மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்

மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணைக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் தழைகள், சந்தையில் இருந்து பெறப்படும் வேண்டாத சொத்தை காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைக் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து பெறப்படும் இலை, வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மண் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து தரமான மண்புழு உரத்தை பெற முடியும்.

உரக்கூடம் அமைத்தல்:

மண்புழு உரக்கூடத்தை தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப அமைக்கலாம். நீள்வாக்காக கிழக்கு, மேற்காக நல்ல காற்றோட்ட வசதியுடன் உரக்கூடங்களை அமைக்க வேண்டும். மண்புழுவின் எதிரியான எறும்பைக் கட்டுப்படுத்த சிறிய நீர்வாய்க்கால் தொட்டியின் வெளிப்புற அடிப்பாகத்திலோ அல்லது தொட்டியின் சுவர் விளம்புகளின் மேற்புறத்திலோ அமைக்க வேண்டும்.

எலி, பாம்பு, ஓணான், தவளை, ஆந்தை போன்றவற்றில் இருந்து மண்புழுவை பாதுகாக்கும் வகையில் தொட்டிகளின் மேல் சிறுகண் வலைகள் அமைப்பது அவசியம்.

மண்புழுக்களுக்கு உணவு அளிக்கும்போது நன்கு மக்கிய உணவை தொட்டியின் மேல்விளிம்பில் இருந்து 2 அங்குலம் குறைவாக இருக்கும்படி நிரப்ப வேண்டும்.

தொட்டிக்குள் 40% ஈரப்பதம் இருக்கும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேல்மட்ட புழுக்களாக இருந்தால் புழு விடுவித்த 7 முதல் 14 நாள்கள் கழித்து ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது 2 நாள்களுக்கு ஒருமுறை 2 அங்குலத்துக்கு மிகாமல் உணவுப்படுக்கையின் மேல் உள்ள குருணை வடிவிலான புழு எச்சங்களை மட்டும் தனியாக சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்புழு உரத்தை 3 மி.மீ. கண்கொண்ட சல்லடைகளில் சலித்து உரத்தை பாலித்தீன் காகிதம் ஒட்டப்பட்ட அடர்மிகு பாலி எத்திலின் பைகளில் அடைத்து இருட்டான அறையில் 40% ஈரப்பதத்தில் சூரியஒளி படாத வகையில் வைத்து பயன்படுத்தலாம்.

மண்புழு உர தயாரிப்புத் தொட்டியில் ஊற்றப்பட்ட உபரிநீர் கீழே திரவ உரமாக வெளிவரும். இதுவே “வெர்மிவாஷ்‘ எனப்படும். இதில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால் பயிர்கள் எளிதில் இச்சத்துக்களை உட்கிரகித்து செழிப்பாக வளரும்.

மண்புழு உரத்தின் பயன்கள்:

மண்புழு உரத்தில் சுமார் 1.5% தழைச்சத்து, 0.5%மணிச்சத்து, 0.8% சாம்பல் சத்து, 12% அங்ககக் கரிமப் பொருள்கள் உள்ளன. ஒரு ஏக்கரில் மண்புழு உரத்தை பயன்படுத்தினால் மண்ணின் உயிர்தன்மை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.

உரத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் தாவரங்களுக்கு உடனே கிடைக்கிறது. இதன்மூலம் பயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு, மகசூல் 20 முதல் 30% வரை அதிகரிக்கிறது.

மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆகியவரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Advertisements

செலவில்லாத மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் குப்பைகள் மற்றும் இதர பொருட்களைப் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக மண்புழு உரம் தயாரிப்பு என்பது அதிகமான விவசாயப் பொருட்களை மட்கவேண்டி உள்ள கிராமப் புறங்களுக்கு சரியாக இருக்கும். தென்னை நார்களை உரமாக மாற்ற சாதரண நாட்டுப் புழுக்கள் ஒத்துவராது என்று சொல்கிறார்கள். இவற்றை உரமாக மாற்ற ஆப்பிரிக்கப் புழுக்களைப் பயன்படுத்தவும் ஆலோசிக்கிறார்கள்.
நாலரைக்கு ஒன்னரை மீட்டர் அளவு கொண்ட தொட்டி மற்றும் 1000 மண்புழுக்களால் ஒரு டன் தென்னைநார் கழிவை 300 கிலோ உரமாக மாற்ற இயலும். அவை தவிற 200 கிராம் மாட்டுச் சாணமும் தேவைப்படும்.

