மிளகாய் – உயர் விளைச்சல் வேண்டுமா?

மிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 • கோ-1,
 • கோ-2,
 • கே-1,
 • கே-2,
 • எம்.டி.யு.-1,
 • பி.கே.எம்.-1,
 • பாலூர்-1

ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

Bird Chillis

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது காப்டான் 2 கிராம் என்ற அளவில் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதம் வரை குறைக்கலாம்.

குழித்தட்டு முறையில் நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நாற்றுகளைப் பெறலாம். நோய், பூச்சி தாக்குதல் இல்லாத நாற்றுகளைப் பெறுவதற்கும் சிறந்த வழியாக இருக்கும். அடியுரமாக தொழு உரம் 25 டன், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 20 கிலோ இட வேண்டும். மேல் உரமாக 30 கிலோ யூரியாவை முறையே 30, 60, 90ஆவது நாள்களில் இட வேண்டும்.

green Chilli

பயிர் ஊக்கிகள்

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும், நட்ட 60 அல்லது விதைத்த 100-ஆவது நாளில் ஒரு முறையும், மேலும் 30 நாள்களுக்குப் பிறகு ஒரு முறையும் ஒரு லிட்டர் தண்ணீரில் டிரையகான்டினால் (1.25 மி.லி.) கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நட்ட 15ஆம் நாள் முதல் ஒரு லிட்டர் தண்ணீரில் மீத்தைல் டெமான் (2 மி.லி.) கலந்து 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகம் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

காய் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் மிளகாயில் உயர் விளைச்சலும், கூடுதல் லாபமும் பெறலாம்.

logo.png

தர்பூசணி சாகுபடி முறைகள்!

தகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக திகழ்கிறது தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த இத் தர்பூசணி நிறைய மருத்துவப் பயன்களையும் கொண்டுள்ளது. சிட்ரல்லூஸ் லனாடஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள தர்பூசணி குர்குபிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது.

kodaisirappupathivuரகங்கள்:

 • பி.கே.எம். 1,
 • சுகர்பேபி,
 • அர்காமானிக்,
 • டிராகன் கிங்,
 • அர்கா ஜோதி,
 • அர்கா ஜஸ்வர்யா,
 • அம்ருத் அபூர்வா,
 • பூசா பெடானா,
 • புக்கிசா,
 • மைதிலா (மஞ்சள்),
 • தேவயானி (ஆரஞ்சு)

ஆகிய தர்பூசணி ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
அங்ககச் சத்து நிறைந்த, வடிகால் வசதியுள்ள, 6.5 முதல் 7.5 வரைய கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் தர்பூசணிக்கு ஏற்றது. ஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி செய்யலாம். நன்கு உழுது எட்டு அடி அகலப்பார் அமைத்து, பார்களுக்கிடையில் கால்வாய் பிடிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். கால்வாயை ஒட்டி மூன்று அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். குத்துக்கு இரண்டு செடி இருக்குமாறு, விதைத்த 15ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.

விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது, நீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெற உதவும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து தரவல்ல 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

விதைத்த 30ஆம் நாள் 22 கிலோ தழைச்சத்து தரவல்ல 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். எத்தரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மி.லி. அளவில் கலந்து, விதைத்த 15ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒருமுறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

Watermelon field

பயிர்ப் பாதுகாப்பு: வண்டுகளை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 500 ஈ.சி. தெளித்து கட்டுப்படுத்தலாம். நன்கு உழவு செய்து பழ ஈயில் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

இப்பழ ஈயின் தாக்குதல், வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கருவாட்டுப் பொறி: ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சு வைத்து கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

20 நாள்களுக்கு ஒரு முறை நனைந்த கருவாடும், வாரத்திற்கு ஒரு முறை டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சும் மாற்ற வேண்டும்.

லிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் தாவரநச்சாகப் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.

120 நாள்களில் ஏக்கருக்கு 15 டன் மகசூல் எடுக்கலாம். எனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து,  தர்பூசணியை சாகுபடி செய்து, சமுதாயத்திற்கு உதவுவதுடன் உயர் மகசூலும் உன்னத லாபமும் பெறலாம் என்றார் அவர்.

– சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன்

logo.png

குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்: மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி

மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டத்தில் டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

எள்

எள்

டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

விதை நேர்த்தி:

ஏக்கருக்கு 2 கிலோ விதையினை 1.5 லிட்டர் நீரில் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாத்திரத்தினை மூடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை விதையை நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் எஞ்சியுள்ள நீரை வடிகட்டிவிட்டு, நிழலில் சாக்குகளை விரித்து விதைகளை உலர்த்தி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிட்டு 15 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த விதையுடன் 8 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான உரத்தை கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

விதைப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பூஞ்சான விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையுடன், உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் ஆடையினை நீக்கிவிட்டு இதில் மேற்குறிப்பிட்ட 2 பொட்டலங்களையும் நன்கு கலக்க வேண்டும். இக்கலவையினை விதையுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலம் தயார் செய்தல்:

நிலத்தினை ஏர் கலப்பை கொண்டு 5 முதல் 6 முறை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அவசியம் இடவேண்டும். மேலும் தேவையான அடியுரம், 80 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.

விதைப்பு:

விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணலை கலந்து சீராக குறுக்கும் நெடுக்குமாக விதைக்க வேண்டும்.

விதைத்தபின் படல் கொண்டு இழுத்து விதைகளை மூடவேண்டும். பின்னர் சரிவின் குறுக்கே வாய்க்கால்களும், பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளும் அமைக்க வேண்டும். எள் பயிருக்கு உரமிடுதல் மிக அவசியமானது.

உரமிடுதல்:

மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையறிந்து உரமிடுவதால் மட்டுமே உரச்செலவை குறைத்து உர விரயத்தை தவிர்த்து, உயர் மகசூல் பெற இயலும். மண் பரிசோதனை மேற்கொள்ள இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை இடலாம்.

களை மேலாண்மை:

விதைத்த முதல் 30 நாள்களுக்கு களையின்றி வயலை பராமரிப்பதால் மட்டுமே கால் பங்கு மகசூல் கூடுதலாகப் பெறலாம். விதைத்த 3ஆம் நாள் தண்ணீர் பாய்ச்சியவுடன் மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்கும் போது ஏக்கருக்கு 1.6 லிட்டர் ஆலாகுளோர் என்னும் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்து களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 20ஆம் நாள் நீர்ப் பாய்ச்சி மேலுரமிட்டு பயிர் கலைத்தலை மேற்கொள்ளும்பொழுது, இருக்கும் களைகளை எடுத்துவிடவேண்டும்.

நீர்ப் பாசனம்:

பொதுவாக மாலை 5 மணியளவில் செடி வாட்டமாகக் காணப்பட்டால் உடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மாசிப்பட்ட எள் சாகுபடியைப் பொறுத்தவரை 5 நீர்ப்பாசனங்கள் தேவைப்படும். இவை முறையே, விதைத்த முதல் நாள், 20-25ஆம் நாள், 35-40ஆம் நாள், 50-55ஆம் நாள் மற்றும் 65ஆம் நாள் ஆகும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தினை 12 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய 2 கிலோ டிஏபி கரைசலுடன் 200 லிட்டர் நல்ல தண்ணீர் கலந்து விதைத்த 25, 45 மற்றும் 60ஆம் நாள்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் தன்மை அதிகமாகும்.

பயிர் பாதுகாப்பு:

எள் பயிரை கொண்டைப்புழு, எள் குடையான், எள் காய் ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை தாக்கி சேதம் விளைவிக்கும். மேலும் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் போன்றவையும் எள் பயிரை தாக்கும்.

இறவை எள்பயிரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படத் தொடங்கியவுடன் பொருளாதார சேத நிலையினை கணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாள்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.

பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் உடன் அருகிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மையங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஒட்டுண்ணியினை இலவசமாகப் பெற்று கட்டுப்படுத்தலாம்.

அறுவடை:

ரகத்தைப் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும். தண்டு மஞ்சள் நிறமாக மாறுவதும் கீழ்பகுதியிலிருந்து எட்டாவது காய்களில் உள்ள விதைகள் நிறம் மாறத் துவங்குவதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அறுவடை செய்யப்பட்ட செடியின் முன்பகுதி உட்புறமாகவும், அடிப்பகுதி வெளிப்புறமாகவும் உள்ளவாறு வட்ட வடிவமாக செடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வர வேண்டும். இவ்வாறு அடுக்கும்போது, வேப்பங்கொட்டைத்தூளை தூவி வருவதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம். பின்னர், வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.

