ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

ஆமணக்கு

ஆமணக்கு

ஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்

படுகின்றன. இந்த எண்ணெய் பெயின்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மூலப் பொருள்களாகப் பயன்படுகிறது. மேலும், இதரப் பயிர்களுடன் பொறிப் பயிராக பயிரிடும் போது அந்தப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்:

ஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.

ரகங்கள்:

 • டெஎம்வி-4 (105 நாள்கள்)
 • டெஎம்வி-5 (120 நாள்கள்)
 • டிஎம்வி-6 (160 நாள்கள்)
 • எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்)
 • ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்)

ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

நிலத் தன்மை:

டிராக்டர் அல்லது நாட்டுக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும். வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.

விதை:

சிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும். கலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு:

விதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும். மானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

உரமிடுதல்:

பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பரிந்துரைக்கப்பட்ட அளவான ரகத்திற்கு 30:15:15 கிலோ தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். மானாவாரி ஒட்டு ஆமணக்கிற்கு 45:15:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.

இதில் 30:15:15 அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச் சத்தை மேலுரமாக மழை வரும் போது 40-60 நாள்களுக்குள் இட வேண்டும்.

இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். இதில் 30:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழைச்சத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30ஆவது நாளும், 60ஆவது நாளும் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்:

விதைத்த 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காதபட்சத்தில் விதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.

ஊடுபயிர்:

ஆமணக்கை ஊடுபயிராகவும் பயிரிடலாம். ஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.

அறுவடை:

பயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்.

– டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ்

 

 

மானாவாரி தொழில்நுட்பத்தில் இயற்கை விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று என்ற ஊரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் சென்னகேசவன் (98423 48915). இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர். பல புதிய எளிய முறைகளை அறிமுகம் செய்பவர். ஆடு வளர்ப்பிலும், பண்ணைக்குடில் அமைப்பதிலும் அனுபவம் உள்ளவர்.
மானாவாரி விவசாயம்தான் மற்ற எல்லா வகை விவசாயத்தை விடவும் லாபகரமானது. வரவுசெலவு கணக்குப் பார்த்தால் நஞ்சையிலோ, தோட்டக்கால் விவசாயத்திலோ நாம் செலவழித்ததுகூட வருவதில்லை. ஆனால் மானாவாரி வேளாண்மையில் செலவுகள் மிகவும் குறைவு. வரவும் நன்றாகவே உள்ளது. ஆனால் இதை முறையாகச் செய்ய வேண்டும். முறை தவறிச் செய்தால் நமக்கு வருமானம் கிடைக்காது.

மானாவாரி தொழில் நுட்பத்தின் முதல் அடிப்படை நமது பகுதியின் மழை அளவு. எவ்வளவு மழை எப்போதெல்லாம் பெய்கிறது என்ற தகவல் திரட்டு நம்மிடம் இருக்க வேண்டும். நான் கடந்த 35 ஆண்டுகளுக் குரிய எங்களது பகுதிக்கான மழை அளவுப் பட்டியலை வைத்துள்ளேன். ரெயின்பால் எனப்படும் மழைப்பொழிவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதேபோல காலமும் மாறு படுகிறது. ஆனால் ஒரு இடத்தில் பெய்யும் மழையின் முறையானது கிட்டத்தட்ட தவறாமல் ஆண்டுதோறும் இருக்கிறது.
நீண்டநாள் பயிர்களையும் தேர்வு செய்யலாம். குறுகிய காலப் பயிர்களையும் தேர்வு செய்யலாம். நமது மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை, மழை அளவு ஆகியவற்றை வைத்து நாம் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீண்டகாலப் பயிர்களான பருத்தி, மிளகாய் போன்றவற்றை நாம் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலப்பயிர்களான பாசி, உளுந்து போன்றவற்றை தேர்வுசெய்து சாகுபடிசெய்வதால் சிக்கல் வருவது இல்லை.

நேரடி விதைப்பைத் தவிர்ப்பது நல்லது. மாட்டை வைத்து கொறுக்கலப்பை கொண்டு விதைகளை நேருக்கு நேராகப் போடவேண்டும். டிராக்டர் கொண்டு போடும்போது விதை மேலாக விழுந்துவிடும் அல்லது முளைக்க முடியாத ஆழத்தில் சென்றுவிடும். இதனால் முளைப்புத்திறன் குறைந்துவிடுகிறது. விதைநேர்த்தி கட்டாயம் செய்யவேண்டும். ஆவூட்டத்தில் ஊறவைத்து விதைநேர்த்தி செய்யும்போது மிகவும் பயன் கிட்டுகிறது. விரைவில் முளைக்கிறது.

கடைபிடிக்க வேண்டிய மண்வள நுட்பங்கள் – பெய்யும் மழை நீர், நிலத்தை விட்டு வெளியேறாமலும் அதே சமயம் வரப்புகள் உடையாமல் இருக்கும்படியாகவும் சம மட்ட வரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் சத்தான மண் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப் படுகிறது. இதற்கடுத்ததாக வடிகால்களும் வாய்க்கால்களும் சீராக அமைக்க வேண்டும். அதாவது வரத்து நீருக்கும், போக்கு நீருக்கும் இடம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக சரிவுக்குக் குறுக்காக உழவேண்டும். சித்திரை மாதம் பெய்யும் மழையை விட்டுவிடாமல் உழுதுவைக்க வேண்டும். வரப்புகளை ஆண்டுதோறும் பலப் படுத்தி வரவேண்டும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
தினமலர் செய்தி -கே.சத்தியபிரபா, உடுமலை.

வேளாண் அரங்கம் – மார்க்கெட்

தன்னார்வலர்கள்

வேளாண் பொருட்கள்

 

மானாவாரிக்கு ஏற்ற மக்காச் சோளம் சாகுபடி

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை முத்துச்சோளம், சாமை, தினை, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட நவதானியங்கள்தான் பெரும்பாலும் நமது உணவுப்  பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

மானாவாரிப் பயிர்களான நவதானியங்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்தும், விவசாயத்தில் இருந்து குறையத் தொடங்கி விட்டன. பின்னர் அந்த இடத்தை அரிசி பிடித்துக் கொண்டது. இதனால் நவதானியங்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி நவதானியங்கள் உற்பத்திக்கான தளத்தை மக்காச் சோளம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது தமிழகத்தில் மக்காச் சோளத்தின் ஆண்டுத் தேவை 8 லட்சம் டன். கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச் சோளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் தமிழகத்தில் மக்காச் சோளத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மக்காச் சோளம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. 1990-91 ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் 2005-06-ம் ஆண்டில் 2.31 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டருந்தது.

வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இறவைப் பாசனத்தில் 4 லட்சம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மக்காச் சோளத்தில்

 • சித்ரா,
 • சி.டெக்,
 • எம்.கோல்டு 900,
 • என்.கே. 6240,
 • ஹைசெல்

உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏக்கருக்கு 7 கிலோ விதை பயன்படுத்தப்படுகிறது. செலவு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரைதான். ஏக்கருக்கு 30 முதல் 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ. 1,000 ஆக உள்ளது. மக்காச் சோளத்தின் விலை சில நேரங்களில் குவிண்டால் ரூ. 1,700 வரை உயர்ந்தும்  இருக்கிறது. வரும் மாதங்களில் குவிண்டால் ரூ.1,200 வரை இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அறுவடை செய்த மக்காச் சோளத்தை உலர்த்தி தூற்றி பாதுகாப்புடன் சேமித்து வைத்து இருப்பவர்களுக்கும், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை ஆகும் இறவைப் பருவ மக்காச் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் விற்பனைத் துறை தெரிவிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் மக்காச் சோளம் 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. அதிகபட்சம் 5 மாதங்களில் மக்காச் சோளம் அறுவடைக்கு வந்துவிடும். மானாவாரிப் பயிராக இருப்பதால் செலவு மிகவும் குறைவு. பூச்சித் தாக்குதலும் இல்லை என்கிறார்கள்.

சாதாரண காலங்களில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 850 வரை விலை கிடைக்கிறது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் ஏக்கருக்குச் செலவு போக குறைந்த வருவாய் ரூ.15 ஆயிரமாகவும், அதிகபட்ச வருவாய் ரூ.30 ஆயிரமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

மக்காச் சோளம் விதை பெரும்பாலும் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், விதை விலை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் பல விவசாயிகள் மக்காச் சோளத்தை வயலுக்கு வரும் வியாபாரிகளிடமே விற்பனை செய்கிறார்கள்.

இதனால்தான் விலை குறைவாக இருக்கிறது. விதைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள்.

மானாவாரிக்கு சிறந்த பயிராகவும், வணிகப் பயிராக மாறிவருவது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பயிராகவும் மக்காச் சோளம் உள்ளது.

தினமணி தகவல்

பார்க்க – மக்காச்சோளம் சாகுபடி – கட்டுரை மற்றும் ஒலிப்பதிவு

மானாவாரியில் காராமணி (தட்டைப் பயிறு வகையறா) சாகுபடி

பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன.

கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம். இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும்.

காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது.

இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும். தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை.

 • கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும்  ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம்.
 • பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம்.
 • பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.

பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம்  இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை.

இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும். இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும்.

காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய  ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.

காராமணி பயிரிடுவது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அவர்களது  பகுதியில் உள்ள வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி தகவல் – திரு வி.ஜெயச்சந்திரன், வட்டார வேளாண் உதவி இயக்குநர், காவேரிப்பாக்கம்