பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 45,000 ஹெக்டரில் மக்காசோளமும், 26,000 ஹெக்டரில் பருத்தியும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், மாநில சராசரி விளைச்சலை விட குறைவான மகசூல் பெறுகின்றனர். எனவே, ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக பயிர் எண்ணிக்கை பராமரிப்பதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் எடுக்கமுடியும்.

பருத்தியில், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும், அடுத்த வரிசை 4 அடியும், அடுத்த வரிசை 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும். ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து, அதிக பயிர் எண்ணிக்கையை பராமரித்து கூடுதல் வருவாய் பெறலாம்.

மக்காசோள சாகுபடியில் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்கு செடி ஒன்றரை அடி விட்டு ஒரு குழியில் இரண்டு விதை நடவு செய்தால், அதிக பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.

இதன்மூலம், இரட்டிப்பு வருவாய் பெறலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த புதிய தொழில் நுட்பத்தை கடைத்து அதிக மகசூல் பெறலாம்.

தினமணி செய்தி – வேளாண் இணை இயக்குநர் பி. சங்கரலிங்கம், பெரம்பலூர்

தமிழகத்திற்கு ஏற்ற கரும்பு ரகங்கள்

தமிழகத்தில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் கரும்பு ஒரு முக்கிய பயிராகும். சராசரி மகசூல் உலகளவில் எக்டருக்கு 70 டன், தமிழகத்தில் 108 டன், இந்திய அளவில் 71 டன் என்ற அளவில் இருக்கிறது. இந்த மகசூலை எக்டருக்கு 175 டன் வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. கரும்பில் நல்ல மகசூல் பெற கரும்பு சாகுபடி செய்யும் இடத்திற்கு தகுந்த நல்ல ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ஏற்ற முக்கிய புதிய கரும்பு ரகங்கள் பற்றிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோ86032 (கோ62198 x கோ671):

இது 1990ல் வெளியிடப்பட்ட ரகம். கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ரகம் எல்லா பட்டங்களுக்கும் ஏற்றது. எக்டருக்கு 120 டன் மகசூல் மற்றும் 15.09 டன் சர்க்கரை கட்டுமானமும் தரவல்லது. செவ்வழுகல் நோயை மிதமாக எதிர்க்கும் தன்மையுடையது. இது அகல பார் நடவிற்கு ஏற்ற ரகமாகும். இந்த ரகம் அதிக எண்ணிக்கையில் தூர்களை கொடுப்பதுடன் அதிக கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் திறன் கொண்டது. மறுதாம்பு பயிரிலும் அதிக சர்க்கரை மற்றும் கரும்பு மகசூல் தரக்கூடியது. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்திற்கு ஏற்றதல்ல.

கோ 94008 (சியாமளா) (கோ7201 x கோ 775):

இந்த ரகம் நேராக வளரும். சாயா தன்மையுடையது. செவ்வழுகல் நோயை தாங்கும் சக்தி கொண்டது. நடவு செய்த 12 மாதங்களில் அறுவடை செய்தால் 125 டன் கரும்பு தர வல்லது. இந்த ரகம் முன்பட்டம் (மார்கழி – தை) மற்றும் நடுப்பட்டம் (மாசி – பங்குனி) மாத நடவிற்கு ஏற்ற ரகம். குறுகிய கால ரகமாக வெளியிடப்பட்ட இந்த ரகம் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இது 19.21% சர்க்கரைச்சத்து மற்றும் 15.51 டன் சக்கரை கட்டுமானம் கொடுக்கக்கூடியது.

கோ99004 (தாமோதர்):

இந்த ரகம் கோ62175 மற்றும் கோ86250 இன கலப்பு செய்யப்பட்டு உருவாக்கப் பட்ட ரகமாகும். இது தமிழகத்திற்கு ஏற்றது. இது 2007ல் வெளிவந்த ரகம். அதிக கரும்பு மகசூல் (115 டன்), 19.21% சர்க்கரைச்சத்து மற்றும் 16.09டன் சர்க்கரை கட்டுமானம் கொடுக்கக்கூடிய ரகமாகும். வாடல், செவ்வழுகல், கரிப்பூட்டை நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை உடையது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. கரும்பு நல்ல உயரமாகவும் பருமனாகவும் எடையுள்ளதாகவும் இருக்கும். வெல்லம் தயாரிக்க இது மிகவும் ஏற்றதாகும். கரும்பு வேகமாகவும் உயரமாகவும் வளரும். இந்த ரகம் சாயாத தன்மையுடையது. சிறிய பரு கொண்ட இந்த ரகம் எல்லா பட்டங்களுக்கும் ஏற்றதாகும். மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது. இடைக்கணுக்களிலும் வெடிப்பு இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மறுதாம்பு பயிரிலும் இந்த ரகம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.

கோ 2001-13:

இது கோ 7806 என்ற ரகத்தில் திறந்தவெளி இனக்கலப்பு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரகம். நடுப்பட்ட நடவுக்கு ஏற்றதாகும். எக்டருக்கு 110 டன் மகசூலும் 14.73 டன் சர்க்கரை சத்தும் மற்றும் 19.00 டன் சர்க்கரை கட்டுமானம் தரவல்லது. அதிக தூர் எண்ணிக்கை கொண்ட ரகமாகும். செவ்வழுகல், கரிப்பூட்டை நோயை தாங்கி வளரக்கூடியது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. நடவு பயிரைப்போல் கட்டைப்பயிரிலும் நல்ல மகசூல் கொடுக்க வல்லது. வெல்லம் தயாரிக்க ஏற்ற ரகமாகும். முள் மற்றும் வெடிப்பு இருக்காது. குறைவாக பூக்கும் தன்மையுடையது. நல்ல உயரமாக வளர்ந்து குறைந்து சாயும் தன்மை கொண்டது.

