வேலிகாத்தானும் விவசாயிகளுக்கு எதிரி…

பார்த்தீனியம் செடியை அழிப்பதை ஓர் இயக்கமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வேலிகாத்தான் முள் செடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பார்த்தீனியம் செடிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல்நலக் கேடுகளை விளைவிப்பவை என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்த போது, அதை முற்றிலும் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார் முதல்வர்.

பார்த்தீனியம் - படம் காப்புரிமை - தமிழ் விக்கிபீடியா

பார்த்தீனியம் - படம் காப்புரிமை - தமிழ் விக்கிபீடியா

இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதே நேரத்தில் வேலிகாத்தான் முள் செடியின் பாதிப்புகளையும் அறிந்து அதையும் அழித்தால், நிறைய விவசாய நிலத்தில் வேறு சாகுபடிகள் செய்வது சாத்தியமாகும் என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர்.

15 முதல் 30 அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் இச் செடியின் வேர்கள், வறண்ட சூழ்நிலையிலும் வளரக்கூடிய தன்மை உள்ளவை. நிலத்தடி நீர் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளும். அதனால் மற்ற பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும். எனவே வேலிகாத்தான் முள் செடி உள்ள இடத்தின் அருகே வேறு பயிர்கள் வளராது என விவசாயிகள் விளக்குகின்றனர்.

இந்தச் செடியை கால்நடைகள் சாப்பிடாது. தவறுதலாக வேறு இலைகளுடன் சேர்த்து இதன் இலைகளை கால்நடைகள் சாப்பிட நேர்ந்தால், அவற்றுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படும் என்கின்றனர்.இந்த முள் செடி உள்ள இடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் பறவைகள் கூட கூடு கட்டுவது இல்லை. எனவே இவை அதிகம் உள்ள பகுதிகளில் பறவைகள் வாழாது.ஆணி வேர் இல்லாத சிறிய வகை மூலிகைகள் இந்த முள் செடியின் கீழே வளர முடியாமல், இறந்து போகின்றன.

வேலிகாத்தான் கருவை

வேலிகாத்தான் கருவை

விவசாயத்துக்கு, விவசாயிக்கு, கால்நடைகளுக்கு, பறவைகளுக்கு என எதற்குமே பயன்படாத இந்த முள்செடி, கரி கட்டை தயாரிப்புக்கு மட்டும் பயன்படுகிறது.
இதை வெட்டி எடுத்து, எரித்து, அதில் கிடைக்கும் கரியை தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதை சிலர் தொழிலாகவே செய்கின்றனர். ஆனால்,ஓரிரு மாவட்டங்களில்தான் இத் தொழில் உள்ளது.எனவே இதை விவசாயிகளின் பகைவன் என்ற பட்டியலில் அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்த்துள்ளதாக விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.

கேரளத்தில் அதிகாரபூர்வமாக இதற்கு எதிராக இயக்கம் எதுவும் இல்லை என்றாலும், இந்தச் செடி எங்காவது வளர்வதைப் பார்த்தால் முதலில் அதை வெட்டி அகற்றிவிட்டுத்தான் விவசாய வேலையை பார்ப்பது என்பதை விவசாயிகள் உறுதியாகப் பின்பற்றுகின்றனராம்.

விவசாய நிலங்களில் வேலியாகப் பயன்படுத்த வேறு மரங்களை வளர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்தச் செடி விறகாகப் பயன்பட்டது ஒரு காலம். இப்போது எல்லா வீடுகளுக்கும் அரசே இலவச கேஸ் அடுப்பு தந்துவிட்டது. இனி விறகிற்கும் இது தேவையில்லை. எனவே பார்த்தீனியத்துடன், இந்த வேலிகாத்தான் முள் செடிகளையும் அகற்ற வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

பார்த்தீனியம் : பார்த்தீனியம் செடியை அழிக்க உப்பு கலந்த நீரை தெளித்தால் போதும் என்று விவசாய நிபுணர்கள் கூறினாலும், அதை முற்றிலுமாக அழிக்க சின்ன ஆவாரம் விதையை தூவினால் நல்ல பலன் கிடைக்கிறது என்று தாவரவியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
உப்பு கலந்த நீரை தெளித்தால் செடி அப்போதைக்கு அழியுமே தவிர, வேர் அழிந்துவிடாது என்கின்றனர்.

சின்ன ஆவாரம் விதைகளை அந்தப் பகுதியில் தூவினால் அது வளரும் போது, பார்த்தீனியம் விதைகள் முற்றிலும் அழிந்து போவதை தாங்கள் நடைமுறையில் பார்த்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

எனவே பார்த்தீனியத்தை முற்றிலுமாக, மூல ஆதாரத்தையே அழிக்கும் வழிகள் குறித்து நிபுணர்கள் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என தாவரவியல் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

மரபணு பயிர்கள் : தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை பரவலாக்கிட எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காது என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினருக்கு இது நிம்மதியைத் தந்துள்ளது.

இருந்தாலும், சில அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்தப் பயிர்களுக்கு ஆதரவாக இருப்பதால், அரசு இதில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அரசின் அனுமதி இல்லாமல் மரபணு மாற்ற விதை தயாரிப்புக்கு எந்தவிதமான ஆராய்ச்சியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்பதை உறுதியாகச் செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

தினமணி 16 Aug 2011 12:32:05 AM IST

பார்க்க http://vetripages.blogspot.com/2010/10/blog-post.html