கல்பாக்கத்தில் ஒரு ஒருங்கிணைந்த விவசாயம்

கல்பாக்கத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கரியச்சேரி. அவ்விடத்தைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மனைவி திருமதி சபீதா ராணி தாவரவியல் பட்டம் பெற்றவர். 2000ம் வருடங்களில் அலுவலகப் பணி காரணமாக கிட்டத்திட்ட விவசாயம் கைவிடப்பட்டது.

சுனாமியின் கோரதாண்டவத்திற்கு இவரகள் கிராமம் ஆளாக, படிப்புச் சான்றிதழ் கூட மிச்சமின்றி அனைத்தையும் இழந்திருக்கின்றனர்.  மிச்சம் திரு பாலாஜியின் அலுவலகப் பணி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சான்றிதழ்.

இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்தத் தம்பதியினர் இயற்கையை நம்பியதுதான் இவ்விடத்தின் திருப்பம். நீர் வடியாத இவர்கள் நிலத்தைச் சுற்றி பொக்லைன் கொண்டு தோண்டி ஆழமான வடிகால்களை அமைத்துள்ளனர்.
தற்பொழுது 4 மாடுகள், 3 கன்றுகள், 11 ஆடுகள், 40 கோழிகள் (கிரிராஜா, நாட்டுக்கோழி, வனராஜா), 5 வான்கோழிகள், 6 கின்னிக் கோழிகள், 14 காடை , 3 மணிலா வாத்துக்கள்,  8 நாட்டு வாத்துக்கள்,  16 காதல் பறவைகள், 6 ஆப்பிரிக்கன் கிளி, 10 காக்டைல் என்றும் சிறு கிளிகள் என்று அவர்கள் வாழ்விடத்தை இயற்கை கலை கட்டியிருக்கிறது.

கிராமியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று தங்காளால் ஆன பங்களிப்பைச் செய்யும் இவர்கள் “நமது விவசாயிகள் ஒவ்வொருவரும் தினசரி வருமானம், வார வருமானம், வருட வருமானம் என்று தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் தற்சார்புடன் வாழ இயலும்” என்று கூறுகின்றனர்.

இதற்கான முறைகள்

  • பால், முட்டை, கீரை – இவைகளிலிருந்து தின வருமானம்
  • கொடி வகை (பீர்க்கன், பாகல், புடல்) – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
  • தென்னை, கறிவேப்பிலை – இரு மாதங்களுக்கு ஒரு முறை
  • பப்பாளி, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை – கூடிய காலஇடைவெளி
  • மா, பலா போன்றவை – வருட வருமானம்
  • பயன்தரு மரங்கள் – பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருத்த வருமானம்.

சொல்வதுடன் மட்டுமல்லாமல் செயல் படுத்தியும் உள்ளனர்.

பள்ளிகளில் செயல்முறை விளக்கங்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு பயிற்சிகள் என்று சமூக சிந்தனையுடன் செயல்படும் இவர்கள் தங்கள் ஊர் பள்ளியை சுற்றுச்சூழல் நட்புப் (eco friendly) பள்ளியாக மாற்றியருக்கின்றனர். எடுத்த சில பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், இயற்கைவிவசாயத்தை விடாமல் தொடர்ந்திருக்கின்றனர்.

இவர்கள் தோட்டத்தில் விளையும் பச்சைப் பயிறு, காய்கறிகள், அரிசி, இலைகளை கல்பாக்கத்திலேயே விற்றுவிடுகின்றனர். இவர்களிடம் அசோலா குழி ஒன்று உள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக அதை அளிக்கின்றனர். நெல் சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் இந்த அசோலாவை விரும்பி உண்கின்றனர்.

