நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றும் மண்புழு உரம்

விளைநிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை மண்புழு உரத்துக்கு உண்டு.

தற்போது மண்புழு உரக்கூடம் அமைப்பது, தயாரிப்பது போன்றவை மிகவும் எளிது என்பதாலும் இதன் பயன்களைப் புரிந்து கொண்டதாலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேளாண்மைத் துறை மண்புழு உரக்கூடம் அமைக்க 50 சதம் மானியம் வழங்குவதையும் விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் கூட நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியில் மண்புழு உரக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம். 50-க்கு 20 என்ற அளவில் 1000 சதுர அடி பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கும் வகையில் கீற்றுக்கொட்டகை அமைப்பது நல்லது. இதில் 20-க்கு 20 அளவில் 2 அடி உயரத்தில் 800 கன அடி அளவுக்கு தொட்டி கட்டி அதனை நான்காகப் பிரித்துக் கொண்டால் உரக்கூடம் தயாராகி விடும். ஒரு உரக்கூடம் அமைக்க ரூ.60 ஆயிரம் என்றால் வேளாண் துறை ரூ.30 ஆயிரத்தை மானியமாக வழங்கி விடுகிறது. சிக்கன முறையிலும், சிறிய முதலீட்டிலும் மண்புழு உரங்கள் உற்பத்தி செய்வது இன்று பிரபலமடைந்து, பெருகி வருகிறது.

இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். மண்ணின் மேற்பரப்பில் வாழும் மேல்மட்ட மண்புழு, நடுப்பகுதியில் மட்டுமே வாழ்பவை நடுமட்ட மண்புழு,அடியில் ஆழத்தில் படுக்கை வாக்கில் துளையிட்டு செல்பவை கீழ்மட்ட மண்புழு என வகைப்படுத்தப்படுகிறது.

முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். மக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இடையிடையே தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 200 மண்புழுக்கள் என்ற அளவில் இட்டால் 3-வது வாரத்திலேயே மண்புழுக்கள் தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளித்தள்ளுகின்றன. வாரம் ஒருமுறைகூட இவற்றை சேகரிக்கலாம்.

இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.

45 முதல் 60 நாளில் மண்புழு உரம் ரெடி. பண்ணையில் சேரும் கழிவுகளை அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி கூறியது:

தீமை தரும் புழு, பூச்சிகள், வண்டுப் புழுக்கள், கிருமிகள் இல்லாமல் இருப்பது மண்புழு உரம். களை விதைகள் உயிருடன் இல்லாமலும் சத்துக்கள் செரிவூட்டப்பட்டதாகவும் உடனடியாக செடிகளுக்குக் கிடைக்கும் வகையில் நன்மைகள் இருப்பது, சுற்றுச்சுழலைப் பாதுகாப்பது இப்படியாக இவற்றின் பலன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தற்போது வியாபார ரீதியாகவும் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பயிர் இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உபரி வருமானமாகவும் மண்புழு உரம் தயாரிப்பது அமையும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 154 மண்புழு உரக்கூடங்களை அமைத்திருக்கிறோம் என்றார்.

தினமணி தகவல்: சி.வ.சு.ஜெகஜோதி, இராமநாதபுரம்

மானாவாரி விவசாயத்தில் நுண்ணுயிர் உரங்கள் நவீன தொழில்நுட்பம்

மானாவாரி விவசாயத்தில்  நுண்ணுயிர் உரங்கள்: ரைசோபியம் – குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகளை உண்டாக்குகின்றன. இதன்மூலம் பயிர்களும் பாக்டீரியாக்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ரைசோபியம் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்துக் கொடுத்து பயிர்களில் இருக்கும் சத்துக்களை எடுத்துக்கொண்டு வாழ்கிறது. வேர்முடிச்சுக்களை உண்டாக்கும் ரைசோபியம் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தவை அல்ல. ஒரு குறிப்பிட்ட சில பயறு வகைச் செடிகளில்தான் வேர் முடிச்சை உண்டுபண்ணக்கூடியது. உதாரணம் பச்சைப்பயறு, உளுந்து செடிகளில் வேர்முடிச்சுகளை உண்டாக்கும் ரைசோபியம் இனம் அதே தாவர குடும்பத்தைச் சேர்ந்த நிலக்கடலை செடிகளில் கூட்டு சேர்ந்திருப்பதில்லை. அத்தகைய குறிப்பறிதல் திறனின் அடிப்படையில் ரைசோபியத்தில் 7 வகைகள் உள்ளன. எந்தெந்த ரைசோபியம் இனம் வேர்முடிச்சு உண்டுபண்ணக்கூடியதோ அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

