விதை நெல் பராமரிக்க ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் நெல் விதைப் பண்ணை வயல்களில் பயிர்கள் சாயந்ததாலும், நெல் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் மணிகளின் நிறம் பழுப்பாகிக் காணப்படுகிறது.

வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சாய்ந்திருந்தால் விதை நெல்லுக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. சம்ப பருவத்தில் 600 ஹெக்டேரில் நெல் விதைப் பண்ணைகள் அமைத்து சான்று விதை பெற்றிட பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பருவத்தில் சம்பா மசூரி, அம்பை 16, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, கோ 43, கோ (ஆர்) 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி மற்றும் நீண்டகால ரகமான சாவித்திரி ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விதை தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்:

வயல்களில் 2 அங்குல உயரத்துக்குக் குறைவாகத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன் தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட வேணடும். நெல் கதிர்களில் 90 சதம் மணிகள் வைக்கோலின் நிறத்தில் இருந்தால் அது அறுவடைக்கு ஏற்ற தருணம்.

தக்க தருணத்துக்கு முன்னரே அறுவடை செய்து உலர வைக்கும் போது, விதைகள் சுருங்கி சிறுத்து விடுவதுடன் முளைப்புத் திறனும் குறைந்து விடும்.

காலம் கடந்து அறுவடை செய்தால் விதைகளின் நிறம் பனி விழுந்து மங்கி விடுவதுடன் பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகும். புயல் பாதித்த கதிரில் மகரந்தச் சேர்க்கை பாதிப்பால் பதர் அதிகமாக இருக்கும்.

எனவே அறுவடை செய்த குவியல்களை இயந்திரத்தினாலோ, பணியாளர்களைக் கொண்டோ பதர் முழுவதும் போகும் அளவுக்குத் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும். பிரித்து எடுத்த விதைகளை சில நாள்கள் குவித்து வைத்தால், விதைகள் சூடேறி, முளைப்புத்திறன் குறையும். எனவே பிரித்தெடுத்த விதைகளை உடனே உலர வைக்க வேண்டும்.

கதிர் அறுவடை செய்யும் இயந்திரங்களை ஒரு ரகத்துக்கு பயன்படுத்தி விட்டு, வேறு ரகத்துக்கு மாற்றும் போது, இயந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் மற்ற ரகக் கலப்பினால் விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.

விதை நெல்லின் ஈரப்பதம் 13 சதம் இருக்குமாறு காயவைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கோணிப்பைகளில் நிரப்பி அனுப்ப வேண்டும். விதை மூட்டைகளை மரக்கட்டை அட்டகம் அல்லது, தார்ப்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும்.

வெறும் தரை அல்லது சுவர் மீது சாய்த்து அடுக்கினால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும். விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து தரமான விதை நெல்லை உற்பத்தி செய்யலாம்.

தினமணி செய்தி
விதைச்சான்று உதவி இயக்குநர் ஹரிதாஸ். கடலூர் மாவட்ட வேளாண் துறை

பாரம்பரிய விதை நேர்த்தி (பொது)

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும்,​​ அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள்,​​ பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும்,​​ நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.​ இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,​​ அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இயற்கை விதை நேர்த்தி முறை:​

விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஆட்டூட்டக்கரைசல் ​(ஆட்டுப்புழுக்கை,​​ ஆட்டு சிறுநீர்,​​ ஆட்டுப்பால்,​​ ஆட்டுத்தயிர்,​​ வாழைப்பழம்,​​ இளநீர்,​​ கடலைப் பிண்ணாக்கு,​​ கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை)​ அல்லது பஞ்சகவ்யா கலவையை ​(சாணம்,​​ மாட்டு சிறுநீர்,​​ பால்,​​ தயிர்,​​ நாட்டுச்சர்க்கரை,​​ வாழைப்பழம்,​​ கரும்புச்சாறு,​​ கள்,​​ ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு)​ 300 மில்லி கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.

இயற்கை விதை நேர்த்தி முறையில் விதைகளை ஆட்டூட்டக் கரைசலுடன் ஊற வைத்து ​ பதப்படுத்தும் விவசாயி.

இயற்கை விதை நேர்த்தி முறையில் விதைகளை ஆட்டூட்டக் கரைசலுடன் ஊற வைத்து பதப்படுத்தும் விவசாயி.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.​

இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.​ இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும்.​ அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும்.​ பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும்,​​ பூச்சிகள்,​​ நோய் தாக்குதல்கள் இருக்காது.

அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம்.​ இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும்,​​ நோயும் தாக்காது.​ முனைப்புத் திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

பிற பயன்கள்:​​

நெல்,​​ தக்காளி நாற்றுகளை,​​ வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம்,​​ வைரஸ் மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.​ குறைந்த செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.​

மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடியும்.​ எனவே தமிழக விவசாயிகள் இயற்கை விதை நேர்த்தி வாயிலாக அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவின் தெரிவித்துள்ளார்.

தகவல் – தினமணி

பாரம்பரிய நெல் விதைநேர்த்தி

ஒரு செண்ட் நிலத்தில் நடவு செய்வதற்குத் தேவையான நாற்றை உற்பத்தி செய்ய 9 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள இடமும் 150 கிராம் விதை நெல்லும் போதும். நிலத்தில் தண்ணீர் விட்டு மண்ணை சேறாக மாற்றிக் கொள்ள வேண்டும். 120 மில்லி தண்ணீர் 30 மில்லி மாட்டுச் சிறுநீர் இரண்டும் கலந்த கரைசலில் 150 கிராம் விதை நெல்லை ஊறவைத்து எடுத்து மூன்றாம் கொம்பு வைக்கவேண்டும். முளை விட்டுள்ள இந்த விதைகளைக் கொண்டு நாற்றங்காலில் தெளிக்க வேண்டும் பிறகு ரகத்தின் வயதைப் பொறுத்து 14 முதல் 18 நாள் வயதுடைய நாற்றைப் பறித்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்வதற்குத் தேவையான நிலம் தயாரிப்பு, இடுபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களைத் தனித்தனியாக ஒவ்வொரு செண்ட் நிலத்துக்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்வது சற்று சிரமமானதாக இருக்கும் என்பதால் இங்கே ஒரு ஏக்கர் நிலத்தைக் கணக்கில் கொண்டே அளவுகள் அனைத்தும் தரப்படுகின்றன.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 டன் தொழுஉரத்தைக் கொட்டி களைத்துவிட்டு பின்னர் களைகள் இல்லாமல் நன்றாக உழவு செய்து சேறாக மாற்றிக்கொள்ளவேண்டும். நிலத்தில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு செண்ட் அளவிற்குப் பிரித்து, சிறிய வரப்பு அமைத்துக் கொண்டு, மார்க்கர் குறியீட்டுக் கருவியை உருட்டி குறியிடப்பட்ட இடத்தில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் (ஒற்றை நாற்று நடவு முறை) நடவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 24 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாக இடவேண்டும். அதிக உயரம் வளரும் ரகமாக இருப்பின் கடலைப் புண்ணாக்கைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளவும்

பூச்சியை விரட்டும் புண்ணாக்குக் கரைசல்
ரோட்டரி வீடர் கருவி கொண்டு 9, 18 மற்றும் 24ஆம் நாளில் களை எடுக்கவேண்டும். 14 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்து விடவேண்டும். 35ஆம் நாளில் தேவைப்பட்டால் ஏற்கனவே கொடுத்த அளவில் புண்ணாக்குகளைக் கொடுக்கலாம். கதிர் வருவதற்கு முன்பு 6 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு 6 கிலோ புங்கம் புண்ணாக்கு இரண்டையும் 12 கிலோ மணலுடன் கலந்து  தூவ வேண்டும். பூச்சித் தாக்குதலைக்குறைப்பதற்கு 14 நாட்களுக்கு ஒரு தடவை வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளிக்க வேண்டும். 100லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை 24 மணிநேரம் ஊறவைத்தால் புண்ணாக்கு கரைசல் தயார். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் அளவுள்ள ஒரு டேங்கில் எட்டு லிட்டர் வேப்பம் புண்ணாக்கு கரைசல் மற்றும் 2 லிட்ட்ர் மாட்டுச் சிறுநீர் இரண்டையும் ஊற்றிக் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்த முறையில் சாகுபடி செய்யும்போது தூருக்கு 85 சிம்புகளும் சிம்புக்கு 250 முதல் 400 நெல்மணிகளும் இருக்கும். கதிர் பழுத்த பிறகு கடைசி இரண்டு வாரம் தண்ணீர் இல்லாமல் நிலத்தைக் காயப் போடவேண்டும். உப்புத் தன்மையுள்ள நிலததில் ஒற்றை நாற்று நடவு முறை மேற்கொண்டால் 14 நாட்கள் முன்னதாகவே அறுவடை செய்யலாம்.

