ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறை – TNAU

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நெல்:

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இலைச் சுருட்டுப் புழுவிற்கு விளக்குப் பொறியும் வேப்பங்கொட்டைச் சாறும்:

இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெல் குலை நோய்க்கான முன்னறிவிப்பு:

தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

நிலக்கடலை:

இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003. தொலைபேசி: 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003. தொலைபேசி: 0422-6611226.

அனுமதி பெறாமல் பி.டி. கத்தரி ஆராய்ச்சி : தமிழ்நாடு வேளாண் பல்கலை, மான்சான்டோ மீது வழக்கு

மரபணு மாற்ற கத்தரிக்காய் உற்பத்திக்கான ஆராய்ச்சிக்கு, தொடர்புடைய எந்த துறையிடமும் அனுமதி பெறவில்லை என்பதற்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

மரபணு மாற்ற கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தபோது விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அப்போதைய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இதற்குத் தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த ரக கத்தரிக்காயால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைப் பற்றி அறியும் வரையில் இதை அனுமதிக்க வேண்டாம் என அப்போது அவர் அறிவித்தார். இதில் புதிய திருப்பமாக, விதைகளில் மரபணு மாற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது உரிய எந்த துறையிடமும் அனுமதி வாங்கவில்லை என்று தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விதி மீறலுக்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது என்று கடந்த ஜூன் 20-ம் தேதி தில்லியில் நடந்த அந்த ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு செய்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தின் தீர்மான விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

மான்சான்டோ மரபணு விதை ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய பிரிவான மேஹோ நிறுவனத்தின் மீதும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தார்வாரில் உள்ள வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மீதும் இந்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தரி விதையில் மரபணு மாற்ற ஆராய்ச்சி செய்வதற்காகக் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நான்கு கத்தரிக்காய் ரகங்களின் விதைகளை மான்சான்டோ நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறது.

பிறகு மரபணு மாற்றம் செய்ய விதைகளையும் இந்தப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. இந்த விவரங்களை, வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

இதேபோல கர்நாடகத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் 6 வகையான கத்தரிக்காய் விதைகளிலும் மான்சான்டோ நிறுவனம் ஆராய்ச்சி செய்து மரபணு மாற்றம் செய்திருக்கிறது. தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம், மாநில பல்லுயிர்ப்பெருக்க வாரியங்கள் மற்றும் பொருத்தமான உள்ளூர் பல்லுயிர்பெருக்க நிர்வாக குழுக்களின் அனுமதி எதையும் பெறாமலேயே இந்த ஆராய்ச்சிகளை மான்சான்டோ மேற்கொண்டிருப்பது சட்ட மீறல் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பாரம்பரிய விதைகளைப் பொருத்தவரை அரசுதான் அவற்றின் பாதுகாவலராக இருக்க வேண்டும். இருந்தாலும் அந்த விதைகளுக்கு அரசு உரிமையாளர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வணிகம், ஆராய்ச்சி மற்றும் வேறு வகையில் பல்லுயிர்ப்பெருக்க சூழ்நிலைகளைக் கையாள வேண்டியிருந்தால், பல தலைமுறைகளாக அதைப் பராமரித்து பாதுகாத்து வரும் உள்ளூர் சமூகத்தினரிடம் அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது சட்டமாகும் என துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மான்சான்டோ நிறுவனத்துக்கு 4 கத்தரி ரகங்களின் விதைகளை அனுப்பி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, “விதைகளின் உரிமையாளர்‘ என்று தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ளது. இதுவும் விதிகளை மீறிய செயல் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனமும், தார்வாட், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு சமயங்களில் வெளியிட்ட செய்திகளில், உரிய அனுமதியை தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி ஒருவரைக் கேட்டபோது ஆராய்ச்சி தொடங்கும்போது யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அதை வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வெளியிட முயற்சிக்கும் போது மத்திய அரசின் துறைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் தந்து அனுமதி பெற்றாக வேண்டும் என்றும் கூறினார். யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற நிலை இருந்தால், பல்லுயிர்ப்பெருக்க பாதுகாப்பில் உயர்ந்த அமைப்பான தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் எப்படி, “”அனுமதி பெறாதது குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது” என தீர்மானம் நிறைவேற்ற முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி செய்தி

உழவர்களுக்கு வேளாண் பல்கலை வழக்கும் இளநிலைப் பட்டம்

உழவர்களுக்கு இளநிலைப் பட்டம் (பி.எப்.டெக்)., படிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர்களுக்கென்று முதன் முதலாக துவங்கிஉள்ளது. உலகிலேயே இது ஒரு முன்னோடி திட்டம். பல்கலைக் கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோயம்புத்தூர்-641 003 மூலம் இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

 • இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பின் வழியாக உழவர்கள் சுயதொழில் முனைவராகலாம்.
 • அனுபவம் வாய்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படும்.
 • நிலத்தினை பண்படுத்துதல் முதல் அறுவடை வரையும் தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம்.
 • தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப் பயிற்சி வழியாக எளிய முறையில் நடத்தப்பட உள்ளது.
 • இப்பட்டப்படிப்பு எளியமுறையில் தமிழில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
 • பருவமுறையில் (செமஸ்டர் சிஸ்டம்) 3 ஆண்டுகளுக்கு 6 பருவங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

தகுதிகள்:

உலகிலேயே முதன்முறையாக வேளாண் மக்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 10ம் வகுப்பு படித்த 30 வயது நிரம்பிய அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். உழவர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் அறிவியல் அடிப்படையில் இப்பட்டப்படிப்பின்மூலம் அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு

இயக்குநர்,

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.
0422-661 1229, 94421 11047, 94421 11048,
மின்அ ஞ்சல்: odl@tnau.ac.in
இணையதளம்: www.tnau.ac.in.

