மானாவாரியில் காராமணி (தட்டைப் பயிறு வகையறா) சாகுபடி

பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன.

கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம். இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும்.

காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது.

இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும். தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை.

  • கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும்  ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம்.
  • பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம்.
  • பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.

பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம்  இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை.

இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும். இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும்.

காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய  ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.

காராமணி பயிரிடுவது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அவர்களது  பகுதியில் உள்ள வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி தகவல் – திரு வி.ஜெயச்சந்திரன், வட்டார வேளாண் உதவி இயக்குநர், காவேரிப்பாக்கம்

தென்னையில் ஊடுபயிராக அசோலா

தழைச்சத்தை சேர்க்கும் நீர்பச்சை பாசியான அசோலா பொதுவாக குளம், குட்டை, கால்வாய், நெல்வயல்களில் மிதக்கின்ற நீர் நுண்தாவரம். பச்சை நுண்ம குச்சியான அனபீனா அசோலாவை தன்னிடம் ஒருமித்த இணைவாக அதனின் மேற்புற இலை இடுக்குகளில் கொண்டு உள்ளது. வளிமண்டல தழைச்சத்தை பச்சை நுண்ம குச்சி, அசோலாவில் சேர்த்துக்கொள்கிறது. அசோலா நீர் நுண்தாவரம் 0.2-0.3 சதம் தழைச்சத்தைக் கொண்டுள்ளது. (ஈர எடை அடிப்படையில்) எனவே அதனின் இதழ் இலைகள் செழிப்பான பசுந்தாள் உரமாக உள்ளது.

உற்பத்தி பெருக்கம்: அசோலாவானது வருடம் முழுவதும் வளரும் தன்மை உடையது. தென்னை மரங்களுக்கிடையே குழிகள் வெட்டி ஊடுபயிராக அசோலா வெற்றிகரமாக வளர்க்கப்படுகிறது. தென்னை நீலபச்சை பாசிக்கு தேவையான நிழலைத் தருகிறது. தென்னையின் அடிப்பகுதியிலிருந்து 5 அடி தள்ளி 6 அடி து 36 அடி து 3 அடி அளவுள்ள குழிகள் எடுக்க வேண்டும். இதுபோன்று 2 குழிகள் 2 அடி இடைவெளியில் வெட்டவேண்டும். ஒரு கிலோ புதிய பசுஞ்சாணம் குழியில் இட்டு நீர்விட வேண்டும். மேலும் நீர் அளவை 0.5 அடியாக வளர்க்கும் காலம் முழுவதும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். சூப்பர் பாஸ்பேட் கார்போபியூரான் 3 சதம் குருணை 15 கிராம் அடியுரமாக குழியில் இட்டு நீர்விட்டு கிளறி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குழிக்கு புதிய அசோலா இலை இதழ்கள் 100 கிராம் வீதம் வளர் இடுபொருளாக இடவேண்டும். பிறகு அசோலா வளர்ந்து உற்பத்தியாகும் புதிய உயிர்பெருக்க நீலபச்சை பாசியானது இட்ட 15 நாட்களுக்குப் பின் நீர்ப்பரப்பை மூடிவிடும். உயிர்பெருக்கமடைந்த நிலையில் அசோலாவை அறுவடை செய்து நெல்வயல்களுக்கு இடலாம். ஒவ்வொரு குழியிலும் 3 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது சிறு அளவிலான அசோலாவை (100 கிராம்) குழியில் அப்படியே விட்டு அடுத்த வளர்ப்பிற்கு வளர் இடுபொருளாக பயன்பட வழிவகுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சூப்பர்பாஸ்பேட் மற்றும் கார்போ பியூரான் 3 சதக்குருணை திரும்பவும் அடுத்தடுத்த அசோலா வளர்ப்பிற்கு கொடுக்கப்பட வேண்டும்.

இம்முறையில் அசோலா வளர்ப்பதால் அருகாமையிலுள்ள தென்னையின் வளர்ச்சி, மகசூல் பாதிப்புஏற்படுவதில்லை. எனவே விவசாயிகள் அசோலா மற்றும் நீலபச்சை பாசியை மலிவாக உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கும் பிற விவசாயிகளுக்கும் விற்று பயன்பெறலாம்.

தகவல்: த.அருள்ராஜன், கா.ராஜப்பன், சி.நடராஜன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்-614 906

தினமலர் செய்தி