மட்கும் காலம் முடிந்த பின் 3000 மண்புழுக்களும் கிடைக்கின்றன. இவற்றை விற்பனைக்கோ அல்லது அடுத்த மண்புழுத் தொட்டிக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இடவசதி குறைந்தோர் மற்றும் உரத் தொட்டி கட்ட இயலாதவர்கள் சாக்கிலும் வளர்க்கலாம். ஒரு பிளாஸ்டிக் சாக்கில் 100 புழுக்களை வைத்து 30 கிலோ தென்னை நார் கழிவுகளை மட்க வைக்கலாம். அதனுடன் கொஞ்சம் சாணத்தையும் சேர்த்து மரம் அல்லது கம்புகளில் கட்டி இவற்றைத் தொங்க வைத்துவிடலாம்

நண்பேன்டா – மாசற்ற நிலத்தை உருவாக்கும் மண்புழு உரம்

இரு வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை வம்பன் பண்ணையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியி்ல் நிகழ்த்தப்பட்ட உரை.

மண்புழுக்களில் குறைந்த காலத்தில் அதிக உரத்தை அளிப்பவை ஆப்பிரிக்கன் மற்றும் சிவப்பு வகைகளாகும். மண்புழு உரம் தயாரிக்க நிழல் மற்றும் குளிர்ச்சியான, உபயோகப்படுத்தாத மாட்டுத்தொழுவம், கோழிப்பண்ணை ஆகியவற்றைப் பன்படுத்தலாம்.

வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு கூரையாக தென்னங்கீற்றைப் பயன்படுத்தலாம். 2.5 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்ட சிமென்ட் தொட்டிகள் கட்ட வேண்டும். தேவையைப் பொருத்து நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

மண்புழு மண்ணுக்குள் செல்வதைத் தடுக்க உரப்படுக்கை இடம் கடினமானதாக அமைக்க வேண்டும். ஹாலோ பிளாக்ஸ் அல்லது செங்கற்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

கால்நடைக்கழிவுகள், பண்ணைக்கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மலர் அங்காடி கழிவுகள், வேளாண்தொழில்சாலைக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

மட்கக்கூடிய கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதை மூட்டம்போட்டு அதன் மீது சாணக்கரைசலை தெளித்து மட்கவிட வேண்டும். 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிட ஏதுவாக இருக்கும்.

உரத்தொட்டிகளில் சாணம் மற்றும் கழிவுகளை 5 படுக்கைகளாக இட வேண்டும். முதல் அடுக்கு சாணம் அதன் மேல் வேளாண் கழிவுகள், அடுத்த சாணம் பிறகு கழிவுகள் என 5 அடுக்குகளாக இட வேண்டும்.

வாரம் ஒருமுறை புரட்டிப் போட வேண்டும் இவ்வாறு செய்வது படுக்கையிலுள்ள வெப்பத்தை தொட்டிக்கு 1.5 டன் கழிவுகள் மற்றும் சாணம் இட்டு தயார் செய்யும்பொழுது ஒரு டன் மண்புழு உரம் கிடைக்கும். ஒருநாள் விட்டு ஒரு நாள் மண்புழு உரத்தை அறுவடை செய்யலாம்.

இவ்வாறு சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெப்பமில்லாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமிக்க வேண்டும்.

ஒரு ஹெக்டேரில் இடப்படும் 5 டன் மண்புழு உரத்தில் 75 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தும் அடங்கியுள்ளன.

இது சுமார் 160 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ ம்யூரியேட்ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது. மேலும் இதுபோன்று ஆண்டுக்குகு ஒருமுறை இடுவதால் அரைச்சதம் அங்ககப் பொருள் அதிகரிக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ரசாயண உரங்களால் மாசுபட்ட வேளாண் நிலங்களை சீர்சிருத்த இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இயற்கை வேளாண்மையின் முக்கிய இடுபொருளான மண்புழு உரத்தின்தேவை தொடர்ந்து அதிகரித்துவருவதால் மகளிர் சுய உதவிகுழுக்கள், உழவர் மன்றங்கள் மண்புழு உர உற்பத்தியில் ஈடுபடுவதால் நல்ல லாபம் ஈட்டலாம்

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் – TNAU

வேளாண் பல்கலைக் கழக இணைய தளம் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் சொர்க்க பூமி. அதிலிருந்து ஒரு பயனுள்ள கட்டுரை.

இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.

மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்

மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.

மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்

  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

மண்புழு இரகங்கள்

வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.

  1. மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  2. மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
  3. மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.

மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.

மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.

மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.

2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்

நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.

நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.

நிலை – 4
மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.

நிலை – 5
சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.

மண்புழு உர உற்பத்தி முறைகள்

உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்
மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.

அட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்

கழிவுகள் கிடைக்கும் இடம் உபயோகிக்க கூடிய கழிவுகள்
வேளாண் பண்ணைகள் பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு
மலைப் பயிர்கள் தண்டு,இலைகள்,பழத்தோல்கள்
கால்நடைகள் சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு
உணவு பதப்படுத்தும் ஆலை தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள்
சமையல் எண்ணெய் ஆலை விதை ஓடு, பிரஸ்மட்
வடிப்பாலை உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள்
விதை பதப்படுத்தும் ஆலை பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்
வாசனை திரவியங்கள் ஆலை தண்டு, இலை, பூக்கள்
தென்னை நார் ஆலை தென்னை நார்க் கழிவு

மண்புழு உர உற்பத்திக்கான இடம்

மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்

ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை

நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

கழிவுகளை படுக்கையில் போடும்முறை

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.
தண்ணீர் தெளிக்கும் முறை

தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்

அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.

மண்புழு உர அறுவடை செய்முறை

தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.

சிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.

மண்புழு அறுவடை முறை

மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு

பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சத்து அளவு
கரிமச்சத்து 9.5 – 11.98 சதவீதம்
தழைச்சத்து 0.5 – 1.5 சதவீதம்
மணிச்சத்து 0.1 – 0.3 சதவீதம்
சாம்பல்சத்து 0.15 – 0.56 சதவீதம்
சோடியம் 0.06 – 0.30 சதவீதம்
கால்சியம்+மெக்னீசியம் 22.67 – 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து 2 – 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து 2 – 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து 5.7 – 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து 128 – 5485 மி.கிராம்/கிலோ

மண்புழு உர சேமிப்பு முறை

அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.

மண்புழு உரத்தின் நன்மைகள்

  • மற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.
  • மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
  • இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
  • கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
  • திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.

மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்

ஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.

மண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • சரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.
  • எல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்

ஒரு எளிய செயல்முறை அசைபடம்
http://www.youtube.com/watch?v=Lcv69QL_Ers&feature=related

இந்த ஆந்திரப் பெண்மனியின் தன்னம்பிக்கையைப் பாருங்கள். எந்த ஒரு மாற்றமும் சரி, நம் நாட்டுப் பெண்கள் கைகளில்தான் உள்ளது.
http://www.youtube.com/watch?v=KNIVA9F8huE

தகவல் – http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_vermicompost_ta.html

நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றும் மண்புழு உரம்

விளைநிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை மண்புழு உரத்துக்கு உண்டு.

தற்போது மண்புழு உரக்கூடம் அமைப்பது, தயாரிப்பது போன்றவை மிகவும் எளிது என்பதாலும் இதன் பயன்களைப் புரிந்து கொண்டதாலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேளாண்மைத் துறை மண்புழு உரக்கூடம் அமைக்க 50 சதம் மானியம் வழங்குவதையும் விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் கூட நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியில் மண்புழு உரக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம். 50-க்கு 20 என்ற அளவில் 1000 சதுர அடி பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கும் வகையில் கீற்றுக்கொட்டகை அமைப்பது நல்லது. இதில் 20-க்கு 20 அளவில் 2 அடி உயரத்தில் 800 கன அடி அளவுக்கு தொட்டி கட்டி அதனை நான்காகப் பிரித்துக் கொண்டால் உரக்கூடம் தயாராகி விடும். ஒரு உரக்கூடம் அமைக்க ரூ.60 ஆயிரம் என்றால் வேளாண் துறை ரூ.30 ஆயிரத்தை மானியமாக வழங்கி விடுகிறது. சிக்கன முறையிலும், சிறிய முதலீட்டிலும் மண்புழு உரங்கள் உற்பத்தி செய்வது இன்று பிரபலமடைந்து, பெருகி வருகிறது.

இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். மண்ணின் மேற்பரப்பில் வாழும் மேல்மட்ட மண்புழு, நடுப்பகுதியில் மட்டுமே வாழ்பவை நடுமட்ட மண்புழு,அடியில் ஆழத்தில் படுக்கை வாக்கில் துளையிட்டு செல்பவை கீழ்மட்ட மண்புழு என வகைப்படுத்தப்படுகிறது.

முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். மக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இடையிடையே தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 200 மண்புழுக்கள் என்ற அளவில் இட்டால் 3-வது வாரத்திலேயே மண்புழுக்கள் தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளித்தள்ளுகின்றன. வாரம் ஒருமுறைகூட இவற்றை சேகரிக்கலாம்.

இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.

45 முதல் 60 நாளில் மண்புழு உரம் ரெடி. பண்ணையில் சேரும் கழிவுகளை அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி கூறியது:

தீமை தரும் புழு, பூச்சிகள், வண்டுப் புழுக்கள், கிருமிகள் இல்லாமல் இருப்பது மண்புழு உரம். களை விதைகள் உயிருடன் இல்லாமலும் சத்துக்கள் செரிவூட்டப்பட்டதாகவும் உடனடியாக செடிகளுக்குக் கிடைக்கும் வகையில் நன்மைகள் இருப்பது, சுற்றுச்சுழலைப் பாதுகாப்பது இப்படியாக இவற்றின் பலன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தற்போது வியாபார ரீதியாகவும் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பயிர் இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உபரி வருமானமாகவும் மண்புழு உரம் தயாரிப்பது அமையும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 154 மண்புழு உரக்கூடங்களை அமைத்திருக்கிறோம் என்றார்.

தினமணி தகவல்: சி.வ.சு.ஜெகஜோதி, இராமநாதபுரம்

போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடே, தற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி., பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள், தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள், தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு, கரைந்து போகாமல் தங்கி விடுவதே, மோசமான விளைவுகளுக்குக் காரணம்.

எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இயற்கை உரங்களின் பட்டியலில், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில், இயற்கை உரங்கள் என்ற பெயரில், பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

எள்ளுப் பிண்ணாக்கு, மணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்து, வேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

திரவ வடிவில் அசோஸ்பி, பாஸ்போமிக்ஸ், பொட்டாஷ் ஆக்டிவா, ஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்து, பயிர் வளர்ச்சி உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம், பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.

இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெற, ரூ.300 கட்டணம் செலுத்தி, வேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே. இரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள், நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது.

எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள், அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, தரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர், விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும், அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில், “மாதம் 3 முதல் 4 டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும், நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது” என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், “”இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்” என்றார் அவர்.

