கொய்யா மேட்டர் – கொய்யா பழச்சாறு

கொய்யா பழச்சாறு:

நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்துக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து பழக்கூழ் தயாரிக்க வேண்டும். இந்தப் பழக்கூழை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்துப் பின் குளிரவைத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் வீதம் பெக்டினால் என்னும் என்சைம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் என்னும் பாதுகாப்பான் (100 பிபிஎம்) சேர்த்து சுமார் 24 மணி நேரம் வைக்க வேண்டும். பின் இதனை மெல்லிய துணி கொண்டு வடிகட்டிய பின் கிடைக்கும் பழச்சாறை 85 செ. வெப்பநிலை வரும்வரை சூடுபடுத்தி நன்கு சுத்தம் செய்த பாட்டில்களில் நிரப்பி மூடிவிட வேண்டும். நன்கு கொதிக்கும் நீரில் இப்பாட்டில்களை 30 நிமிடங்கள் வைத்திருந்து பின் எடுத்து குளிர்ந்த நீரில் உடனே குளிரவைக்க வேண்டும். தேவைப்படும்பொழுது தேவையான அளவு நீரும் சர்க்கரையும் சேர்த்து பருகலாம்.

கொய்யாப்பழ ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்:

 • பழச்சாறு – 1 லிட்டர்,
 • சர்க்கரை – முக்கால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-3 கிராம்.

செய்முறை: நன்கு பழுக்கும் நிலையிலுள்ள கொய்யாப் பழங் களை கழுவி நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கியபின் பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அடி கனமாக உள்ள பாத்திரத்தில் பழத் துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி பழங்கள் அசையாத வாறு கலக்காமல் மெதுவாக மேலே உள்ள தண்ணீரை மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். இதுதான் பெக்டின் அடங்கிய பழச்சாறாகும். பின்னர் பழச்சாறுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து கலக்கி நன்கு கரைந்தபின் இன்னொரு முறை வடிகட்ட வேண்டும். அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஜெல்லி பதம் வரும்வரை வேகவைக்க வேண்டும். (ஜெல்லி பதம் அறிதல்: ஜெல்லியை கரண்டியில் எடுத்து ஆறவைத்து ஊற்றினால் கட்டியாக விழாமல் தொடர்ந்து கீழே விழவேண்டும்) ஜெல்லியின் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு சுத்தம் செய்த வாய் அகன்ற பாட்டில்களில் நிரப்பி மூடிவிட்டு பாதுகாத்து வைக்க வேண்டும். தேவைப்படும் பொழுது மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

கொய்யாப் பழ சீஸ்

தேவையான பொருட்கள்:

 • பழக்கூழ் – 1 கிலோ,
 • சர்க்கரை-ஒன்னேகால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-2.2 கிராம்,
 • வெண்ணெய்-50 கிராம்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்து கழுவி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் சம அளவு நீரை சேர்த்து பழத் துண்டுகள் மிருதுவாகும்வரை வேகவைத்து சல்லடையில் போட்டு தோல் மற்றும் கொட்டைகளை நீக்க வேண்டும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கெட்டியாகும்வரை அடுப்பில் வைத்து சூடாக்கி, தேவைக்கேற்ப சிவப்பு நிறம் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி சீராக பரப்பி சிறு துண்டுகளாக வெட்டி வெண்ணெய் காகிதத்தில் சுற்றி பாட்டிலில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு நல்ல உணவாகும்.

கொய்யாப்பழ தயார்நிலை பருகும் பானம்

தேவைப்படும் பொருட்கள்:

 • பழச்சாறு-1லிட்டர்,
 • சர்க்கரை-1.25 கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-28 கிராம்,
 • தண்ணீர்-7.7 லிட்டர்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யா பழங்களை தேர்ந்தெடுத்து நான்கு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து இரும்பு வடிகட்டியில் வடித்து பழச்சாறை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். தண்ணீருடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, குளிரச் செய்து மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். பழச்சாறை சிறிது சிறிதாக சர்க்கரைப்பாகுடன் சேர்த்து முழுவதும் கரையும்வரை கலக்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் ஏற்றி 80 டிகிரி செ. வெப்பநிலைவரும்வரை சூடாக்கிய பின் குளிரச்செய்து நன்கு சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் அடைத்து பாதுகாத்து வைத்துப் பருகலாம்.

(தினமலர் தகவல்:

முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் க.மீனாட்சிசுந்தரம்,
வேளாண் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், குன்றக்குடி-630 206)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

 

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்