காரீப் பருவத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவனத்துக்கு…

First Published : 26 Jun 2010 10:46:33 AM IST

சங்ககிரி, ஜூன் 25: காரீப் பருவத்தில் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் வானிலை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய தவணை செலுத்தி சேர சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குநர் ப.சௌந்திரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

காரீப் பருவத்தில் சாகுபடியாகும் கார் நெல், சம்பா நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் வானிலை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம் நிர்ணயித்துள்ள இறுதி தேதிக்குள் விருப்பமுள்ள கடன்பெறா விவசாயிகள் உரிய தவணை செலுத்தி சேர வேண்டும்.

வானிலை பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது பயிர் சாகுபடி பருவத்தில் காலத்தில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களான குறைந்த வெப்பநிலை, அதிகபட்ச வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், குறைந்த மழை, கூடுதல் மழை, மழையின்மை ஆகிய காரணங்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணமாக அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் காரீப் பருவத்தில் பயிரிடப்படும் உளுந்து, பாசிப்பயறு, துவரை போன்ற பயறுவகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம், மரவள்ளி, காய்கறிப் பயிர்கள், மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு ஜூலை 5ம் தேதியும், பருத்தி, வாழை ஆகிய பயிர்களுக்கு ஜூலை 31ம் தேதியும், சம்பா நெல்லுக்கு ஜூலை 10ம் தேதியும் தவணை செலுத்த இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் சேரும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, துவரை போன்ற பயறுவகைகள் மற்றும் ராகி, சோளம் ஆகிய பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.138ம்,  கம்பு பயிருக்கு ரூ.193ம், சம்பா நெல்லுக்கு ரூ.221ம், எள் சூரியகாந்தி பயிர்களுக்கு ரூ.232ம், மக்காச்சோளத்திற்கு ரூ.276ம், நிலக்கடலைக்கு ரூ.386ம், மானாவாரிப் பருத்திக்கு ரூ.529ம், இறவை பருத்திக்கு ரூ.827ம், மரவள்ளிக்கு ரூ.794ம், காய்கறிப் பயிர்களுக்கு  ரூ.927ம், மஞ்சளுக்கு ரூ.993, வாழைக்கு ரூ.2647ம் தவணையாக செலுத்த வேண்டும். கடன்பெறும் விவசாயிகள் இத்திட்டத்தில் கட்டாய அடிப்படையிலும், கடன் பெறா விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும் சேர முடியும்.

ஒவ்வொரு விவசாயியும் அவரது பெயரிலேயே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம்.  தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கி, வர்த்தக வங்கி ஆகியவற்றை அணுகி இத்திட்டத்திற்கான முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து தவணை தொகையை செலுத்தலாம்.

காரீப் பருவ பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளில் விருப்பமுள்ளவர்கள் உரிய காலத்திற்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.