கொத்தமல்லி பயிரிடும் முறை

கொத்தமல்லி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதற்கும், சிறந்த மருத்துவ குணமுள்ள பயிராகவும் உள்ள கொத்தமல்லியை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

மக்களின் அன்றாட சமையல் தேவையில் முக்கிய பங்கு வகிப்பது கொத்தமல்லி. சில மாதங்களாக மார்க்கெட்டில் கொத்தமல்லிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. 400 கிராம் எடை கொண்ட ஒரு கொத்தமல்லி கட்டு ரூ. 15 முதல் ரூ.60 வரை நாளுக்கு ஒரு விலை விற்கிறது. விவசாயிகள் முறையாக கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் கொழிக்கலாம்.

கொத்தமல்லி எல்லா பருவத்துக்கும் ஏற்ற சாகுபடி தன்மை கொண்டது. தாமதமாக பூத்து அதிக மகசூலை தரக்கூடியது. செடியின் அடி பாகத்தில் இருந்து அதிக அளவு தூர் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிக கிளைகளை கொண்டிருப்பதால் பூப்பதற்கு முன்னதாகவே அறுவடைக்கும் ஏற்றதாக உள்ளது. செடிகள் பூத்த பின்னும் பக்கக் கிளைகளில் உள்ள இலைகள் சமையலுக்கு பயன்படுகிறது.

ஒரே முறையாக ஏக்கர் கணக்கில் பயிரிடாமல் 20 முதல் 25 சென்ட் வரை பிரித்து 15 தினங்களுக்கு ஒரு முறை விதைத்தால் ஆண்டுதோறும் அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும். விதைத்த 30 முதல் 40 நாளில் அறுவடைக்கு தயாராவதால் குறுகிய கால பணப் பயிராகவும் கொத்தமல்லி கருதப்படுகிறது.

பருவம்:

மருத்துவ குணத்துக்காக பயிரிட்டால் ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றதாகும்.

சமையல் தேவைக்காக பயிரிடுவதென்றால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ விதைகள் விதைக்க வேண்டும்.

மண் வகை:

மணல் சார்ந்த செம்மண், வண்டல் மண் உகந்ததாகும்.

விதைப்பு:

பொதுவாக விதை தூவி சாகுபடி செய்யலாம். இருப்பினும் மேட்டுக்கால் பாத்தி அமைத்து 20 செ.மீ. ஷ் 15 செ.மீ. இடைவெளி விட்டு அந்த இடைவெளியில் உடைக்கப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 8 முதல் 15 தினங்களில் முளைக்கத் தொடங்கும்.

விதை நேர்த்தி:

மானாவாரி பயிருக்கு பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்னும் வேதிப்பொருளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கரைத்து விதையை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பாஸ்போ பேக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரங்கள் 600 கிராம் என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கான விதைகளுக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல் (அடி உரம்):

தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டன், தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ இட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ, பொட்டாஷ் 33 கிலோ இடவேண்டும்.

மேலுரம்:

10 கிலோ தழைச்சத்து மற்றும் 22 கிலோ யூரியா விதைத்த 30 நாளில் இட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

விதைத்த உடன் 1 முறை, விதைத்து 3 நாளில் ஒரு முறை அதை தொடர்ந்து 7 முதல் 10 நாள்கள் வரை நீர்பாசனம் செய்ய வேண்டும்.

களைக்கொல்லி இடுதல்:

ப்ளூகுளோரிலின் 700 மில்லி லிட்டர் அளவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இட வேண்டும். விதைத்த 30 நாளில் ஒரு குத்துக்கு 2 செடிகளை விட்டு விட்டு மீதமுள்ள செடிகளை பிடுங்க வேண்டும்.

இதுபோன்ற முறைப்படி, விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக் கலை அலுவலர் பாபுவை 94442 27095 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி தகவல்

பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெற ஆலோசனை

களைக் கொல்லிகள் என்பவை,​​ களைச் செடிகளை கட்டுப்படுத்துவதற்கு ​ பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருளாகும்.​ இதை

  • முளைப்பதற்கு முன்பு,
  • களைச்செடி வளர்ந்த பின்பு

என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.​ முளைக்கும் முன்பு ​ செயல்படும் களைக் கொல்லிகள் களை விதை முளைக்கும் போதே,​​ அதன் முளை ​ வேர்கள் வழியே உள்சென்று அவற்றை அழிக்கின்றன.​ இவ் வகை களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,

  • மண்ணில் போதுமான ஈரப்பதம் அவசியம்.
  • இந்தக் களைக் கொல்லிகள் குருணையாக இருந்தால்,​​ அதைச் சீராகப் பரப்புவதற்கு மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.​ தூவப்பட்ட இடங்களை நீரில் மிதக்காமல் தவிர்க்க வேண்டும்.

களைச் செடிகள் முளைத்து வளர்ந்த பின்பு தெளிக்கப்படும் களைக் கொல்லிகள் ​ இலைகள் மூலம் உறிஞ்சப்பட்டு,​​ மற்ற பாகங்களுக்கு ஊடுருவிச் சென்று,​​ களைகளை ​ கொல்கின்றன.​ இந்தச் செடிகள் முளைப்பதற்கு முன்பு தெளிப்பதாக இருந்தால்,​​ ​ ஹெக்டேருக்கு

  • 3.50 லிட்டர் பென்டமெத்தலின் ​(ஸ்டாம்பு)​ அல்லது
  • அளாக்குளோர் 2.50 லிட்டர் அல்லது
  • டையூரான் 1.25 லிட்டர்

உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை ​ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பருத்தி விதைத்த மூன்றிலிருந்து,​​ ஐந்து நாள்களுக்குள் ​ கைத் தெளிப்பான் மூலம் தெளித்தல் அவசியம்.

தெளித்தப்பின்பு தெளிப்பானை நன்றாகக் கழுவ வேண்டும்.​ தண்ணீரை மட்டும் ​ நிரப்பி ஒரு டேங்க் தரிசாக உள்ள நிலங்களில் அடிப்பதால் தெளிப்பான் உள்பகுதியில் உள்ள களைக் கொல்லி நஞ்சை சுத்தமாக நீக்கலாம்.​ இல்லையெனில்,​​ பிறகு மருந்து கலந்து அடிக்கும்போது,​​ களைக் கொல்லியின் மீதமுள்ள நஞ்சினால் பயிர்க் கருகுவதைத் தவிர்க்கலாம்.

களைச் செடி வளர்ந்த பிறகு தெளிப்பான் இருந்தால்,​​ பாராக்குவாட் அல்லது ​ டைக்குவாட் என்னும் களைக் கொல்லியைப் பயன்படுத்தி,​​ களைகளை ​ கட்டுப்படுத்தலாம்.​ ​

குறிப்பாக,​​ களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,​​ பருத்தியில் ஊடு பயிராக பயறு ​ வகைகள் இருந்தால்,​​ பென்டமெத்தலின் ஸ்டாம்பு உபயோகிப்பதை ​ தவிர்ப்பதோடு,​​ களைகளை அழிக்க களை எடுக்கும் கருவியை பயன்படுத்த வேண்டும்.​ ​ இவ்வாறு செய்தால் பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.

தினமணி தகவல் – திரு. இரா. மாரிமுத்து, திட்ட ஒருங்கிணைப்பாளர், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர்