மழைக் கால பயிர் பாதுகாப்பு

தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மகிழ்ச்சியான செய்தியே. என்றாலும் என்றாலும் மழைபெய்வதற்கு முன்னரே பயிரிட்ட பயிர்களைப் பாதுகாக்கவேண்டிய தருணம் இது. தேங்கிய நீரில் அழுகி வீணாகிவிடலாம். பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். சில சமயங்களில் நீரை வயலிலேயே தேக்கி வைத்தால் பாசனம் செய்வது எளிது. எனவே, மழைக் கால யோசனைகளை வழங்கி சில செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளோம்.

பருத்தி

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அனைத்துப் பயிர்களின் வயல்களிலும் மழை நீர்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பாக்டீரியம், பூஞ்சாணம் போன்றவற்றால் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பருத்தியில் வெர்டிசீலியம் வாடல் நோய், வேர் அழுகல் நோய், ஆல்டர் நேரியா, இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், புகையிலைக் கீற்று வைரஸ் நோய் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

பருத்தி

பருத்தி

மேலும், செடிகளிலுள்ள சப்பைகள், காய்கள் அழுகி உதிர வாய்ப்புள்ளது. பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால், மெக்னீசியம் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு, பருத்தி இழையின் ஓரங்கள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பருத்தியை மழை நீரிலிருந்து பாதுகாக்க, வயல்களில் தேங்கும் நீரை, ஐந்து பாத்திகளுக்கு இடையே பார் அமைத்து, வயலைச் சுற்றி வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும்.

பருத்திச் செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படும் போது, சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி உள்ளிட்ட எதிர் உயிர்க் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது மேன்கோசெப் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடை லிட்டருக்கு 2 கிராமுடன், பாக்டீரியா கொல்லியான ஸ்டிரெப்டோமைசின் சல்பேட்டை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, செடிக்குச் செடி வேர் பகுதிகளில் ஊற்றுவதன் மூலம், வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தி இலைகளில் இலைப்புள்ளிகள் தென்படும் போது, காப்பர் ஆக்ஸிகுளோரைடு 30 கிராம், ஸ்டிரெப்டோமைசின் சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாள்கள் இடைவெளியில் இலையின் மீது தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், மழை நின்ற பிறகு, செடிகள், சப்பைகள் நன்கு செழிப்புடன் இருக்க, வளர்ச்சி ஊக்கி அல்லது டி.ஏ.பி. 2 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும். பருத்தியில் இலைகள் சிவப்பாக தென்படும் போது, மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், ஜிங் சல்பேட் 50 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழையிலிருந்து பருத்தியைக் காப்பாற்றி அதிக மகசூலைப் பெறலாம். தற்போது சிறிய வெங்காயப் பயிரைக் குமிழ் அழுகல் நோய் அதிகமாகத் தாக்கியுள்ளது. இந்த நோயானது பூஞ்சை மூலம் பரவுகிறது. இந்தப் பூஞ்சையைக் கட்டுப்படுத்த, குளோரோதலோனில் பூஞ்சாணக் கொல்லியை லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் அல்லது மாங்கோசெம் பூஞ்சாணக் கொல்லியை 2.5 கிராம் என்ற அளவில் கலந்து, அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய் காணப்படும் போது, புரபிகோனோசால் 20 மில்லி அல்லது சூடோமைல் 20 கிராம் அல்லது பெவிஸ்டின் 20 கிராம் அல்லது அலைட் 20 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி. ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளம், நெல், மஞ்சள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை, தகுந்த வடிகால் வசதி செய்து வெளியேற்றினால், பயிர்களைக் காப்பாற்றலாம்.

கூடுதல் விவரங்களுக்கு,

ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், பெரம்பலூர். தொலைபேசி எண் 04328-293251, 293592

நெல்

தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதிக நாற்றுகள் உள்ள குத்துகளிலிருந்து சில நாற்றுகளை எடுத்து, நாற்றுகள் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்யலாம்.

தண்ணீரில் மூழ்கியுள்ள நெல் பயிருக்கு உடனடியாக 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத் தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு நாள் வைத்திருந்து பிறகு 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். இந்த உரங்களை இடும்போது வயலில் சீராக தண்ணீர் வைத்துக் கொண்டும், தண்ணீர் வெளியே விடாதவாறும் பராமரிக்க வேண்டும். சூல் கட்டும் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிவான கரைசலை வடிகட்ட வேண்டும்.

அத்துடன், ஒரு கிலோ யூரியா, ஒரு கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதேபோல, ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொண்டால் மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றலாம்

தினமணி தகவல்