அறுவடை செய்த நெல் ரகங்களைத் தனியாகக் காயவைக்க வேண்டும். வேப்பம்புண்ணாக்குக் கரைசலில் முக்கி எடுத்து உலர வைத்த சணல் சாக்கில் இந்த நெல்லைச் சேமித்து வைக்கவேண்டும்.

இதன்படி செய்தால் ஒரு செண்ட் நிலத்தில் 27 முதல் 32 கிலோ வரைக்கும் நெல் மகசூலா கிடைக்கும். ஒரு ஏக்கருக்குக் கணக்குப் போட்டா 60 கிலோ மூட்டையில் குறைந்த பட்சம் 45 மூட்டை வரைக்கும் கிடைக்கும்

தொடர்புக்கு – மோகன்ராஜ், 94430 14897
நன்றி – பசுமை விகடன் கட்டுரை

கொத்தமல்லி பயிரிடும் முறை

கொத்தமல்லி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதற்கும், சிறந்த மருத்துவ குணமுள்ள பயிராகவும் உள்ள கொத்தமல்லியை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

மக்களின் அன்றாட சமையல் தேவையில் முக்கிய பங்கு வகிப்பது கொத்தமல்லி. சில மாதங்களாக மார்க்கெட்டில் கொத்தமல்லிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. 400 கிராம் எடை கொண்ட ஒரு கொத்தமல்லி கட்டு ரூ. 15 முதல் ரூ.60 வரை நாளுக்கு ஒரு விலை விற்கிறது. விவசாயிகள் முறையாக கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் கொழிக்கலாம்.

கொத்தமல்லி எல்லா பருவத்துக்கும் ஏற்ற சாகுபடி தன்மை கொண்டது. தாமதமாக பூத்து அதிக மகசூலை தரக்கூடியது. செடியின் அடி பாகத்தில் இருந்து அதிக அளவு தூர் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிக கிளைகளை கொண்டிருப்பதால் பூப்பதற்கு முன்னதாகவே அறுவடைக்கும் ஏற்றதாக உள்ளது. செடிகள் பூத்த பின்னும் பக்கக் கிளைகளில் உள்ள இலைகள் சமையலுக்கு பயன்படுகிறது.

ஒரே முறையாக ஏக்கர் கணக்கில் பயிரிடாமல் 20 முதல் 25 சென்ட் வரை பிரித்து 15 தினங்களுக்கு ஒரு முறை விதைத்தால் ஆண்டுதோறும் அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும். விதைத்த 30 முதல் 40 நாளில் அறுவடைக்கு தயாராவதால் குறுகிய கால பணப் பயிராகவும் கொத்தமல்லி கருதப்படுகிறது.

பருவம்:

மருத்துவ குணத்துக்காக பயிரிட்டால் ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றதாகும்.

சமையல் தேவைக்காக பயிரிடுவதென்றால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ விதைகள் விதைக்க வேண்டும்.

மண் வகை:

மணல் சார்ந்த செம்மண், வண்டல் மண் உகந்ததாகும்.

விதைப்பு:

பொதுவாக விதை தூவி சாகுபடி செய்யலாம். இருப்பினும் மேட்டுக்கால் பாத்தி அமைத்து 20 செ.மீ. ஷ் 15 செ.மீ. இடைவெளி விட்டு அந்த இடைவெளியில் உடைக்கப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 8 முதல் 15 தினங்களில் முளைக்கத் தொடங்கும்.

விதை நேர்த்தி:

மானாவாரி பயிருக்கு பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்னும் வேதிப்பொருளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கரைத்து விதையை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பாஸ்போ பேக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரங்கள் 600 கிராம் என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கான விதைகளுக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல் (அடி உரம்):

தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டன், தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ இட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ, பொட்டாஷ் 33 கிலோ இடவேண்டும்.

மேலுரம்:

10 கிலோ தழைச்சத்து மற்றும் 22 கிலோ யூரியா விதைத்த 30 நாளில் இட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

விதைத்த உடன் 1 முறை, விதைத்து 3 நாளில் ஒரு முறை அதை தொடர்ந்து 7 முதல் 10 நாள்கள் வரை நீர்பாசனம் செய்ய வேண்டும்.

