மா-வில் கூடுதல் லாபம் பெற யோசனை

மா நடவில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும் என்று தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மா உற்பத்தி பல மாவட்டங்களில் இருந்தாலும், கிருஷ்ணகிரி மாவட்டம்  முதலிடம் வகிக்கிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு ஹெக்டேரில் சராசரியாக 8 மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஏற்கெனவே 30 அடி இடைவெளியில் மாமரங்கள் நடப்பட்டு வந்தன. இதனால் ஒரு ஹெக்டேருக்கு 100 மரங்கள் மட்டுமே நடப்பட்டு வந்தன.

புதிய தொழில்நுட்பத்தில் 15 அடி இடைவெளியில் மா மரங்களை நடுவதன் மூலம்  ஒரு ஹெக்டேருக்கு அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு 50 சதவீதம் உற்பத்தியை   அதிகரிக்க முடியும். இதன் மூலம் ஹெக்டேருக்கு 12 மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மா அடர்வு முறை தோட்டக் கலைத் துறை மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவரை மா சாகுபடி மானாவாரி பயிராக சாகுபடி செய்து வந்ததை சொட்டு நீர் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்சுவதால் மாவில் உற்பத்தி அதிகபட்சமாக இரு மடங்காக உற்பத்தி செய்யலாம்.

இதை கருத்தில் கொண்டு மா நெருக்கு நடவு செய்வோருக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக் கலைத் துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பி.காளியப்பன் கூறியது:

மா மரங்கள் சுமார் 35 வகைகள் இம்மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டாலும் பெங்களூரா, பாலபாடு, பங்கனப்பள்ளி, செந்தூரா, நீலம், சேலம், மல்லிகா, அல்போன்சா, பையூர்-1 ஆகிய ரகங்களே அதிக அளவு பரப்பில் பயிர் செய்யப்படுகின்றன.

மா நெருக்கு நடவு செய்ய அல்போன்சா, மல்லிகா, பையூர்-1, பசந்த், ரத்னா, பனேசான் ஆகிய ரகங்கள் மிகவும் உகந்தவை. மா நெருக்கு நடவுக்கு அரசு மானியம்

  1. முதலாம் ஆண்டுக்கு ரூ.24,750,
  2. 2-ம் ஆண்டுக்கு ரூ.15,600,
  3. 3-ம் ஆண்டுக்கு ரூ.15,150 என

உரம், சொட்டு நீர்ப்பாசன கருவிகளுக்காக தோட்டக் கலைத்துறை  வழங்குகிறது.
ஆர்வமுள்ள விவசாயிகள் உதவி இயக்குநரின் (ஓசூர்) செல்போன் எண் 94436-32500-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.