அதிக மகசூல் தரும் நுண்ணூட்டக் கலவை: வேளாண் துறை யோசனை

நுண்ணூட்டச் சத்து அளிப்பதன் மூலம் தென்னையை அதிக மகசூல் பெறும் பயிராக மாற்ற முடியும் என்று

தென்னையில் நல்ல வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் என்பது மண்வளத்தை பொருத்தே அமைகிறது. நீண்டகால பயிரான தென்னை பல ஆண்டுகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இதனால் இதற்கு தொடர்ந்து நுண்ணூட்டச் சத்து தேவை. பொதுவாக விவசாயிகள், தழை, மணி, சாம்பல் சத்துகளையே பயிருக்கு அளிக்கின்றனர்.

நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், காப்பர், இரும்பு, மாங்கனீசம், போரான் போன்ற சத்துகளை நமது விவசாயிகள் மண்ணில் இடுவதில்லை. இதனால் நுண்ணூட்ட சத்துக்களின் பற்றாக்குறை ஏற்பட்டு தென்னையின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பை தென்னை சந்திக்கிறது. தென்னை நன்றாக வளர்ச்சி பெற்று, தொடர்ந்து மகசூல் தருவதற்கு நுண்ணூட்டச் சத்துகளை விவசாயிகள் அளிப்பது அவசியம்.

6 மாதத்திற்கு ஒரு முறை 300 முதல் 500 கிராம் வரை ஒரு மாத காலத்திற்கு நுண்ணூட்டக் கலவை இடுவது நல்லது.

மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 12 அடி ஆழத்தில் சுற்றிலும் நுண்ணூட்டக் கலவை இட வேண்டும். 5 வயதிற்குட்பட்ட தென்னை மரங்களுக்கு இதில் பாதி அளவு இட்டாலே போதும்.

நுண்ணூட்டச் சத்துகளை சூப்பர் பாஸ்பேட் உரத்துடன் கலந்து இடக்கூடாது. இது மிகவும் முக்கியம்.நுண்ணூட்ட கலவை தென்னை வளர்ச்சியை துரிதப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள மற்ற சத்துகளை எளிதில் வேருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.

நுண்ணூட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதினால் மரம் சீரான வளர்ச்சி அடைவதுடன், அதிக மகசூல் மற்றும் எண்ணெய் சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.

இரும்பு மற்றும் போரான் ஆகியன குரும்பை உதிர்வது மற்றும் ஒல்லிகாய்கள் காய்ப்பதைத் தடுக்கின்றன. நுண்ணூட்டச் சத்துக் காரணமாக செழிப்பாக வளரும்

தென்னை மரங்களில் இரியோபிட் சிலந்தி தாக்குதல் குறைகிறது.

மேலும் விவரம் பெற விரும்புவோர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை அணுகலாம்.

தினமணி தகவல் : திரு. வெ.ஜெயசந்திரன், உதவி இயக்குநர், தமிழக வேளாண்துறை, காவேரிபாக்கம்

தென்னைக்கு நுண்ணூட்ட உரம்

தென்னையில் காய்கள் அதிக மகசூலுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை அவசியம். இதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மரம் ஒன்றுக்கு

  • யூரியா 1:3 கிலோ சூப்பர் பாஸ்பேட்,
  • 2 கிலோ பாஸ்பேட் மற்றும்
  • பொட்டாஷ் 2 கிலோ

ஆகிய 3 உரங்களையும் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மேலும், தென்னைகளுக்கு இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், போரான், தாமிரம் ஆகிய நுண்ணூட்ட சத்துக்களும் தேவை. இவை குறைந்தால் ஓலைகள் சரிவர விரியாது. பசுமை குன்றி காணப்படும். குரும்பைகள் உதிரும். தேரைக்காய்கள் உருவாகும். பருப்பு திரட்சி இன்றி காணப்படும். மரத்தின் நுனி சிறுத்துக் காணப்படும்.   எனவே, தென்னைகளுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாட்டை சரிசெய்ய நுண்ணூட்ட உரமிட வேண்டும்.

தென்னை நுண்ணூட்ட உரத்தில் இரும்பு 3.8 சதவீதம், மாங்கனீஸ் 4.8 சதவீதம், துத்தநாகம் 5 சதவீதம், போரான் 1.6 சதவீதம், தாமிரம் 0.5 சதவீதம் உள்ளன.

மரம் ஒன்றுக்கு தென்னை நுண்ணூட்ட உரம் 1 கிலோ வீதம் இட வேண்டும். மரத்தின் அடியில் இருந்து 5 அடி தொலைவுக்கு வட்டப் பாத்தி அமைத்து மண்ணைக் கொத்தி விட்டு நுண்ணூட்ட உரத்தை பாத்தி முழுவதும் தூவி கிளறி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். நுண்ணூட்ட உரத்தை தொழு உரத்துடன் கலந்தும் இடலாம்.

நுண்ணூட்ட உரங்கள் இடுவதால் பூக்கள், குரும்பைகள் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். நன்கு விரிந்த பாளைகள் உருவாகும். தேரைக்காய்கள், ஒல்லிக் காய்கள் கட்டுப்படுத்தப்பட்டு திரட்சியான காய்கள் உருவாகும். அதிக விளைச்சல் கிடைக்கும்.

தென்னை நுண்ணூட்ட உரம் உடன்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் தேவையான அளவு இருப்புள்ளது என்றார் அவர்.

தினமணி தகவல் : த. பாரதி, வேளாண் உதவி இயக்குநர், உடன்குடி

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம்

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம் தேவை என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சி.​ செந்தமிழ்ச்செல்வன்.

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவது குறித்தும்,​​ நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது:

விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா 3 ​ பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.​ விதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ ​ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.​ பயிருக்கு ​ தேவையான பேரூட்டச் சத்துக்களுடன்,​​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.

ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் ​ காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.​ மேலுரமாக ​ இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.​ இதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.​ காய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.

பூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் 75 ​ நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.​ ​ இரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற ​ உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம்.

விவசாயிகளுக்குத் தேவையான விதைக் காய்கள் திண்டிவனம்-​ 7 ​(டி.எம்.வி-76) விருத்தாசலம்-​ 2 ​(வி.ஆர்.ஐ-2) உள்ளிட்ட விதை ரகங்கள் மற்றும் டி.ஏ.பி.​ அம்மோனியம் சல்பேட்,​​ போராக்ஸ்,​​ பிளானோபிக்ஸ் ஆகிய உரங்கள் பெரம்பலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.