சாம்பார் வெள்ளரி சாகுபடி

ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்யமுடியும் என்கிறார் நாகப்பட்டிணம், கிராமத்திமேடு விவசாயி ஆறுமுகம்.

வெள்ளரி சாகுபடிக்கு தைப்பட்டம் சிறந்தது. நல்ல வடிகால் வசதியோடு இருக்கிற எந்த வரை நிலமும் இதற்கு ஓக்கே. அதிகமான மணல் மற்றும் உப்புத்தன்மை இருக்கிற மண் வகை தவிர்க்கவேண்டியது.  (கரும்பில் ஊடுபயிறாக சாம்பார் வெள்ளரியைப் பயிரிடுவது பற்றி இன்னொரு கட்டுரை வந்திருக்கிறது. அதில் செம்மண் பூமியில் சாம்பார் வெள்ளரி நன்றாக வளரும் என்று தேனி மாவட்டம், குண்டல்நாயக்கன்பட்டி விவசாயி முத்தையா கூறுகிறார்).

நடவிற்கு முன் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும். பின்பு எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து நீளம் அகலம் ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்கவேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் விழலாம். ஒவ்வொரு குழிக்கும் அரைக்கூடை எருவைப் போட்டு மேல்மண் சொண்டு மூடி விடவேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 250கிராம் வெள்ளரி விதைகள் தேவைப்படும். வடித்த கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் விதை நேர்த்தி செய்யவேண்டும். பிறகு அரை மணிநேரம் நிழலில் உலர்த்தி குழிக்கு ஏழு விதைகள் வீதம் நடவு செய்யவும். எலி தொந்தரவு மற்றும் செடி அழுகல் தாண்டி சராசரியாக குழிக்கு 5 செடிகள் நன்கு முளைத்து வளரும்.

நடவு செய்த மூன்றாம் நாளில் முளைப்பு எடுத்துவிடும். பத்து நாட்கள் வரை காலை நேரத்தில் தினம் ஒரு முறை தண்ணீர் தெளிக்கவேண்டும். 15ம் நாளில் இருந்து 20ஆம் நாளில் கொடியை ஒதுக்கிவிட்டு மீதி இருக்கும் இடத்தை மண்வெட்டியால் கொத்தி களைகளை நீக்க வேண்டும். பின் கொடியைச் சுற்றி அரை அடி ஆழத்திற்கு குழி எடுத்து அரை அன்னக்கூடை வீதம் எரு வைத்து மண்ணை இட்டு குழியை மூடிவிட வேண்டும். மண்ணின் நீர் பிடிப்புத் தன்மைக்கு ஏற்ப நான்கு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கூடவே ஏக்கருக்கு 10லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்துவிடவேண்டும். 30ஆம் நாளில் இரந்து தொடர்ந்து பத்து நாட்கள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்ச கவ்யாவைக் கலந்து தெளித்தால் செடிகளில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

20ஆம் நாளில் இருந்து செடியில் பச்சைப் புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதற்கு ஒரு வாரம் பூண்டுக் கரைசல், அடுத்தவாரம் மூலிகைப் பூச்சிவிரட்டி என்று மாற்றி மாற்றி தெளித்து வரவேண்டும். பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

35 ஆம் நாளில் இருந்து காய் பறிப்புக்கு வரும். தொடர்ந்து 60 நாட்களுக்கு பறிக்கலாம். ஆரம்பத்தில் தினசரி பறிக்கவேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு கூடை வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும். கூடைக்கு 20 முதல் 25 கிலோ அளவிற்கு வெள்ளரி இருக்கும்.

தகவல் – பசுமை விகடன்

தொடர்பு –
ஆறுமுகம், நாகப்பட்டிணம் – 99653 22418
முத்தையா, தேனி. 99527 71134

நல்லாத்தான் இருக்கும்! ஆனால் இதற்கு உழைப்பு மிக அதிகமாக இருக்கிறது. கண்டிப்பாக ஆறுமுகத்தைப் பாராட்டித்தான் ஆகனும்