எளிய முறையில் பயறு வகை சாகுபடி

பயறுவகைப் பயிர்களில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இப் பயிர்களை எளிய முறையில், அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். குறைந்த செலவில், அதிக மகசூலும் பயறுவகைப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உளுந்து, நஞ்சை தரிசில் மட்டுமே பயிரிடப்படுகிறது. மேலும், பயிர் சாகுபடி மற்றும் அறுவடையின்போது குறைந்த அளவு கவனம் செலுத்தப்படுகிறது. இப்போது சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயறு வகைகளில் இருந்து, ஹெக்டேருக்கு சுமார் 400 கிலோ என்ற அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

blackgram

ஆகவே, பயறுவகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் வரப்போரத்திலும் பயிரிடலாம். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உரம், களை, நீர் நிர்வாகம் செய்து காலத்தே அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 25 கிலோ என்ற விதை அளவில், நெல் அறுவடைக்கு 5-10 நாள்களுக்கு முன் மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். வயல் மெழுகு பதத்தில் இல்லை என்றால், தண்ணீர் பாய்ச்சி மெழுகு பதம் வந்ததும் விதைக்கலாம்.

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 10 கிராம் என்ற அளவில் அல்லது டிரைகோடெர்மாவிரிடி என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்க வேண்டும்.

ulundu உளுந்து

காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகள் மூலம் பூமியில் நிலைப்படுத்துவதற்காக ரைசோபியம் என்ற உயிர் உரத்தையும், மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கிடைக்கச் செய்ய பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தையும் ஹெக்டேருக்கு 3 பாக்கெட் வீதம் 400 மி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, விதையுடன் கிளறி நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி விதைக்க வேண்டும்.

தழைச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும், மணிச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும் பயிருக்கு உரமிட வேண்டும். பயறு நுண்ணூட்டம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்படும் பயறு வொண்டர் நுண்ணூட்டம் ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.

இடைவெளி 3×10 செ.மீ. என்ற அளவில் சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும். நன்செய் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்யும்போது கண்டிப்பாக 2 சதவீத டிஏபி உரக்கரைசல் இலை வழியாக தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

டிஏபி

பூக்கும் நிலையில் ஒரு முறையும், பிறகு 15 நாள்கள் கழித்து மறுமுறையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி உரம் தெளிப்பதால் பூ, பிஞ்சு உதிர்வது கட்டுப்படுத்தப்படும். தழைச்சத்து குறைவு உடனடியாக சரி செய்யப்படுகிறது.

ஒரு சமயத்தில் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது.

பயறு அறுவடை செய்யும்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து, பின் வெயிலில் காய வைத்து கையிலாலோ அல்லது இயந்திரங்களை வைத்தோ மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு தரைமட்டத்திற்கு வெட்டுவதால் மண்ணில் இருக்கும் வேர்கள் மண்வளத்தைப் பெருக்கும். இயந்திரத்தினால் அறுவடை செய்யும்போது வயலில் மண்ணின் ஈரத்தன்மை மிதமாக உள்ளதா என்று கண்டறிந்துவிட்டு அறுவடையை மேற்கொள்ளலாம்.

அறுவடை இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 1 ஏக்கர் உளுந்து மற்றும் பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து, தானியங்களை சுத்தம் செய்து பிரித்து எடுக்கலாம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

மேலும், பயிரை தக்க தருணத்தில் அறுவடை செய்து, மேலான பலனைப் பெறமுடியும். இவ்வாறு பயறு சாகுபடி செய்வதால் குறைந்த நாள்களில் எளிய செலவில் நிறைந்த மகசூல் பெறலாம்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்
பூச்சிக் கொல்லி

 

விதை – நாற்றங்கால்

 

logo.png

Advertisements

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற டிஏபி

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயறு வகைப் பயிர்கள்: கொண்டைக் கடலை, உளுந்து, தட்டைப் பயிறு, அவரை, பாசிப் பயறு, கொள்ளு, துவரை, சோயா மொச்சை ஆகிய பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் பெரிதும் அவசியமானது.

டிஏபி கரைசல் தயாரிப்பு: டிஏபி கரைசலைப் பயிர்களுக்கு தெளிப்பதைவிட அந்தக் கரைசலைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறிது அளவு மாறினாலும் கரைசல் தெளித்தும் எந்தவிதப் பயனும் கிடைக்காது. அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே, கரைசல் தயாரிப்பில் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஓர் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரம் போதுமானது. 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து வைக்க வேண்டும். இரவு நேரத்தில் 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும். காலையில் இந்தக் கரைசலை கலக்காமல் இருக்க வேண்டும். மேல் புறத்தில் தெளிந்திருக்கும் கரைசலைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.

கைத் தெளிப்பான்: டிஏபி கரைசலைத் தெளிக்கும்போது விசைத் தெளிப்பான் பயன்படுத்தக் கூடாது. விசைத் தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாது. நுரையே அதிகமாக வரும். எனவே, கைத் தெளிப்பான் பயன்படுத்தியே தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். வெயில் இருக்கும் தருணத்தில் தெளித்தால் எந்தவிதப் பயனும் தராது.

எப்போது தெளிப்பது?: பயறு வகைப் பயிர்களை நடவு செய்த 30-வது நாளில் ஒரு முறையும், 45-வது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறையும் தெளிக்கலாம்.

பயன்கள் என்ன?: பொக்கு காய்கள் வராது. பூக்கள் கொட்டாது. காய்கள் நன்கு திரட்சியாக வளரும். கூடுதல் மகசூல் பெறலாம். சாதாரணமாக ஒரு ஹெக்டேரில் 620 கிலோ பயறு வகைகள் கிடைத்தால் 2 சதம் டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதம் வரை மகசூல் கிடைக்கும்.

அரசு மானியம்: டிஏபி தெளிப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திடத்தின் மூலம், அரசு மானியமும் வழங்கப்படுகிறது. டிஏபி கரைசல் தயாரிப்புக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படுகிறது. விவசாயி கூடுதலாக ரூ.200 மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதேபோல், டிஏபி தெளிக்கும் பணிக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு 2 ஆள்களைப் பயன்படுத்தினால் கூலியாக ரூ.600 வழங்க வேண்டியிருக்கும். அதில், 50 சதத்தை அரசே மானியமாக வழங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தில்…: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு 26,157 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், 860 ஹெக்டேர் பயிருக்கு அரசு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கவும் வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பயிற்சி: டிஏபி கரைசல் தயாரிப்பு மற்றும் தெளிக்கும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக தொழில்நுட்பப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட மாதேமங்கலம் குட்டூர் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கந்தசாமி என்பவரது விளைநிலத்தில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 50 விவசாயிகளை அழைத்து டிஏபி கரைசல் தெளிப்பது குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண்மைத் துறை துணை இயக்குநர் பி. வேணுகோபால், வேளாண்மை அலுவலர் எம். மணிராஜன், உதவி அலுவலர்கள் பி. மாதேஷ், ஜி. செல்வம், ஆர். சதாசிவம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் 108 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தவறாமல் 2 சதம் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும் என்று வேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.