களைக்கொல்லி இடுதல்:

ப்ளூகுளோரிலின் 700 மில்லி லிட்டர் அளவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இட வேண்டும். விதைத்த 30 நாளில் ஒரு குத்துக்கு 2 செடிகளை விட்டு விட்டு மீதமுள்ள செடிகளை பிடுங்க வேண்டும்.

இதுபோன்ற முறைப்படி, விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக் கலை அலுவலர் பாபுவை 94442 27095 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி தகவல்

குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு

தண்ணீர் வசதியுடன் கூடிய புஞ்செய் நிலங்களில் பொருளாதார ரீதியாக அதிக வருமானத்தை தரக்கூடிய வீரிய ஒட்டுரக

 • கத்திரி
 • வெண்டை
 • தக்காளி
 • மிளகாய்
 • பிரெஞ்ச் பீன்ஸ்
 • முட்டைகோஸ்
 • காலிபிளவர்

போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவது அவசியமானது என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

குறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, வெண்டை பயிர்களில் விவசாயிகள் வழக்கமாக சாகுபடி செய்யும் உள்ளூர் ரகங்களை தவிர்த்து வீரிய ஒட்டுரக காய்கறிகளின் விதைகளை பயிரிடுவதால் கூடுதலாக மகசூல் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட நிழல்வலை கூடாரங்களிலோ அல்லது சூரிய வெளிச்சத்துடன் கூடிய சிறிய நிழல் கொட்டகைகள் அமைத்தோ அவைகளில் குழித்தட்டு முறையில் நாற்றுக்களை பராமரித்து பருவநிலை காரணமாக நாற்றுக்களுக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்த்து வாளிப்பான காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து பயன் பெறலாம்.

நாற்றங்கால்களை குழித்தட்டு முறையில் பராமரிப்பது எப்படி என்பது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முனைவர் க. வீராசாமி கூறியது:

 • குழித்தட்டுகளை தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், மணல் மூலம் தயார் செய்த கலவை கொண்டு நிரப்ப வேண்டும்.
 • தென்னை நார்க்கழிவு குழி நிரப்பு பொருள் நிரப்பிய 10 தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 • ஒவ்வொரு குழியிலும் 0.5 செ.மீ. ஆழத்துக்கு சுண்டு விரல் மூலம் குழி ஏற்படுத்தி தட்டுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.
 • ஒவ்வொரு குழிக்கும் ஒரு விதை வீதம் விதைப்பு செய்து செடி வளர்பொருள் (தென்னை நார்க்கழிவு) கொண்டு மூட வேண்டும்.
 • தென்னை நார்க்கழிவினை 300, 400 சதவீத ஈரப்பத நிலையில் உபயோகிக்கும்போது தட்டுக்களுக்கு விதைப்புக்கு முன்பாகவும், பின்னரும் நீர்பாய்ச்ச தேவையில்லை.
 • விதைப்பு செய்த தட்டுகளை 10 தட்டுகள் கொண்ட அடுக்குகளாக ஒன்றன் மீது ஒன்றாக பயிறுக்கேற்றவாறு 3 முதல் 6 நாள்களுக்கு அடுக்கி வைத்து அவற்றின் மேல் பாலித்தீன் தாள் கொண்டு காற்றோட்டமாக மூட வேண்டும். இது தட்டுகளில் உள்ள ஈரப்பதத்தை விதைகள் முளைக்கும் வரை நிலை நிறுத்துகிறது. விதைகள் முளைத்தவுடன் செடிகள் வளைந்து போவதைத் தவிர்க்க முளைப்பு கண்டுள்ள தட்டுகளை நிழல் வலைக் கூடாரங்களுக்கு மாற்றி சிறு வலைக் கூடாரங்களில் பாலித்தீன் தாள் மூடாக்கு அமைத்து பராமரிக்க வேண்டும்.

பராமரிப்பு

தினமும் தட்டுகளில் உள்ள ஈரப்பத நிலைக்கு ஏற்றவாறு பூவாளி மூலம் தட்டுகளுக்கு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கவும், பயிர்சத்துகள் கரைந்து வீணாவதை தவிர்க்க அதிக நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.

முளைப்பு கண்டுள்ள தட்டுகளுக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 0.2 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதம் மருந்து கொண்டு பயிர் பாதுகாப்பு செய்து நாற்றுகள் மடிவதை தவிர்க்கவும்.

