இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

காய்கறி சாகுபடியில் இயற்கை முறை நுட்பங்களை கடைபிடித்தல்: தற்போது நாம் செய்யும் காய்கறி சாகுபடியில் முக்கியமானது கத்தரி சாகுபடி. இது பூச்சிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. இயற்கை சம்பந்தமான உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கத்தரி சாகுபடிக்கு எப்படி உதவுகின்றது என்பதை இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

இயற்கை முறை சாகுபடி:

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.

நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும். நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).

நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.

இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகளைச் சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லபாம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.

இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது.

இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பது நுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.

தினமலர் தகவல் – எஸ்.எஸ்.நாகராஜன்.

பாகற்காய் விவசாயம்: முன்னுக்கு வந்த கிராமம்

விருத்தாசலம் வட்டம் மணக்கொல்லை கிராமம் பாகற்காய் விவசாயத்தால் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குகிறது.

÷இந்த கிராமத்தில் ஆரம்ப காலத்தில் தண்ணீர் இன்மையால் விவசாயம் பின் தங்கிய நிலையில் இருந்து வந்தது. அதனால் கோடைக்காலத்தில் 3 மாத முந்திரி விவசாயத்துக்குப் பிறகு இப்பகுதி மக்கள் பிழைப்புக்காக அருகிலுள்ள நெய்வேலி அனல்மின் நிலைய சுரங்கப் பணிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

÷இக்கிராமத்தில் ஒரு சிலர் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் கண்டுபிடித்ததால் இப்பகுதியில் விவசாயம் செழிப்படையத் தொடங்கியது.

÷முதலில் தோட்டப் பயிரான பாகற்காயை பயிர் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். பின்னர் நாளடையில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தற்பொழுது வீட்டுக்கு ஒரு ஏக்கர் அல்லது அதற்குமேல் பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகற்காய் விவசாயம் அவ்வூர் மக்களை மேன்மையடைய செய்துள்ளது.

÷பாகற்காய் பயிரிடும் முறை: நிலத்தை முதலில் நன்கு உழுது, பின்னர் தொழு உரம் (மக்கிய குப்பை) நிலத்தில் தெளித்து, நிலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு 2 அடி அகலம் ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் குழிக்கு அடியுரம் இட்டு குழிக்கு 5 முதல் 7 விதை ஊன்றி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் 7 நாள்களுக்கு நீர் தெளித்து வரவேண்டும். பின்னர் பாத்தி கட்டி நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் குச்சிகளை நட்டு கம்பிகளால் பந்தல் அமைத்துகொள்ள வேண்டும்.

÷பாகற்கொடி பந்தலில் படரத் தொடங்கியுடன் 40 நாள்களில் காய்க்கத் தொடங்கிவிடும். அதிலிருந்து வாரத்துக்கு இருமுறை காய்களை பறிக்கவேண்டும். இந்த விவசாயத்துக்கு மருந்து அதிகம் தேவைப்படும். 6 மாத காலம் கொண்ட இப்பயிரால் ஏக்கருக்கு 10 டன் முதல் 15 டன் வரை பாகற்காய் கிடைக்கிறது. ஒரு டன் பாகற்காய் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விவசாயத்தில் செலவு போக ஏக்கருக்கு ரூ.1.50 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது.

÷இவ்விவசாயத்தை இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம், இராமநாதபுரம், ஆலடி, மேற்கிருப்பு, முடப்புள்ளி, உளுந்தூர்பேட்டை வட்டம் வானம்பட்டு, மட்டிகை, கல்லமேடு, தொப்பையான்குளம், ஒடப்பன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் தற்பொழுது விவசாயம் செய்து வருகின்றனர்.

÷இக்கிராமத்தில் பயிரிடப்படும் பாகற்காய்களை சென்னை கோயம்பேடு, கும்பகோணம், பண்ருட்டி, புதுச்சேரி, திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் நேரிடையாக வந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர்.

÷பயன்கள்: பாகற்காயில் மருத்துவ குணங்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளிக்கு உகந்ததாகவும், குடற்புழுக்களை கட்டுப்படுத்தவும், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு உகந்ததாகவும் உள்ளது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாகற்காயை பயன்படுத்தக்கூடாது.

மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

First Published : 03 May 2010 12:09:43 AM IST
Last Updated : 03 May 2010 10:00:24 AM IST

நாமக்கல்,​​ மே 2: ​ நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலைக்கடை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

÷இது தொடர்பாக,​​ நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா.​ சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி:

÷மானாவாரி நிலக்கடை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.​

15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும்.

இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும்.​ ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.

÷ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும்,​​ ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.​ வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.​ நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும்.​ வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.

எனவே,​​ தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.​ ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன் பெற முடியும்.

மானாவாரிப் பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

சங்ககிரி, ஜூன் 23:  கோடை மழையை பயன்படுத்தி மானாவாரியில் பயறுவகைப் பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகிய பயிர்களை விதைக்க தயாராகவுள்ள விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரத்தினை அடி உரமாக இட சங்ககிரி வோளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

÷கடைசி உழவில் ஏக்கருக்கு ஐந்து டன் தொழு உரம் இட்டு மானாவாரியில் பயிர்சாகுபடி செய்யும் வழக்கம் மறைந்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஏனெனில் தொழு உரம் அதிகமாக தயாரிப்பது என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இருப்பினும் மானாவாரியில் சாகுபடி செய்யும் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரவும், அதிக மகசூல் கொடுக்க தேவையான சத்துக்களை அடியுரமிடுவதும் அவசியமான ஒன்றாகும். எனவே தற்பொழுது கிடைக்கக் கூடிய குறைந்த தொழு உரத்துடன் பயிர்களுக்கு தேவைப்படும் சத்துக்களை தரும் இரசாயான உரங்களை கலந்து ஊட்டமேற்றிய தொழு உரமாக தயாரித்து இட வேண்டும்.

ஒரு ஏக்கர் பயறுவகைப் பயிர்களுக்கு அடியுரமிட குறைந்தபட்சம் ஒரு வண்டி மக்கிய தொழு உரத்துடன் 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு கலந்து மேடான இடத்தில் குவித்து வைத்து, காற்றுப்புகா வண்ணம் சேறு பூசி மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.

மக்கிய தொழு உரத்துடன் கலந்துள்ள சூப்பர் பாஸ்பேட் உரமானது வேக வைத்த உணவு போல் நன்கு மக்கி ஊட்டமேற்றிய தொழு உரமாக மாறுகிறது. இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் ஏக்கருக்கு 12 கிலோ யூரியா கலந்து பயறுவகை விதைக்கும் முன் விதைப்பு சாலில் சீராக இட வேண்டும். இவ்வாறு அடியுரமாக இடுவதால் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சுடாமல் காப்பதுடன், அதிக வேர்கள் வளர்ந்து மண்ணில் உள்ள ஈரத்தை பயிர்களுக்கு எடுத்துக் கொடுப்பதால் வறட்சியைத் தாங்கி பயிர் நன்கு வளர்வதுடன் அதிக மகசூல் கிடைக்கும்.

மேலும் மானாவாரியில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யும் போது விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி விதைப்பு செய்வதுடன் பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ ஜிப்சம் அடியுரமிட வேண்டும். விதைத்த 30 மற்றும் 45வது நாட்களில் மழை பெய்து போதிய ஈரம் இருக்கும்போது 2 சதவீதம் டிஏபி உரக்கரைசல் தெளிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெற விவசாயிகளை வேளாண் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.