இலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…

களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு உண்டு. அந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

agri2

நோய் பரவும் காரணிகள்

வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த நோய் எளிதில் நெல் பயிருக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் மண் மூலமாகவும், அதிகமான ஈரப்பதம் காரணமாகவும், மிதமான வெப்பம் இருக்கும் சூழல் மற்றும் பாசன நீர் மூலம் அடுத்த வயல்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

நோயின் அறிகுறிகள்

  • நோயின் தாக்குதல் முதலில் நீரின் மேற்பகுதியில் உள்ள இலை உறையின் ஓரங்களில் காணப்படும். இலைகளில் முட்டை வடிவத்தில் சாம்பல் பச்சை நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
  • பின்பு அவை வெண்ணிறப் புள்ளிகளாய் மாறும்.
  • மேலும் தாக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிற கடுகு போன்ற பூஞ்சாண விதைகளைக் காணலாம்.
  • இப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து படை படையாகத் தென்படும்.
  • இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும்போது இலை கரிந்து மடிந்து விடும்.

கட்டுபடுத்தும் முறைகள்

வயல்வெளிகள், சுற்றுப்புறங்களில் புல் மற்றும் களைச் செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சதுர நடவு (திருந்திய நெல் சாகுபடி) மேற்கொள்வதன் மூலம் இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தழைச்சத்து உரங்களை சமமாகப் பிரித்து இட வேண்டும். நோய் தாக்கிய வயலில் இருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும், ஊக்குவிக்கும் வகையில் நிலத்திற்கு அதிக அளவில் இயற்கை தழைச் சத்து உரங்களை இட வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்து சிகிச்சை

இந்த நோயை நன்கு கட்டுப்படுத்தக் கூடிய கார்பன்டாசிம் (50 டபுள்பி) என்ற பூசணக் கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் நடவு செய்த 45 முதல் 50 நாள்களுக்குப் பிறகு, அல்லது நோய் பாதிப்பு தென்பட்ட உடனும் மீண்டும் 15 முதல் நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் நீரில் கலந்து பயிரின் அடிப்பாகத்தில் உள்ள இலை உறைகள் மற்றும் தண்டுப்பகுதி நன்கு நனையும் வகையில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.

அல்லது ஏக்கருக்கு ஹெக்சோகோனசோல் 5 சதவிகிதம் இசி 500 மில்லி அல்லது புரோப்பிகோனசோல் 25 சதவிகிதம் இசி 200 மில்லி என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்க வேண்டும். அல்லது அசோசிஸ்டிரோபின் என்ற பூசணக் கொல்லி மருந்தை 200 மிலி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநர் சை.சுந்தரம், வேளாண் அலுவலர் செ.பரத்வாஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு

logo.png

மகசூல் அதிகரிக்க சிறந்த வழி திருந்திய நெல் சாகுபடி முறை

தருமபுரி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 45,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்தில் சராசரி நெல் உற்பத்தி 2,650 கிலோ என்ற அடிப்படையில் உள்ளது. இது சராசரி உற்பத்தித் திறனில் 50% மட்டுமே. எனவே, உற்பத்தித் திறனை உயர்த்த திருந்திய நெல் சாகுபடி முறையே சிறந்த வழி.

  • குறைந்த விதை,
  • இளம் நாற்றுகள் நடவு செய்தல்,
  • அதிக இடைவெளியில் சதுர முறையில் நடவு,
  • களைக் கருவி பயன்பாடு,
  • நீர்மறைய நீர்ப் பாய்ச்சுதல்

ஆகியவை இம்முறையின் சிறப்பு அம்சங்கள்.

நாற்றங்கால் பராமரிப்பு:

சாதாரண முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய, 20 கிலோ விதை தேவை. திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசென்ஸ், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒரு பாக்கெட் கலந்து விதை நேர்த்திசெய்ய வேண்டும்.

முளைப்பு கட்டி, பின் விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. 5செ.மீ., பரப்பு கொண்ட 8 மேடை பாத்திகள் அமைத்து, விதைகளை தூவி நாற்றாங்கால் மீது வைக்கோல் பரப்பி பூவாளி மூலம் 3 நாள்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பின்னர், வைக்கோலை நீக்கிவிட்டு சாதாரண முறையில் பாசனம் செய்ய வேண்டும். இப்படி தயாரிக்கப்பட்ட நாற்றங்காலில் நாற்றுகள் 14 நாள்களிலேயே தயாராகிவிடும்.

நடவு செய்தல்:

நன்கு சமப்படுத்தப்ட்ட வயலில் 14 நாள்கள் வயதுடைய இளம் நாற்றுகளை அதிக இடைவெளியில் சதுர முறையில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 20 குத்துகள் இருக்கும் வகையில் நடவு செய்ய வேண்டும்.

நடவு அடையாளமிடும் கருவி அல்லது அடையாளமிடப்பட்ட கயிறு பயன்படுத்தலாம்.

களைக்கருவி பயன்பாடு:

நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் கோனோ களைக் கருவி கொண்டு குறுக்கும், நெடுக்குமாக வரிசைகளுக்கு இடையே ஓட்டி களை நீக்கம் செய்ய வேண்டும். கருவிக்கு அகப்படாத களைகளை கையால் நீக்க வேண்டும். இதனால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. பழைய வேர்கள் அறுபட்டு, புதிய வேர்கள் தோன்றுகின்றன. அதிக தூர்கள் வெடிப்பதோடு பயிர் நல்ல வளர்ச்சி பெறுகிறது.

உர நிர்வாகம்:

இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்து நிர்வாகம் செய்ய வேண்டும். நடவு செய்த 15-வது நாள் முதல், நன்கு விரிந்த இளம் சோகையுடன் 10 இடங்களில் இலை வண்ண அட்டையில் உள்ள நிறங்களுடன் ஒப்பிட்டு சராசரி நிற எண்ணைக் குறிப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து இட வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை இவ்வாறு சோதிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

நீர் மறைய நீர்ப் பாய்ச்சுதல் என்ற அடிப்படையில் மஞ்சுக்கட்டும் பருவம் வரை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர், ஒரு அங்குல நீர் இருக்கும் வகையில் பாசனம் செய்ய வேண்டும். நெற்பயிருக்கு பரிந்துரைக்கப்படும் இதர தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை பின்பற்றினால் சாதாரண நெல் நடவு முறையில் பெறும் மகசூலைவிட 25% கூடுதல் மகசூல் பெறலாம்.

ஏக்கருக்கு 750 கிலோ கூடுதலாக கிடைக்கும். எனவே, விவசாயிகள் அனைவரும் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்தி : 15 Sep 2011 12:00:00 AM IST

தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கா.ராஜன்