தரிசு களர் உவர் நிலங்களை மேம்படுத்தும் வழிமுறைகள்

களர் உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். நுண்ணுயிர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால்தான் இடப்படும் கம்போஸ்ட் மற்றும் தழை உரங்கள் சிதைக்கப்பட்டு வளரும் பயிர்களுக்கு கிடைக்கும்.

மேலும், இம் மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பயிர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருத்தல் வேண்டும்.

களர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடவு செய்த 10 நாள்களில் நீலப்பச்சைப்பாசி என்னும் ஒரு வகைப் பாசியை இடுவதால் நெல் பயிர் நன்கு வளரும்.  இப் பாசி களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. மண்ணின் இயக்கம்  (டஏ) 7.5 முதல் 10 வரை உள்ள நிலங்களில் இது நன்கு வளரும்.  இந்தப் பாசியை மண்ணில் இடும்போது மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இப் பாசி ஆக்சாலிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலத்தை வெளியிடுகிறது.

இந்த அமிலம் மண்ணின் காரத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ நீல பச்சைப்பாசியை இடுவதால், அது 10 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பித்து, அதில் வளரும் நெல் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம்.

தினமணி தகவல் – திரு சரவணன், வேளாண்மை அலுவலர், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், கோவில்பட்டி

தரிசு, களர், உவர் நிலங்களை மானிய உதவியுடன் சீரமைக்கலாம்

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒருசில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன.

அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட்  பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும்.

வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும்.

நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே மண்ணில் ஊறி வடிகாலில் சேரும்படி செய்ய வேண்டும். இதற்கு ஓரிரு நாள்களாகலாம். மீண்டும் குறைந்தபட்சம் இதை 4 முறையாவது செய்ய வேண்டும்.

பிறகு மண்ணில் ஈரம் காய்வதற்கு முன் சணப்பு அல்லது தக்கை பூண்டை விதைத்து பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும். பின்னர் வழக்கம்போல் விவசாயிகள் விரும்பும் பயிரை சாகுபடி செய்யலாம்.

மானியம்

தமிழக அரசு களர், உவர் நிலச் சீர்திருத்த திட்டத்தின் மூலம் களர், உவர் நிலங்களால் பாதிக்கப்பட்ட வயல்களில் மண் மாதிரி எடுத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஜிப்சம் மற்றும் ஜிங் சல்பேட் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது.

மேலும் வடிகால் அமைக்க ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 மானியம் வழங்கப்படுகிறது.

வேலூர்

தற்போது 2010-11-ம் ஆண்டில் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் புதுப்பட்டு, வேடல், அன்வர்திகான்பேட்டை, கைலாசபுரம் சாலை, மின்னல், வையலாம்பாடி, சேரி ஐயம்பேட்டை, தச்சம்பட்டறை மற்றும் பெருவளையம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், ஒன்றியத்தில் லாடாவரம், சிறுவள்ளூர், வீரளூர், கிடாம்பாளையம், காம்பட்டு, படாகம் மற்றும் அனையாலை, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் பிலாசூர், கொரல்பாக்கம், கரைப்பூண்டி, மட்டப்பிறையூர் மற்றும் ராந்தம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிவகுமார் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் – திரு சிவகுமார் சிங், வேளாண்மை உதவி இயக்குநர், வேலூர்

முந்திரி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: அரசு மானியம்

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி பண்ருட்டிக்கு அதிக அளவில் அந்நிய செலவாணியை ஈட்டிக்கொடுத்து, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது முந்திரி சராசரி மகசூல் ஹெக்டருக்கு 700 கிலோ என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முந்திரியில் ஹெக்டருக்கு 2000 கிலோ மகசூல் எடுக்க கீழ்க்கண்ட புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும்.

ஒட்டு முந்திரி கன்றுகளை (வி.ஆர்.ஐ.3), 5மீ ல 4மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 500 கன்றுகள் வீதம், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடவு செய்ய வேண்டும். நடவு குழியில் மேல் மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து குழியை நிரப்ப வேண்டும். 3 முதல் 6 மாதம் வயதுள்ள கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். நடவின் போது ஒட்டு கட்டியப் பகுதி தரைமட்டத்தில் இருந்து 5 செமீ மேலேயும், அப்பகுதி உடையாமலும், நேராகவும் வளர திடமான ஊன்று குச்சிகளை நட்டு கயிற்றால் கட்ட வேண்டும்.

பண்ருட்டி வட்டாரத்தில் புதிய பரப்பில் ஒட்டு முந்திரி பயிர் செய்தால் ஹெக்டருக்கு முதல் வருடம் ரூ.19,710-க்கு தோட்டக்கலை பண்ணையில் இருந்து முந்திரி செடிகளும், தமிழ்நாடு அரசு டான்கோப் மூலம் இடுபொருள்கள், நடவு மற்றும் பராமரிப்பு செலவும் வழங்கப்படும்.

மேற்கண்ட முறையில் முந்திரி நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள வேளாண்மைத் துறை வளாகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தேவை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்து பயனடையும்படி வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் : திரு வி.ராமலிங்கம், தோட்டக்கலை உதவி இயக்குநர், பண்ருட்டி