கரும்பு சாகுபடியில் நவீனம் – வம்பன் செய்தி

வேளாண்மையில் அதிக விளைச்சலைப் பெறவும், லாபத்தை ஈட்டவும், புதிய தொழில்நுட்பம் அவசியமாகிறது. அதன்படி, கரும்பு சாகுபடியில், நடவில் தொடங்கி அறுவடை வரை பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  • கரும்பு சாகுபடியில்
  • விதைக்கரும்பு,
  • பார் அமைத்தல்,
  • களை நீக்குதல்,
  • மண் அணைத்தல்,
  • தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும்
  • அறுவடை

போன்றவற்றால் விவசாயிகளுக்கு அதிகம் செலவானது. இலாபமும் பெருமளவில் குறைந்தது.

இந்நிலையில், கரும்பு சாகுபடியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, சாகுபடி மேற்கொண்டால் லாபம் இரட்டிப்பாகிறது.

karumbu

karumbu

அதாவது, ஐந்தரை அடி இடைவெளியில் டிராக்டர் மூலம் பார் அமைக்க வேண்டும். பின்னர், லேசாக வாய்க்கால் போன்று அமைத்து, அதில் சொட்டு நீர் பாசனத்துக்கான குழாய்களை பதித்து, மண்ணை மூடிவிட வேண்டும்.

நடவு தினத்தன்று சொட்டு நீர் மூலம் லேசாக தண்ணீர் பாய்ச்சி, அந்த ஈரப்பதத்தில் ஒற்றை நாற்றை நடவு செய்ய வேண்டும். பின்னர், தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மண் அணைக்கவும், களை நீக்கவும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் கரையக்கூடிய வகையிலான உரத்தை கரைத்து, அதை சொட்டு நீர்ப் பாசனக் குழாய் மூலம் பயிருக்கு அளிக்க வேண்டும். இப்படி உரத்தைப் பயன்படுத்தினால் உரம் வீணாகாது. தொழிலாளர் பற்றாக்குறையினால் சில சமயங்களில் அறுவடையில் தேக்கம் ஏற்படும். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கரும்பு ஆலைகள் மூலம் இரண்டு விதமான அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை தோட்டத்தின் அளவைப் பொருத்து மாறுபடும். தற்போது ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மூலம் தமிழகத்தில் 5 ஆலைகளில் 12 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது இயந்திரம் மூலம் கரும்பை அறுவடை செய்து, ஆலைக்கு கொண்டு செல்லும் வாகனத்தில் ஏற்ற டன்னுக்கு ரூ. 360 வசூலிக்கப்படுகிறது.

இந்த இயந்திரம் நாளொன்றுக்கு 250 டன் அறுவடை செய்கிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 750 பேர் மேற்கொள்ளும் பணியை ஓர் இயந்திரம் செய்கிறது.

இவ்வாறு இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் மறுமுறை வளரும் பயிர் சீராகவும், வீரியம் மிக்கதாகவும் வளர்கிறது. மேலும், தோகைகள் துண்டாக்கப்பட்டு தோட்டத்திலேயே கொட்டப்படுவதால் கூடுதலாக இயற்கை உரம் கிடைக்கிறது.

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க ஏக்கருக்கு 6,000 ரூபாய் சர்க்கரை ஆலையிலிருந்தும், குறு விவசாயியாக இருந்தால் அரசு முழு மானியமும் அளிக்கிறது என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு 99766 19198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கரும்பு நாற்று தேவைக்கு 97865 06343 என்ற எண்ணில் முன்னோடி விவசாயியான வடகாடு தேவதாûஸயும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்தி – புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் செ. நடராஜன்