அனுமதி பெறாமல் பி.டி. கத்தரி ஆராய்ச்சி : தமிழ்நாடு வேளாண் பல்கலை, மான்சான்டோ மீது வழக்கு

மரபணு மாற்ற கத்தரிக்காய் உற்பத்திக்கான ஆராய்ச்சிக்கு, தொடர்புடைய எந்த துறையிடமும் அனுமதி பெறவில்லை என்பதற்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

மரபணு மாற்ற கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தபோது விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அப்போதைய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இதற்குத் தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த ரக கத்தரிக்காயால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைப் பற்றி அறியும் வரையில் இதை அனுமதிக்க வேண்டாம் என அப்போது அவர் அறிவித்தார். இதில் புதிய திருப்பமாக, விதைகளில் மரபணு மாற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது உரிய எந்த துறையிடமும் அனுமதி வாங்கவில்லை என்று தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விதி மீறலுக்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது என்று கடந்த ஜூன் 20-ம் தேதி தில்லியில் நடந்த அந்த ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு செய்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தின் தீர்மான விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

மான்சான்டோ மரபணு விதை ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய பிரிவான மேஹோ நிறுவனத்தின் மீதும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தார்வாரில் உள்ள வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மீதும் இந்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தரி விதையில் மரபணு மாற்ற ஆராய்ச்சி செய்வதற்காகக் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நான்கு கத்தரிக்காய் ரகங்களின் விதைகளை மான்சான்டோ நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறது.

பிறகு மரபணு மாற்றம் செய்ய விதைகளையும் இந்தப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. இந்த விவரங்களை, வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

இதேபோல கர்நாடகத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் 6 வகையான கத்தரிக்காய் விதைகளிலும் மான்சான்டோ நிறுவனம் ஆராய்ச்சி செய்து மரபணு மாற்றம் செய்திருக்கிறது. தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம், மாநில பல்லுயிர்ப்பெருக்க வாரியங்கள் மற்றும் பொருத்தமான உள்ளூர் பல்லுயிர்பெருக்க நிர்வாக குழுக்களின் அனுமதி எதையும் பெறாமலேயே இந்த ஆராய்ச்சிகளை மான்சான்டோ மேற்கொண்டிருப்பது சட்ட மீறல் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பாரம்பரிய விதைகளைப் பொருத்தவரை அரசுதான் அவற்றின் பாதுகாவலராக இருக்க வேண்டும். இருந்தாலும் அந்த விதைகளுக்கு அரசு உரிமையாளர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வணிகம், ஆராய்ச்சி மற்றும் வேறு வகையில் பல்லுயிர்ப்பெருக்க சூழ்நிலைகளைக் கையாள வேண்டியிருந்தால், பல தலைமுறைகளாக அதைப் பராமரித்து பாதுகாத்து வரும் உள்ளூர் சமூகத்தினரிடம் அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது சட்டமாகும் என துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மான்சான்டோ நிறுவனத்துக்கு 4 கத்தரி ரகங்களின் விதைகளை அனுப்பி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, “விதைகளின் உரிமையாளர்‘ என்று தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ளது. இதுவும் விதிகளை மீறிய செயல் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனமும், தார்வாட், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு சமயங்களில் வெளியிட்ட செய்திகளில், உரிய அனுமதியை தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி ஒருவரைக் கேட்டபோது ஆராய்ச்சி தொடங்கும்போது யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அதை வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வெளியிட முயற்சிக்கும் போது மத்திய அரசின் துறைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் தந்து அனுமதி பெற்றாக வேண்டும் என்றும் கூறினார். யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற நிலை இருந்தால், பல்லுயிர்ப்பெருக்க பாதுகாப்பில் உயர்ந்த அமைப்பான தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் எப்படி, “”அனுமதி பெறாதது குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது” என தீர்மானம் நிறைவேற்ற முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி செய்தி