தக்காளியில் இலைப்புள்ளி நோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் தக்காளி உற்பத்தியாகிறது.

தற்போதுள்ள பருவ நிலை காரணமாக தக்காளி பயிரில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக சூளகிரி, காமன்தொட்டி, பேரிகை மற்றும் கிட்டம்பட்டி பகுதிகளில் இந்நோயின் தாக்குதல்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் 60 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நோய்க்கான அறிகுறிகள்:

இலைப்புள்ளி நோய், பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் தக்காளி பயிரின் இலை, தண்டு, பூ மற்றும் காய்களைத் தாக்கும் தன்மை கொண்டது. தாக்கப்பட்ட பயிரின் இலையின் மேல் வட்ட வடிவமாக அல்லது ஒழுங்கற்ற கருமை நிற புள்ளிகள் முதலில் காணப்படும். பின்னர் இந்தப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையங்கள் தோன்றும். குறிப்பாக இந்தப் புள்ளிகள் இலையின் ஓரங்கள் மற்றும் நுனிப் பகுதியில் காணப்படும். பிறகு இவை பெரிய புள்ளிகளாக மாறும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் கருகியது போல் காணப்படும். பின்னர் செடியானது காய்ந்து உதிர்ந்து விடும்.

சிறிய அடர்ப் பழுப்பு அல்லது கருமையான புள்ளிகள் இளம் காய்கள் மீது காணப்படும். காய் பழுக்கும்போது இவை மறைந்து விடும் என்றாலும், நோய்த் தாக்கப்பட்ட பழங்களில் இந்தப் புள்ளிகள் அதிகம் காணப்படும். இதனால் பழத்தின் தரம் குறையும்.

இலைப்புள்ளி நோய், பல மாதங்கள் விதைகளில் தங்கியிருக்கும். செடிகள் வளரும்போது காற்று மற்றும் மழையால் ஒரு செடியிலிருந்து மற்றோரு செடிக்குப் பரவும்.

இதனால், நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களையோ, நோய்த் தாக்குதல் இல்லாத விதைகளையோ தேர்வு செய்வது நல்லது.

நோயை கட்டுப்படுத்தும் முறை:

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலந்து விதை நேர்த்திச் செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிரை பிடுங்கி அழிக்க வேண்டும்.

நோய்த் தாக்குதல் காணப்பட்டால், பாக்டீரிய கொல்லியான அக்ரிமைசின் 6 கிராமை 50 லிட்டர் நீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் 3 நாட்களுக்கு தெளிக்க வேண்டும்.   மேலும், ஸ்டெரப்டோமைசின் 6 கிராம் மற்றும் காப்பர் அக்ஸி குளோரைடு அல்லது மேன்கோசேப் (மேன்கோசைடு) 100 கிராம் மருத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் தண்டுப் பகுதியில் தெளிக்க வேண்டும்

வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. தக்காளி, மக்காச்சோளம், தட்டைபயிறு என சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

தினமணி தகவல் – பேராசிரியர் கல்பனா, வேளாண்மை பல்கலைக்கழகம், பையூர்