வேர்ப் பகுதியில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். வேப்பம்புண்ணாக்கில் அசாடி ரக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கசப்புத்தன்மை இருக்கிறது.

இத்தன்மை காரணமாக வேரில் அழுகல் நோய், வேர் வாடல் நோய், வேரைத் தாக்கும் நூல் புழு வராமல் தடுக்க முடியும். இந்தப் புண்ணாக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை விரட்டி வேரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

உர மேலாண்மையை கடைப்பிடிப்பது எப்படி?

உலகில் உரம் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் செலவீனத்தில் உரங்களுக்கான மானியமாக ரூ.51 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உரத்துக்கான செலவுகள் மிக அதிகமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.

மண்வள அட்டை கொண்டு உரமிடுதல்

தமிழகத்தில் உள்ள பலவகையான மண்களில் ஊட்டச்சத்து நிலை மாறுபடுகிறது. எனவே, அனைத்து வகை மண்ணுக்கும் ஓரே அளவு உரமிடுதல் அவசியமற்றது.

தேவைக்கு அதிகமான உரத்தை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகிறது. மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதித்து மண்வள அட்டை பெற்று அதன்படி உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்ய அந்தந்தப் பகுதி வேளாண்மை விரிவாக்க மையம், அக்ரி கிளினிக்குகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை அணுகலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்:

பயிருக்கு தழைச்சத்து கொடுக்க உரங்களை மட்டும் பயன்படுத்துவதை குறைத்து மாற்று முறைகளையும் கையாளலாம். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபாடீயா போன்றவற்றை உபயோகிக்கலாம். நெற்பயிரில் நாற்று நடுவதற்கு முன்பு தக்கை பூண்டை விதைத்து உழுவதின் மூலம் தழைச்சத்தை பசுந்தாள் உரமாக தரலாம்.

இந்த பசுந்தாள் உரத்தால் ஹெக்டேருக்கு 45 கிலோ நைட்ரஜன் (100 கிலோ யூரியா தரும் அளவுக்கு) சத்து பயிருக்கு கிடைக்கும். மேலும் யூரியாவை அப்படியே நிலத்தில் இடுவதால் ஆவியாதல் மூலம் சத்து விரயமாகும். எனவே, வேப்பம் புண்ணாக்குடன் நன்கு கலந்து இடுவதால் சத்து விரயமாவதைத் தடுக்கலாம்.

தேவைக்கு அதிகமான தழைச்சத்து இடுவதால் பூச்சி நோய் தாக்குதல், பாஸ்பரஸ் அதிகரித்து மகசூலும் குறையும்.

பாஸ்பரஸ் கரைத்து பயிருக்கு அளிக்க உயிர் உரமான பாஸ்போ பாக்டீரியாவை பயன்படுத்தலாம். இவ்வாறு பாஸ்போ பாக்டீரியாவை மண்ணில் மேம்படுத்துவதால் பாஸ்பேட் உரம் விரயமாகாது தடுக்கப்படும்.

மண்வள அட்டையை உபயோகித்து பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பொட்டாஷ் உரம் உபயோகிக்க வேண்டும்.

தினமணி தகவல் – திரு. இரமணன், வேளாண் உதவி இயக்குநர், திருவண்ணாமலை