மக்காச்சோளம் சாகுபடி

விதைப்பு

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில்

  • கோ 1, கங்கா,
  • கோ ஹெச் (எம்) 4,
  • கோ ஹெச் (எம்) 5

ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம். விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.

உரம்

மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். மண்ணாய்வு பரிந்துரைப்படி தேவையறிந்து ரசாயன உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப்பரிந்துரையான

  • 54 கிலோ தழைச்சத்து,
  • 25 கிலோ மணிச்சத்து,
  • 20 கிலோ சாம்பல் சத்து

தரவல்ல உரங்களை இட வேண்டும்.

  • 30 கிலோ யூரியா,
  • 156 கிலோ சூப்பர் பாஸ்பேட்,
  • 33 கிலோ பொட்டாஷ்

உரங்களை அடியரமாக இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இடவேண்டும்.

பாசனம்

மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.

பூச்சி

குருத்துப்புழு, சாம்பல் வண்டை கட்டுப்படுத்த எண்டோ சல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும், தண்டுப்பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும். அசுவினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி டைமிதோயேட்டை தெளிக்க வேண்டும்.

அறுவடை முறை

மக்காச்சோள கதிரின் மூடிய உறை மஞ்சளாகவும், விதைகள் சற்று கடினமாகவும் மாறிய பின் கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மக்காச்சோள தட்டையை காயவிடாமல் பச்சையாக அறுவடை செய்து சிறுசிறு துண்டுகளாக செட்டி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு இறவையில் 2,500 கிலோ முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்க வாயப்புள்ளது. ஒரு கிலோ மக்காச்சோளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். எனவே விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.

உரை – தினமலர்

ஒலி – சென்னை வானொலி பண்ணைச் செய்தி

ஜப்பானிய காடை வளர்ப்பு

வீட்டில் ஒரளவு இட வசதி இருந்து அதன் மூலம் வருமானம் ஈட்ட நினைக்கும் பெண்கள், இளைஞர்கள் ஜப்பான் காடைகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் போதிய அளவு வருமானம் ஈட்ட முடியும் என திரூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்தார்.

காடை வளர்ப்பு குறித்து அவர் கூறியது: காடைகள் பொதுவாக இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. எந்த பறவைகளை வீடுகளில் வளர்த்தாலும் அதனைப் பார்த்து ரசிப்பதன் மூலம் பலருக்கு மன அழுத்தம் குறையும்.

தமிழகத்தில் அதிகளவில் வளர்க்கப்படுவது ஜப்பானிய காடைகளே. இவை 5 முதல் 6 வாரத்துக்குள் முழு வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஜப்பானிய காடைகளுக்கு 6 வார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் செலவும் குறைவு.

காடைகளை இரும்பு கூண்டுகள் அல்லது தரையில் தனித் தனி அறைகள் போல் தடுப்பு அமைத்தும் வளர்க்க முடியும்.

காடை இறைச்சியில் அதிகப்புரதமும் (20.5 சதவீதமும்) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (5.8 சதவீதம்) இருப்பதால் அதிகளவு மக்கள் காடை இறைச்சியை உட்கொள்கின்றனர்.

காடைகள் 7 வாரத்திலேயே முட்டை இடுவதால் அதன் மூலமும் அதிகளவு உற்பத்தி பெருகும். ஒரு காடை பராமரிப்புச் செலவு 7.50 ரூபாய் வரை ஆகும். ஒரு காடை 10 ரூபாய் வரை விற்கப்படுவதால் காடை வளர்ப்பு மூலம் போதிய அளவு வருமானம் ஈட்டுவதுடன் வீட்டினுள் இயற்கைச் சூழலும் நிலையாக இருக்கும் என்றார்.

காடை வளர்ப்பு குறித்து மேலும் விளக்கம் பெற திரூர் வேளாண் நெல் ஆராய்சி நிலையத்தை நேரிலும், 27620705 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என்று நிர்மலாதேவி கூறினார்.

தினமணி தகவல் – நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர், வேளாண் நெல் ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர்