தொலைதூரக் கல்வியில் விவசாயம்!

விவசாயிகளுக்கு அனுபவப் படிப்போடு, சான்றிதழ் படிப்பும் தேவை எனும் நோக்கில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்கி வருகிறது.

விவசாயிகள், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாதவர்கள், சுயதொழில் தொடங்க முன்வருவோர், கிராம மகளிர், கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் ஆகியோருக்காக வேளாண் சார்ந்த பல்வேறு சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இதில் பருத்தி மற்றும் மக்காச்சோள வீரிய ஒட்டு விதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி, காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலைப் பயிர்களில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, திடக்கழிவுகளும் மண்புழு உரம் தயாரித்தலும், பண்ணைக் கருவிகள்-இயந்திரங்கள் பழுது பார்த்தலும் பராமரித்தலும், தென்னை சாகுபடி, அலங்காரத் தோட்டம் அமைத்தல், நவீன பாசன மேலாண்மை, நவீன களை மேலாண்மை, காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் தயாரித்தல், மலர் சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு, அங்கக வேளாண்மை போன்ற பாடங்கள்

நடத்தப்படுகின்றன.

இவற்றில் சேர்ந்து பயில 6-ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. 18 வயதுக்கு மேல் உள்ள எவரும் பயிலலாம்.

6 மாதங்களுக்கான இச்சான்றிதழ் படிப்புக்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு பாடத்தில் மட்டுமே சேர முடியும்.

நேர்முகப் பயிற்சி வகுப்புகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறன.

மேலும் விவரங்களுக்கு http://tnau.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வேலூர் மாவட்ட விவசாயிகள், இளைஞர்கள் பயனடையலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிஆர்ஒய்-3 ரக விதை நெல் பயிரிட விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி,​​ ஜூன் 28:​ நிகழாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டிஆர்ஒய்-3 ரக விதை நெல்லை பயிரிட விரும்பும் விவசாயிகள் அணுகலாம் என்றார் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஜி.​ கதிரேசன்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

“கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும்,​​ திருச்சி வேளாண்மைக் கல்லூரியும் இணைந்து “டிஆர்ஒய்-3′ என்ற புதிய ரக நெல்லை நிகழாண்டில் அறிமுகம் செய்துள்ளது.​​ ​ மற்ற ரக நெல்களைவிட இந்த ரக விதை நெல்லில் அமிலேஷ் அதிகமாகக் காணப்படுவதால் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தலாம்.​ சம்பா,​​ பின் சம்பா,​​ தாளடிக்கு இந்த ரக நெல் மிகவும் உகந்தது.​ 135 நாள் வயதுடைய இந்த நெல் நல்ல பயனைத் தரும்.

சாதாரண சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 5,835 கிலோ நெல் விளைச்சலும்,​​ செம்மை நெல் சாகுபடி மேற்கொண்டால் ஹெக்டேருக்கு 10,500 கிலோ நெல் விளைச்சலும் கிடைக்கும்.

களர் மற்றும் உவர் மண் பகுதிகளில் இந்த ரக விதை நெல்லைப் பயிரிட்டு பயனடையலாம்.​ மற்ற ரக நெல்களைவிட இவை 10.8 சதம் அதிக மகசூல் தரும்.​ அரிசி அரைவைத் திறன் 71.3 சதமாகும்.​ முழு அரிசி அரைவைத் திறன் 66 சதமாகும்.​​ ​ கடந்த 12 ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.​ ஆராய்ச்சி மையத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை சென்னை,​​ மதுரையில் உள்ள பிரபலமான இட்லி கடைகளில் கொடுத்து பரிசோதித்துப் பார்த்தோம்.

மற்ற ரக அரிசியைப் பயன்படுத்தி இட்லி தயாரிப்பதைவிட டிஆர்ஒய்-3 ரக அரிசியைப் பயன்படுத்துவதால் 10 சதம் கூடுதலான மென்மையாக இருப்பதாக அந்த உணவகங்களின் உரிமையாளர்கள் சான்று அளித்துள்ளனர்.

தற்போது காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த நெல்லை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்.​ டிஆர்ஒய்-3 ரக நெல் பயிரிட விரும்புவோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய வேளாண்மை அலுவலரைத் தொடர்புகொண்டு விதை நெல்லைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்றார் அவர்.

தென்னை மரம் ஏறும் கருவி

தென்னை மரம் ஏறும் கருவி கோவை விவசாய பல்கலையில் அண்மையில் செய்து காண்பிக்கப்பட்டது. அது குறித்த செய்திக்கு.

http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_fmp_harvesting_coconut_tree_climber_ta.html

சிறப்பியல்புகள்

  • தேங்காய்களைப் பறிப்பதற்கும் சுத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளுக்கும் தென்னை மரத்தில் ஏறுவதற்கு ஏற்றது பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இக்கருவியைக் கொண்டு தென்னை மரத்தில் ஏறலாம்.
  • 30 முதல் 40 அடி வரை உயரமுள்ள தென்னை மரத்தில் ஏற சுமார் 1.5 நிமிடங்கள் ஆகும்.

கருவியின் விலை : ரூ.2,000

செயல்திறன் : நாளொன்றுக்கு 50 முதல் 60 மரங்கள் வரை ஏறலாம்

கருவியை பயன்படுத்த செலவு : ஒரு மரத்திற்கு ரூ.150