நாற்றுகள் வெளுப்பாக தென்பட்டால் 19:19:19 நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் (சிறிய டீ ஸ்பூன் அளவு) என்ற அளவில் கலந்து நாற்றுவிட்ட 12 மற்றும் 20-ம் நாள்களில் நாற்றுகளின் மேல் தெளிப்பு செய்து வாளிப்பான நாற்றுக்களாக பராமரிக்கலாம்.

நாற்றுக்களை மழையிலிருந்து பாதுகாக்க, சிறுவலைக் கூடாரங்களை அமைத்து அவைகளின் மேல் பாலித்தீன் மூடாக்கு அமைத்து பராமரிக்கலாம். நடவுக்கு முன்பாக நிழல் மற்றும் நீர்ப்பாசன அளவை குறைத்து நாற்றுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

விதைகள் முளைத்த 7, 10 நாள்களில் இமிடாகுளோபிரிட் மருந்து லிட்டருக்கு 0.2 மி.லி. வீதம் நீரில் கலந்து தெளிக்கவும். பின்னர் நடவுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தெளித்தும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என்றார் வீராசாமி.

தினமணி தகவல்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி: ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல்

செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என  தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.

நாற்றங்கால் முறை:

மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.  பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.

விதை அளவு:

நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.

விதை நேர்த்தி:

விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.

நடவு வயல்:

சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும். 60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.

புள்ளியிட்ட அழுகல் வைரஸ்:

10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

அறுவடை:

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை மற்றும் முரளிதரன் ஆகியோரை 9444339404, 9894540420 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியம்.

தினமணி தகவல் – கோ.வி.ராமசுப்பிரமணியன், தலைவர், திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்

சம்பா பருவ நெல் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வடகிழக்கு பருவமலை பின்தங்கியதாலும் நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வயதுடைய ஏடிடீ 39, டீலக்ஸ் பொன்னி (பீபிடி 5204), கோ 43 மற்றும் திருச்சி 1, நெல் ரகங்கள் நாற்றங்கால் அமைக்கப்பட்டு 40 நாட்கள் வரை தாண்டிய நிலையில் இன்று வரை நடவு செய்ய முடியவில்லை. மேலும் நிலக்கொதிப்பின் காரணமாக நாற்றுகள் வெளுத்தும் கருகியும் காணப்படுகின்றன.  எனவே 30 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை மட்டும் பராமரித்து நடவு மேற்கொள்ளலாம். 30 நாள் வயதை தாண்டிய நாற்றுக்களை நடுவதால் சரியாக தூர்கள் பிடிக்காது. சீராக விளையாது. எனவே மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். எனவே பின்தங்கி வரக்கூடிய பருவமழையை பயன்படுத்தி சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்ய இனி குறுகிய கால ரகங்களான ஏடிடீ 43 ( செல்லப்பொன்னி), ஏடிடீ 45, ஏஎஸ்டி16 (பால் ஒட்டு) போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.

இந்த ரகங்களும் குலை நோய் தாக்குதலுக்கு உட்படுவதால் குலை நோய் வராமல் தடுக்க விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் பழுப்பு இலைப்புள்ளி நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், ஊதுபத்தி நோய், நெல்மணி நிறமாற்ற நோய் என பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து சாதகமான சூழ்நிலையில்  நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.

கட்டுப்படுத்துவது எப்படி…?:

நெல் விதைகளை ஊற வைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்தவுடன் நீரில் ஊற வைக்க வேண்டும். சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன்டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப் பெயர்: பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பின்னர் வழக்கம்போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும். மேலும் வயதான (30 நாட்கள்) நாற்றுக்களை நடும்போது வரிசை நடவு முறையில் (20 செ.மீ., து 10 செ.மீ.,) நெருக்கி நட வேண்டும்.

வயதான நாற்றுக்கள் நடுவதால் ஏற்படும் குறைவான சிம்புகள் பிடிப்பது இதனால் சரிகட்டப்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது ஏஎஸ்டி 16 (அம்பை 16 என்ற பால் ஒட்டு நெல்) ஆதாரநிலை நெல் விற்பனைக்கு உள்ளது. ஒரு கிலோ விதையின் விலை ரூ.20 ஆகும். எனவே தேவைப்படும் விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி விதையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தினமலர் தகவல் : டாக்டர் அ.ராமலிங்கம், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125

HTTP Status 404 – /final/egLogin.jsp


type Status report

message /final/egLogin.jsp

description The requested resource (/final/egLogin.jsp) is not available.