தினமணி தகவல் – த. தேவராஜ், கடலூர்

மண்புழு எருவினை பிரித்தெடுக்கும் முறை

மண்புழு உற்பத்தி முறைகள் – தொட்டிமுறை, குழி முறை, படுக்கை முறை. நன்கு மக்கிய பயிர்க்கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுவிற்கு உரமாக தருவதால் ஒரு மாதத்திலேயே மண்புழு எருவினை எடுத்து பயன்படுத்தலாம். அதே சமயம் பாதியளவு மக்கிய, சரியாக மக்காதநிலையில் உள்ள பொருட்களை உணவாக்கி கொடுத்தால் 2 மாதங்கள் கழித்துத் தான் மண்புழு எருவினைப் பெறமுடியும். மண்புழு எருவினை சேகரிக்க முடிவு செய்தவுடன் தொட்டியில் நீர் தெளிப்பதை 2, 3, நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மண்புழுக்கள் ஈரம் மிகுந்த அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் நாம் மேலே பரப்பியுள்ள சிறுசிறு செங்கற்களின் இடையிடையே காணப்படும் மண்புழுவின் குருணை வடிவ கழிவுகளை சேகரிக்க வேண்டும்.  இக்கழிவுகளின் மீது நீர் தெளித்து ஈரத் தன்மையை பராமரிக்க வேண்டும். இக்கழிவுகளை நேரடியாக விளைநிலங்களில் இட்டு பயன்படுத்தலாம். மண்புழு எருவினை பைகளில் அடைத்து ஈரம் உலராமல் பாதுகாத்து 6 முதல் 8 மாத காலம் வரை பயன்படுத்தலாம். ஒரு கிலோ எடைக்கு சுமார் 1000 மண்புழுக்கள் இருக்கும். இவை ஒரு நாளில் பயிர்க்கழிவுகளை உண்டு 5-6 கிலோ எருவினைத் தருகின்றன. நன்கு புழுக்களை பராமரித்தால் ஒரு மாதத்திற்கு 150 கிலோ வரை எருவினை பெறலாம். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 200 கிலோ வரை எரு கிடைக்கும். கிலோ 6 முதல் 8 ரூபாய் வரை விலை போகும்.

நெல்லுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அசத்திக் கொண்டிருப்பவர் சேலம் மாவட்டம், நாகியம்பட்டி அப்புத்தோட்டம் கே.கருப்பணன் என்ற விவசாயி. ஏற்கனவே விவசாயி தன்னிடம் இருந்த சொட்டுநீர்க் குழாய்களை வைத்து 70 சென்ட் நிலத்தில் ஏ.டி.டி.45 ரக நெல்லுக்குதானே சொட்டுநீர் அமைத்துள்ளார். நிலத்தில் பல பயிர் சாகுபடி செய்து அவையெல்லாம் பூத்து வந்ததும் மடக்கி உழவு செய்துவிட்டு பின்னர் தொழு உரம் போட்டு பரம்படித்து நிலத்தை சமன்செய்து, நாற்றங்கால் மூலம் நாற்று தயாரித்து ஒற்றை நாற்று முறையில் ஒரு அடி இடைவெளியில் கயிறு பிடித்து நாற்று நட்டுள்ளார். பின்னர் 4 அடி இடைவெளிக்கு ஒரு குழாய் (லேட்ரல்) வருவதுபோல் 18 மி.மீ. குழாயை அமைத்து அதில் இரண்டரை அடி இடைவெளியில் ஒரு துளையிட்டு சிறிய குழாயை (மைக்ரோ டியூப்) சொருகிவைக்க வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணத்தை சொட்டுநீரில் கலந்து நிலத்துக்கு கொடுக்க வேண்டும். இதுதவிர வேறு எந்த இடுபொருளும் கொடுக்கவில்லை. கோனோவீடரை கிழக்கு மேற்காக மட்டும் உருட்டி களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சொட்டுநீர் குழாய்க்கு  எந்த பாதிப்பும் வராது.

விதை முளைத்ததிலிருந்து சுமார் 50 நாட்களில் பூ கரு உருவாகும். அதிலிருந்து 30 நாட்களில் பூ பூக்கும். அதிலிருந்து கதிர் முதிர்ச்சி அடைய 30 நாட்கள் ஆகும். வேர் பிடிக்கும் தருணம், பூக்கரு உண்டாகும் சமயம், பூக்கும் தருணம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூலில் பெரிய பாதிப்பு இருக்கும். மற்ற சமயங்களில் காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தாலே போதுமானது. அரை மணி நேரம் பாய்ந்தாலே நிலம் ஈரமாகிவிடும். வழக்கமான முறையில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை வைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம். வழக்கமான முறையில் 70 சென்டில் 20 மூடை (70 கிலோ) மகசூல் எடுப்பார். சொட்டுநீர் பாசனம் மூலம் கூடுதலாக 9 மூடை நெல் கிடைத்துள்ளது. அறுவடைக்கு அடுத்த நாளே குழாய்களை சுருட்டி வைத்துவிட்டு உழவு ஓட்டிவிடலாம் என்கிறார் விவசாயி.

தொடர்புக்கு: கே.கருப்பண்ணன், 97869 81299 (தகவல்: பசுமை விகடன், 25.6.10)