போரினை 3 நாள்களுக்குப்பின் பிரித்து செடிகளை உதறி, கிடைக்கும் எள்ளை தனியாக சேகரிக்க வேண்டும். பின்னர், செடிகளை வெயிலில் உலர்த்தி அடுத்த 2 நாள்களுக்கு உலுக்கி கிடைக்கும் எள்ளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். இவ்விதைகளை தனித்தனியாக 7 முதல் 8 சதவீத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் எள் சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம் என்றனர்.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

dn

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் முனைவர் முரு. ராமநாதன், பேராசிரியர் சு. ராஜேந்திரன்

உர நிறுவனங்களின் தன்னலமும் பாழாகும் விளைநிலங்களும் – தினமணி

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.

உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.

ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.

உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.

இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்!

தினமணி தலையங்கம் 23 Aug 2011

குருணை வடிவ யூரியாவை பயன்படுத்த வேண்டும்: வேளாண் அதிகாரி யோசனை

குருணை வடிவ யூரியாவை பயிர்களுக்கு இடும்போது, பயிர் பச்சை பிடிப்பது, சிறிது காலதாமதம் ஆவதால் குருணை வடிவ யூரியாவை விட சாதாரண யூரியாவையே அதிக அளவில் விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால் குருணை வடிவ யூரியாவில்தான் அதிக பலன் உள்ளது.

நன்மைகள்

 • இரண்டு வகையான யூரியாவிலும் 46 சதம்தான் தழைச்சத்து உள்ளது. குருணை வடிவ யூரியாவில் உள்ள தழைச்சத்து மிகவும் மெதுவாகவும், சீராகவும் நீண்ட நாள்கள் பயிர்களுக்கு கிடைக்கிறது. இதனால் பயிர் நீண்ட நாள்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும். இதனால் தழைச்சத்து பயன்படுத்தும் அளவும் குறைகிறது.
 • சாதாரண யூரியாவை மண்ணில் இடும்போது உடனே கரைவதால் தழைச்சத்து நீரின் மூலமாகவும் ஆவியாதல் மூலமாகவும் வீணாகிறது.  குருணை வடிவ யூரியாவை பயிர்களுக்கு இடும்போது தழைச்சத்து வீணாகாமல் பயிர்களுக்கு கிடைக்கிறது.
 • யூரியா குருணை வடிவில் இருப்பதால் பயிர்களுக்கு தெளிப்பது மிகவும் எளிதானது. குருணை வடிவ யூரியாவில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் கட்டியாவது இல்லை. திறந்து வைத்திருக்கும் நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாறுவதும் இல்லை.
 • குருணை வடிவ யூரியாவை சேமிப்பதற்கும் உபயோகிப்பதற்கும் எந்தவித சிரமமும் இல்லை. குருணை யூரியா சாதாரண யூரியாவை விட எடை அதிகமாக இருப்பதால் பயிர்களுக்கு இடும்போது காற்று மற்றும் நீரால் அடித்துச் செல்லப்படுவதில்லை. ஆனால் சாதாரண யூரியா துகள்களாக இருப்பதால் இலையின் மேற்படிப்பில் படிந்து பயிர்களுக்கு சேதம் உண்டாக்குகிறது.

எனவே அதிக பயன் உள்ள குருணை வடிவ யூரியாவை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று விவசாயிகள் பயன் அடையவேண்டும். மேலும் டிஏபி மற்றும் 20:20:0:13 காம்பளக்ஸ் உரங்களை விவசாயிகள் வாங்கும் போது, குறிப்பிட்ட உர நிறுவனத்தை மட்டுமே கேட்கின்றனர். அனைத்து நிறுவன உரங்களின் தரமும், சத்துக்களின் அளவும் ஓரே அளவிலேயே உள்ளது.

எனவே விவசாயிகள் பயிருக்கு தேவையான உரங்களை மண் பரிசோதனை பரிந்துரையின்படி தேவையான உரங்களை மட்டுமே இட்டு உற்பத்தியை பெருக்கலாம்.

தினமணி தகவல் – திரு கோமதிநாயகம், வேளாண்மை  இணை இயக்குநர், திருவண்ணாமலை

இதே தகவல் திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் திரு மு.தெய்வேந்திரன் மூலமாகவும் வந்துள்ளது.