இவர்கள் பயிர் பாதுகாப்பிற்கு இஞ்சி – பூண்டு கசாயம், பஞ்ச கவ்யா போன்றவைகளைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். அவை தவிர அசிட்டோபாக்ட்டர் (கறுப்பு யூரியா), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், மொபலைசர், சூடோமொனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பி.டி, கிரப்நில் போன்ற உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

மீன் வளர்ப்பிலும் கால் வைத்துள்ளனர். இவர்களது கிணற்றில் வலை இறக்கி (மிதவை போல) 50 விரால் குஞ்சு விட உள்ளனர். வீட்டிற்கு முன் உள்ள குட்டையில் 200 கட்லாவும் 200 காமன் கார்ப்பும் உள்ளன. இவைகளுக்கு பச்சரிசித் தவிடு, புண்ணாக்கு போன்றவை கொடுத்து வளர்த்து வருகின்றனர்.

கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்திலிருந்து (KVK) ஆலோசனை மையத்திலிருந்து ஆலோசனை பெறுகின்றனர்.

இவர்கள் செய்த வேர்க்கடலை சாகுபடியில் செலவு போக ஏக்கருக்கு 12000 கிடைத்துள்ளது; ஏக்கருக்கு 25 மூட்டைகள் (75 கிலோ) கிடைத்துள்ளன. ஸ்வீட் கார்ன்-ஐக் கூட இவர்கள் விடவில்லை. இது தவிற இயந்திர நடவில் பொன்னி, ADT 43, ADT 37 (குண்டு அரிசி), சீரகச் சம்பா, சிவப்புக் கார், அன்னம் (புதிய ரகம்) போன்றவற்றையும் சாகுபடி செய்கின்றனர்.

சாண எரிவாயு வைத்துள்ளனர். ஸ்லரியை பஞ்ச கவ்யா தயாரிக்கவும் உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.

வயல் வரப்போரங்களில் வெட்டிவேர், லெமன் கிராஸ், கோ4, அவுரி, சணப்பு, க்ளைரிசீடியா என்ற பெரும்பாலும் கால்நடைகளுக்கு உதவும் தீவன வகைகளைச் சாகுபடி செய்துள்ளனர்.

தங்களைப் பார்த்து மற்றவர்களும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கும் இவர்களின் செயலில் லாப நோக்கும் இல்லை. வியாபார உத்தியும் இல்லை. நூறு சதவீத சேவை மட்டுமே.
திரு. டி. பாலாஜி 94453 97577
(தமிழக விவசாயி உலகம்)

அறுவடைக்கு அப்புறம் என்ன செய்யலாம்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் எடீடி 45 நெல், நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. பெருவெட்டு நெல் அம்பை 16ம் நல்ல மகசூல் கொடுத்துள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். அணைக்கட்டுகளிலும், கண்மாய்கள் மற்றும் கிணறுகளிலும் தண்ணீர் வசதி சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை கீழ்க்கண்ட பயிர்களை சாகுபடி செய்ய ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

நெல் சாகுபடி:

பாசன வசதி நல்லபடியாக இருக்குமிடங்களில் தைரியமாக நெல்லினை சாகுபடி செய்யலாம். தற்போது குறுகிய கால நெல் ரகங்களான ஜே-13 மற்றும் ஆடுதுறை 36 நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். பச்சரிசிக்கு ஏற்ற கர்நாடகா பொன்னியை சாகுபடி செய்யலாம். ஆனால் இது பூஞ்சாள வியாதி தாக்குதலால் பாதிக்கப்பட்டு கருப்பு நெல் விழும். இதை கவனித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும். அடுத்து எல்லா பட்டங்களுக்கும் ஏற்ற 100 நாள் நெல்லாகிய ஜே13 போடலாம். தவறாமல் பலன் தரக்கூடிய ஜே13 நெல் ரகத்தைப் பற்றி மதுரை விவசாயிகள் நன்கு அறிவார்கள். அடுத்து ஆடுதுறை 45 ரகத்தை விவசாயிகள் போட விரும்புகின்றனர். இருப்பினும் பூஞ்சாள நோய் வராமல் தடுக்க திறன் பெற்றவர்கள் சாகுபடியில் ஈடுபடலாம்.