தினமலர் தகவல் முனைவர் கு.சௌந்தரபாண்டியன்.

மிளகாய் வீரிய ஒட்டு

த.வே.ப.க. மிளகாய் வீரிய ஒட்டு கோ.1- சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ள ரகமாகும்.

 • எக்டருக்கு பச்சை மிளகாய் 28.1 டன்.
 • மிளகாய் வற்றல்-6.74 டன் கொடுக்கிறது.
 • இது என்.எஸ்.1701 ரகத்தைவிட பச்சைமிளகாய் 14.65 சதம், மிளகாய் வற்றல் 19.15 சதம் கூடுதல் மகசூலாகும்.
 • வயது-195-205 நாட்கள்.
 • பருவம்: ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர், ஜனவரி-பிப்ரவரி.
 • பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை.
 • அதிகபட்ச மகசூல்: 129.5 டன்/எக்டர் பச்சை மிளகாய், 34.67 டன்/எக்டர் வற்றல்.
 • சிறப்பியல்புகள்: செடிகள் நன்கு படர்ந்து வளரக் கூடியவை.
 • காய்கள் இளம்பச்சை நிறத்துடன் நுனி கூர்மையாகவும், 10.5-12 செ.மீ. நீளமாகவும் காணப்படும்.
 • காரத்தன்மை 0.58 சதம், ஓலியோரெசின் 14 சதமும் உள்ளது.
 • வைட்டமின் சி சத்து 120 மி.கி/ 100 கிராம்.
 • பழ அழுகல் நோய்க்கு மிக எதிர்ப்புத்திறன்.

புதிய ரக கத்தரி – வீ.ஆர்.எம்.1

புதிய ரக கத்தரி: த.வே.ப.கத்திரி வீ.ஆர்.எம்.1

தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கத்தரி வீ.ஆர். எம்.1 என்ற ரகம்.

 • எக்டருக்கு 40-45 டன் காய் மகசூல் கொடுக்கிறது.
 • இது பாலூர் 1 ரகத்தைவிட 27 சதம் கூடுதல் மகசூலாகும்.
 • வயது – 140-150 நாட்கள்,
 • பருவம்- ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை.
 • பயிரிட உகந்த மாவட்டங்கள்: வேலூர், திருவண்ணாமலை.
 • உருவாக்கம்: இலவம்பாடி கிராமத்திலிருந்து தனித்து தேர்ந்தெடுக்கப்பட்டது.
 • சிறப்பியல்புகள்: அதிக மகசூல், இலை, தண்டு, கத்தரிக்காயில் காம்புப்பகுதியில் முட்கள் உள்ளன.
 • கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடியது.
 • காய்கள் முட்டை வடிவமானவை.
 • ஊதா நிறக்காய்கள்.
 • முனையில் மட்டும் சிறிதளவு பச்சை நிறம் கொண்டவை.
 • இலைப்புள்ளி, வெர்டிசிலியம் வாடல் நோய் மற்றும் எப்பிலாக்னா வண்டுகள் தாக்குதலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

புதிய ரக தக்காளி

புதிய ரக த.வே.ப.க. தக்காளி – வீரிய ஒட்டு3-

இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 • எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது.
 • இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும்.
 • அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.
 • வயது – 145-150 நாட்கள்.
 • பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.

பயிரிட உகந்த மாவட்டங்கள்:

கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.

சிறப்பியல்புகள்:

அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது. இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.

செம்மை நெல் சாகுபடி: விழிப்புணர்வு ஏற்படுமா?

குறைந்த செலவும், குறைவான நீர்த் தேவையும்  கொண்ட செம்மை நெல் சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெற வேண்டுமென வேளாண் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும்.

பருவ நிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்து, லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகின. விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை உருவானது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்ற நிலையில், வரும் ஆண்டுகளில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்பதை அரசிடம் வேளாண் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வேளாண் துறையினர் நெல் பயிர் சாகுபடியில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் அறிமுகம் செய்யத் தலைப்பட்டனர்.

அதில், குறைந்த செலவும், குறைவான நீர்த் தேவையும் கொண்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செம்மை நெல் சாகுபடி முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை, விவசாயிகளின் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

கடந்த 1960-களில் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி டி லலானோ எஸ்.ஆர்.ஐ.  என்ற செம்மை நெல் சாகுபடி முறையைக் கண்டுபிடித்தார்.

நடைமுறை நெல் சாகுபடி முறையிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக் கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும், ஒவ்வொரு முறையிலும் முற்றிலும் மாறுபட்ட நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தச் சாகுபடி குறித்த கோட்பாடுகள் கடந்த 2001 முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழக விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

மாநில அளவில் கடந்த ஆண்டு 7.5 லட்சம் ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டது, நிகழாண்டில் 8.5 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

இதில், குறைந்த நீராதாரம் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏறத்தாழ 90 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி பரப்பு உள்ள நிலையில், அதில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையை விவசாயிகள் மேற்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரப்பளவை மேலும் அதிகரிப்பது என்பது விவசாயிகள் இதுகுறித்த விழிப்புணர்வைப் பெறுவதைப் பொருத்தே அமையும் என்கின்றனர் வேளாண் ஆர்வலர்கள்.