அசோஸ்பைரில்லம்:

அனைத்து வேளாண் பயிர்களுக்கும் இடலாம் என சிபாரிசு செய்யப் பட்டிருந்தாலும் தானிய பயிர்களில் அசோஸ் பைரில்லத்தின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது. அசோஸ் பைரில்லம் தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு கொடுப்பதுடன் பயிர் வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிர்களின் வேர்களும், தண்டுகளும், இலைகளும் வேகமாக வளர உதவிபுரிகிறது. அசோஸ்பைரில்லம் மண்ணில் அங்கக பொருட்கள் அதிக அளவு இல்லாதபோதிலும் தழைச்சத்தை நிலைப்படுத்தி நன்கு செயல்பட வாய்ப்பு உள்ளது. பாஸ்போ பாக்டீரியா – இடுவதால் பயிரின் வேர்கள் செழித்து வளருகின்றன. திசுக்கள் வளம்பெறுகின்றன. பாறை பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தினை பயிர்கள் எளிதில் ஈர்க்கும் வகையில் மாற்றித்திரும் திறன் கொண்டது. ரசாயன உரத்தேவையில் மணிச்சத்தின் அளவில் 25 சதம் குறைத்துக்கொள்ளலாம்.

வேர் உட்பூசணங்கள்:

வி.ஏ.எம். மண்ணிலுள்ள மணிச்சத்தினை பயிர்களுக்கு எடுத்துக்கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புசத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவிவிடுகிறது. ஆகவே வேர்கள் பரவமுடியாத தூரத்தில் உள்ள மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி, பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணம் மண்ணிலிருக்கும் மணிச்சத்தை கரைக்க ஏதுவான அமிலம் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆகவே அதனுடைய செயல் சுலபமாக கிடைக்கக்கூடிய மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கிறது. நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த 2 முறைகள் உள்ளன. 1. விதைநேர்த்தி முறை, 2. நாற்றுக்களை நனைத்தல்.

1. விதைநேர்த்தி:

ஒரு பாக்கெட் 200 கிராம் உரத்தை 200 மி.லி. ஆறிய கஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் நன்கு கிளறிவிட்டு, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, பின்னர் விதைக்கலாம். பயிருக்கு ஏற்ப அசோஸ்பைரில்லம் (அ) ரைசோபியம் நுண்ணுயிர்களை பாஸ்போபாக்டீரியாவுடன் கலந்தே இடுவது நல்லது.

2. நாற்றுக்களை நனைத்தல்:

2 பாக்கெட் நுண்ணுயிர் உரத்தை15 லிட்டர் நீரில் கலந்து நாற்றின் வேர்ப்பகுதியை கலவையில் நன்றாக நனைத்து நடவு செய்யலாம். நாற்றுக்களை நனைக்கும்போதும் தழைச்சத்துக்கான உயிர் உரமும் மணிச்சத்துக்கான உயிர் உரமும் கலந்தே உபயோகிக்கலாம்.

தகவல்:

உமா சங்கரேஸ்வரி, ரெ.ச.குணசேகரன், வேளாண் நுண்ணுயிர் துறை,
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003

Dinamalar

விவசாயிகளின் நண்பன் – அசோலா

தென்னைக்கு அசோலாவின் தேவை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டு இருந்தோம். இது மற்றொரு பதிவு.

ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளம் மற்றும் மகசூல் குறைபாடுகளைத் தவிர்க்க விவசாயிகள் அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெறலாம் என திரூர் நெல் ஆராய்ச்சி மையத் தலைவர் கோ.வி.இராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொதுவாக நவீன யுகத்தில் விவசாயத்துக்கும் பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதிக பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் பயிர்களுக்கு தீமை விளைக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்கு துணைபுரியும் நுண்ணுயிர்களும் அழிந்துவிடுவது வருந்தத்தக்கது. ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தால் விளைவிக்கப்படும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுக தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினால் மண் வளம் செழிப்பாக இருப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. அசோலா என்பது உயிர் உரங்களில் முக்கியமானதும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவதுமாகும்.

அசோலாவின் தன்மைகள்:

  • தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
  • பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
  • பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • நாற்றங்கால் விடப்பட்ட 2-3 நாள்களில் இரு மடங்காக பெருகும்.
  • உற்பத்தி பெருக்கமும் சுலபம்.
  • அசோலா அதிக புரதச்சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
  • நீர் நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள் மற்றும் கொசுக்களையும் கட்டுப்படுத்துகிறது.

எனவே விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியன்.