வெற்றிகர விவசாயம் பயோடெக் விவசாயமுறை

என் பெயர் கே.சண்முகநாதன், விவசாயி, மேலதவிட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர் அஞ்சல், தொட்டியம் தாலுகா, திருச்சி-621 207-ல் இருந்து எழுதுகிறேன்.

தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பினாலும் ரசாயன விவசாயத்தில் கிடைக்கும் அதிக விளைச்சலும், பூச்சி, நோய் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வும் இயற்கை முறை விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மேலும் இயற்கை முறை விவசாயத்தில் வேலை ஆள் தேவையும் உழைப்பும் அதிகம் என்பதும் மிக முக்கிய காரணமாகும்.

எனவே விவசாயிகள் ரசாயன முறையில் பெறும் விளைச்சலையும், பூச்சி நோய்களுக்கு உடனடி தீர்வையும், உயிரி தொழில்நுட்ப முறை விவசாயத்தில் வெற்றிகர ஆலோசனைகளையும் அதற்கான இடுபொருட்களை நேரடியாக வியாபாரிகளின்றி விவசாயிகளுக்கே வழங்குகிறது என தினமலர் விவசாயமலர் மூலம் அறிந்து அந்நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.

வாழைக்கு ஆரம்பத்தில் தொழு உரத்திற்கு பதிலாக ஏக்கருக்கு 100 கிலோ பயோடைமண்ட் பயன்படுத்தினேன். தற்சமயம் நன்கு மக்கிய தொழு உரம் குறைந்த விலையில் கிடைக்காததால் பயோடைமண்ட் அதே விலையில் வாங்கி பயன்படுத்தலாம். இதனால் களை விதைகளையும், பூச்சிநோய் கிருமிகளையும் தவிர்த்துவிடலாம். மேலும் பயோடைமண்ட்-ன் சத்துக்கள் உடனடியாக கிடைத்துவிடுகிறது. ஏனெனில் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஹார்மோன்கள், என்சைம்கள், அமினோ கந்தகம், துத்தநாக சத்துக்களை மண்ணிலிருந்து பயிருக்கு அளிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் பயோடைமண்ட்-ல் உள்ளன. ஆனால் பயோடைமண்ட் அதிநவீன உயிரி தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப் படுவதால் ரசாயன உரத்துடன் கலந்து பயன் படுத்தும்போது பாக்டீரியாக்கள் அழிந்துவிடுவதில்லை என்பது பயோடைமண்ட்-ன் தனிச்சிறப்பு.

நாம் எப்போதெல்லாம் ரசாயன உரம் இடுவோமோ அப்போதெல்லாம் அதை பாதியாக குறைத்துக்கொண்டு அதனுடன் பயோடைமண்ட் 10 கிலோ ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வாழையில் பயன்படுத்தியபோது ஒரு தார் வாழையில் குறைந்தபட்சம் 2 (அ) 3 சீப்புகள் அதிகமாக கிடைத்ததால் பெரிதும் மகிழ்ந்தேன். எனவே எடை கூடி நல்ல லாபம் கிடைத்தது. வருமானம் 30% கூடியது.

இவ்வாறு ஆலோசனைப்படி செய்வதால் சாகுபடி செலவு கூடாமலேயே அதிக விளைச்சல் நல்ல தரத்துடன் கிடைக்கிறது. நான் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதைப் பார்த்த விவசாயிகள் காய்கறி, தென்னை, பழ சாகுபடி, பூ சாகுபடிக்கும் பயன்படுத்தி நல்ல பயன் பெறுகின்றனர்.

தொடர்புக்கு: சவுதம் சென்டர், அவினாசி ரோடு, கோவை.  88075 46989, 94879 01515.
-கே.சத்தியபிரபா, 97501 20222, 94865 85997.

தினமலர் செய்தி.

(குறிப்பு: தினமலரில் வந்துள்ள வாசகர் கடிதம். தனி ஒரு நிறுவனத்திற்கு ஆதரவு கடிதம் போல் தோன்றுகிறது. அனுபவஸ்தர்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.)

மஞ்சளில் அதிக மகசூல்: விழுப்புரத்தில் ஒரு சாதனை பெண் விவசாயி

விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக ரூ.11.80 லட்சம் ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.

தியாகதுருகம் ஒன்றியம், ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா.  தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் மஞ்சள் கிழங்கு பயிரிட்டார். 2009 ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உரிய இடைவெளியில் நடவு செய்து, அடியுரமாக தொழு உரம் 5,500 கிலோ, விரிடி 10 கிலோ, சூடோமோனஸ் 10 கிலோ இட்டு நடவு செய்துள்ளார்.

மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கிய சொட்டுநீர் பாசனக்கருவி அமைத்து நீர்வழி உரமளிக்கும் டாங்க் மூலம் வாரத்துக்கு இருமுறை நீரில் கரையும் உரத்தை இட்டு, 4 மூட்டை (100 கி) சல்பேட்டா, 2 மூட்டை (50 கி) பொட்டாஷ் ஆகியவை மேலுரமாக போட்டுள்ளார். மேலும் சூடோமோனஸ் 1 லிட்டர் மற்றும் விரிடி 1 லிட்டர் திரவங்களை உரடாங்க் மூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கோகிலா கூறியது: உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு முறைகள் உள்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் தோட்டக்கலை உதவி இயக்குநரின் நேரடி வயல் ஆய்வின் மூலம் பெற்று சீரான நடவடிக்கை மேற்கொண்டேன். எனது மஞ்சள் பயிர் 2010  மார்ச் இறுதி வாரத்தில் அறுவடைக்கு வந்தது. அறுவடையின் போது எனக்கு விரல் மஞ்சள் 2 ஏக்கருக்கு 26 ஆயிரம் கிலோ மற்றும் உருளை மஞ்சள் 4 ஆயிரம் கிடைத்தது. விரல் மஞ்சளை ஒரு கிலோ ரூ.40 வீதமும், உருளை மஞ்சளை ஒரு கிலோ ரூ.60 வீதமும் விற்பனை செய்தேன். மொத்த வருமானமாக ரூ.12.80 லட்சம் கிடைத்தது. இதற்காக நான் ரூ.1 லட்சம் செலவு செய்தேன். இதில் என்னுடைய சாகுபடி செலவு போக நிகர வருமானமாக ரூ.11.80 லட்சம் பெற்றுள்ளேன் என்றார்.

இது குறித்து தியாகதுருகம், தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் பியூலா ராஜா கூறியது: எங்களது அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாக பயன்படுத்தியதால் தான் யாரும் எதிர்பாராத அளவுக்கு கோகிலா, 2 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு ஏறத்தாழ ரூ.12 லட்சம் லாபம் பெற்றுள்ளார் என்றார்.

தினமணி தகவல்