காய்கறி சாகுபடி:

தற்போது காய்கறி சாகுபடி செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். ஆனால் காய்கறி சாகுபடி கடுமையானது. விவசாயிகள் பாடுபட்டு காய்கறி சாகுபடி செய்யலாம். குறுகிய கால காய்கறியான வெண்டையை சாகுபடி செய்து அதில் ஊடுபயிராக சீனி அவரையை (கொத்தவரை) சாகுபடி செய்யலாம். இப்பயிர் மாசி மாதத்தில் நல்ல மகசூல் தருகின்றது. வெண்டையில் இருபது அறுவடைகள் வரை கிடைக்கும். காய்கறி சாகுபடியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் குறுகிய காலத்தில் ரூ.8,000 வரை லாபம் எடுக்கலாம்.

உளுந்து சாகுபடி:

தை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். பாசன வசதி குறைவாக இருக்கும் இடத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். விவசாயிகள் நஞ்சை நிலத்தை உழுது புழுதியாக்கி டி9  உளுந்தினை (வயது 90 நாட்கள்) விதைக்கலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். நிலத்திற்கு தொழு உரத்தோடு உயிர் உரங்களையும் அடியுரமாக இடலாம். வளர்ந்த செடிகள் மேல் டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம். சங்கு பருவத்தில் பூக்கள் தோன்றும்போது தெளிக்கலாம். பூச்சிகளை அழிக்க செவின் தூள் அல்லது எண்டோசல்பான் மருந்து தெளிக்கலாம். ஏக்கரில் 300 கிலோ மகசூல் கிட்டும். உளுந்திற்கு நல்ல விலை கிடைக்கின்றது. நெல் பயிர் அறுவடை செய்ய இருக்கும் இடத்தில் உளுந்தினை தூவலாம். தஞ்சாவூர் விவசாயிகள் இம்முறையை அனுசரிக்கின்றனர். ஆடுதுறை 2, 3, 4 போன்ற ரகங்களை நெல் தரிசில் சாகுபடி செய்யலாம். விதை விதைக்கும்போது மண் மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். உளுந்து சாகுபடி நஞ்சை நிலத்தின் வளத்தை கூட்டுகின்றது.

சணப்பு சாகுபடி லாபம் தரும்:

சணப்பு சாகுபடியில் கிடைக்கும் மகசூலான விதைகளை விற்று லாபம் பெறலாம். விதைகளை விதைத்து சணப்பு செடிகளை பூமியில் மடக்கி உழும்போது ஏக்கரில் 10,000 கிலோ தழை கிடைக்கும். ஏக்கரில் 37 கிலோ தழைச்சத்து கிடைக்கும். வாழை சாகுபடி செய்யும் நிலத்தில் சணப்பு செடிகளை உழுதுவிட்டால் வாழையை தாக்கும் நூற்புழுக்கள் அழிந்துவிடும். மணிலா சாகுபடியில் சணப்பு உதவுகின்றது. பூமியில் சணப்பினை விதைத்த பின் வளர்ந்து வரும் சணப்பு செடிகளை பூமியில் உழுதுவிட்டால் மணிலா பயிரை பூச்சிகள் தாக்காது.

மேலும் கிடைக்கும் மணிலா மகசூல் நல்ல தரம் கொண்டதாக இருக்கும். சணப்பினை விதை விதைத்து 80-85 நாட்களில் அறுவடை செய்யலாம். விதைகள் பிடிக்கும் இடம் செடியின் மேல் பாகத்தில் இருப்பதால் அந்தப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விதையை பிரித்து எடுத்துவிடலாம். இதனை பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.

மீதமுள்ள செடிகளை பூமியில் உழுது பூமியின் வளத்தை கூடுதலாக்கிவிடலாம். ஏக்கரில் 1,600 கிலோ மகசூல் கிட்டும். சணப்பு சாகுபடியில் நல்ல லாபம் கிட்டும். தற்போது மதுரை பகுதியில் நிலவும் சூழ்நிலை விவசாயிகளுக்கு தங்கள் திறமையை எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாகும். விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உதவும். (1) கடுமையான உழைப்பு (2) விஞ்ஞான தொழில்நுட்பங்களை அனுசரித்தல் (3) செயல் ஆற்றல் திறன் அல்லது நிர்வாகத்திறன்.