மாசிப்பட்ட பருத்தி சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…

கோடைப்பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் அதிக மகசூல் பெற கீழ்க்காணும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 • சம வயதுள்ள ரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும்.
 • இயன்றவரை பூச்சிநோய் தாங்கி வளரவல்ல எஸ்விபிஆர் 2 ரகத்தைத் தேர்ந்தெடுத்து பயிரிட வேண்டும்.
 • சாணிப்பால் கொண்டு விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும்.
 • பின் விதைப்பதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் பயன் படுத்தி விதைநேர்த்தி செய்யவும்.
 • காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் / வரிசைகள் அமைத்து விதைத்தால் மருந்தடிக்கும் போது மருந்துக் கலவை வீணாகாமல் தடுக்க உதவும்.
 • வயலைச் சுற்றிலும் உள்ள செடிகள், களைகளை (பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும்) அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்.
 • தொழு உரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய் (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன்வண்டு, தரைக்கூன் வண்டு, வேர்ப்புழு) தாக்குதலை குறைக்கும்.
 • விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (ஏக்கருக்கு ஒரு கிலோ) இடுவது வேரழுகல், வாடல் நோய் தாக்குதலைக் குறைக்கும்.
 • நட்ட 20 மற்றும் 30ம் நாள் வேப்பெண்ணெய் 1 சதம் கரைசல் தூரில் ஊற்றுதல் தண்டுக்கூன் வண்டு தாக்குதலைக் குறைக்கும்.
 • ஊடுபயிராக வாய்க்கால்கள் மற்றும் பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணைபுரியும்.
 • மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடுபயிராக மக்காச் சோளம், உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஓரப் பயிராக சோளம், ஆமணக்கு, சூரியகாந்தி பயிரிட வேண்டும். * இரட்டை வரிசையில் பருத்தியை பயிரிட்டு இடைவெளியில் ஒரு வரிசை உளுந்து அல்லது சீனி அவரை ஊடுபயிராக பயிரிடலாம்.
 • வயலைச் சுற்றி அரண் போன்று சோளம் நெருக்கமாக (உயரமாக வளரும் ரகம்) வளர்க்க வேண்டும். (தத்துப்பூச்சி, இலைப்பேன்கள், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி மற்றும் காய்ப்புழுவின் அந்துகள் வயலினுள் நுழைவதைத் தடுக்க).
 • சீனி அவரை ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழு தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறுவகை ஊடுபயிர்கள் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது.
 • வயலைச் சுற்றி ஆமணக்கு பயிரிட்டு புரடீனியாப் புழு முட்டைகளைச் சேகரித்து அழிக்கலாம். ஆமணக்கு புரடீனியா புழு தாய்ப்பூச்சிகளை முட்டையிட கவர்ந்திழுக்கும்.
 • வெண்டை, ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி பயிர்கள் முறையே புள்ளிக்காய்ப்புழு, புரடீனியா மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலைக் கவர்ந்திழுக்கும். அப்பூச்சிகளை அங்கேயே கட்டுப்படுத்தி விடவேண்டும்.
 • ஊடுபயிராக வாய்க்கால்களில் மக்காச்சோளம் பயிரிட கிரைசோபா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு துணை செய்யும்.
 • வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கே வெண்டை பயிரிட்டு சொத்தைக் காய்களைப் பறித்து அகற்ற வேண்டும்.

தினமலர் தகவல் – ந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.