வேலூர் மாவட்டத்தில் பப்பாளி மாவுப் பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி அறிமுகம்

பப்பாளி மாவுப் பூச்சியை அழிக்கவல்ல உயிரிகொல்லியான “அசிரோபேகஸ் பப்பாயே’ என்ற ஒட்டுண்ணி காட்பாடியை அடுத்த சென்னாங்குப்பம் கிராமத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் இந்த ஒட்டுண்ணிகளை ஆட்சியர் செ. ராஜேந்திரன் பரவ விட்டார்.

  • மரவள்ளி
  • மல்பெரி
  • பருத்தி
  • பப்பாளி
  • காய்கறி மற்றும்
  • செம்பருத்தி

உள்ளிட்ட 55 வகையான பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சி காணப்படுகிறது.

பயிர்களை முழுமையாக சேதப்படுத்தும் இந்த பூச்சியை ரசாயன பூச்சிச்கொல்லிகள் மூலம் அழிக்கமுடியவில்லை. இந்நிலையில் உயிரி பூச்சிக்கொல்லி ஒன்றின் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தை தற்போது கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் அறிமுகம் செய்து வருகிறது.

உயிரி தொழில்நுட்பம்

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இயக்குநர் (பயிர் பாதுகாப்பு) ஏ.ஐ. ஜோனாதன் பேசியது:

பப்பாளி மாவுப்பூச்சி 2008-ம் ஆண்டில் கோவை பகுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இப்பூச்சி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து வேகமாக பரவி வருகிறது.

இவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து ஆராய்ச்சி நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக உயிரியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இப்பூச்சிகளை அழிக்க முடியும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.

ஒரு லட்சம் குப்பிகள்

அதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் ப. முருகேச பூபதி முயற்சி மேற்கொண்டு, மத்திய அரசு மூலம் அமெரிக்காவில் இருந்து 3 வகையான ஒட்டுண்ணிகளை வரவழைத்தார்.

நமது சீதோஷ்ண நிலையை தாக்குப் பிடிக்கும் அசிரோபேகஸ் பப்பாயே ஒட்டுண்ணி தேர்வு செய்யப்பட்டு பல்கலைக் கழகத்தின் 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 14 வேளாண் அறிவியல் மையங்களில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சம் குப்பிகளில் இவை அனைத்து மாவட்டங்களிலும் பரவ விடப்படுகின்றன.

மாவுப் பூச்சியின் தாக்குதல் கோடையில் அதிகரிக்கும். அதனால் இன்னும் 4 மாத காலத்திற்குள் மாவுப் பூச்சிகளை ஒட்டுண்ணிகள் முழுமையாக கட்டுப்படுத்தி விடும் என்றார் ஜோனாதன்.

ரூ.60 கோடி சேமிப்பு
பல்கலைக் கழக பதிவாளர் க. சுப்பையன் பேசும்போது, இந்த ஒட்டுண்ணியை கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பயன்படுத்தியதன் மூலம் சுமார் ரூ.60 கோடிக்கான பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிடைக்கிறது என்றார்.