கோ 2001-15:

இந்த ரகம் கோ85002 மற்றும் கோ 775ஐ இனக்கலப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ரகமாகும். இது நடுப்பட்ட நடவிற்கு ஏற்றது. இந்த ரகம் 110-115 டன் மகசூல் தரக்கூடியது. மற்றும் 14-15 டன் சர்க்கரை கட்டுமானம் தரக்கூடியது. கரும்பு நல்ல உயரமாகவும், வேக மாகவும் வளரும். செவ்வழுகல், கரிப்பூட்டை நோயை தாங்கி வளரக்கூடியது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களிலும் வளரக்கூடியது. எல்லா பகுதிகளுக்கும் ஏற்றது. குறைவாக பூக்கும். இந்த ரகம் கட்டைப்பயிருக்கு ஏற்றது. உயரமாக வளரும் ஆனால் சாயாத தன்மையுடையது. வெல்லம் தயாரிப்பதற்கு ஏற்ற ரகம். சிவப்பு நிறமுடைய கரும்புகள் நீளமாக கணுக்கள் மற்றும் சிறிய அளவு பருமன் கொண்டது.
மேற்கூறிய கரும்பு ரகங்களிலிருந்து மண்ணின் தரம், கரும்பு ரகத்தின் முதிர்ச்சி காலம், பூக்கும் தன்மை முதலிய குணாதிசயங்களுக்கு ஏற்ப தரமான விதைக்கரணைகளைக் கொண்டு அந்த ரகத்தை நடவு செய்து அதிக மகசூலைப் பெறலாம்.

விரிவாக்க வெளியீடு எண் 203(2011)

தினமலர் செய்தி – முனைவர்கள் சீ.அலர்மேலு, ஆர்.மா.சாந்தி, ஹேமபிரபா, த.ரஜுலா சாந்தி, என்.விஜயன் நாயர்; வெளியீடு: முனைவர் என்.விஜயன் நாயர், இயக்குநர், கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோவை-641 007; 0422-247 2621, 247 2723. தொலைநகல்: 0422-247 2923.

மின்னஞ்சல்: sugaris@vsnl.com, http://www.sugarcane.res.in, http://www.caneinfo.nic.in.
-எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி?

பால் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்பில் பால் பண்ணைத் தொழிலுக்கு முக்கியத்துவ ம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பால் பண்ணைத் தொழிலை லாபகரமாக செயல்படுத்த சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

பால் பண்ணைத் தொடங்க முதலில் நல்ல கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் வேண்டும். அதற்கு கறவை மாடுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறவை மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை நன்கு பராமரித்து வரும் அரசு கால்நடைப் பண்ணைகள், தனியார் பண்ணைகளிலிருந்து பசுக்களைத் தேர்வு செய்வது சிறந்தது.

ஏனெனில் அந்தப் பதிவேடுகளில் பிறந்த தேதி, கன்று ஈன்ற தேதி, கறவைக் காலம், கொடுத்த பாலின் அளவு போன்ற விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பதிவேடுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கன்று, அதிகப் பால் உற்பத்தித் திறன் உள்ள பசுக்களைத் தேர்வு செய்யலாம்.

பதிவேடுகள் என்பது பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளன. இந்தச் சூழலில் மாடுகளின் தோற்றத்தைக் கொண்டும் அவற்றின் குணாதிசயங்கள் கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். அதாவது, பசுவின் அமைப்புக்கும், அதன் உற்பத்தித் திறனுக்கும் ஓரளவு தொடர்பு உள்ளதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பசுவானது சுறுசுறுப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்கவும், மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் அகன்றும் இருக்க வேண்டும். மூச்சு விடும் போதோ அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.

பல் வரிசை சீராக இருப்பதைக் கடைவாய்ப் பல்கள் அனைத்தையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்த்தல் வேண்டும். அதிக தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்று அனுமானிக்கலாம்.

பசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக வளர்ந்திருக்கும், கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.

கறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. கறவை மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எலும்புகள் மட்டும் தெரிவது சிறந்ததாகும்.

கால்கள் உறுதியாகவும், நடக்கும் போது சீராக ஊன்றியும் நடக்க வேண்டும். பசுவின் நான்கு கால்களும் உடம்பின் நான்கு மூலையிருந்து நேராக தரையை நோக்கி இறங்கியிருக்கவும், பசு படுப்பதற்கோ எழுவதற்கோ சிரமப்படக் கூடாது.

மடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும், காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் இருக்க வேண்டும். காம்புகள் அதிக நீளமாகவும் இருக்கக் கூடாது. தவிர, பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.

பால் கரந்த பிறகு மடி நன்கு சுருங்க வேண்டும். மாட்டின் கலப்பினத் தன்மைக்கேற்ப கணக்கிடப்பட்ட அளவுக்குப் பால் கறக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து மூன்று நாள்கள் இரு வேளையும் பால் கறந்துப் பார்த்து மாடுகளை வாங்க வேண்டும். பத்து லிட்டர் பாலை எட்டு நிமிஷங்களில் கறக்க வேண்டும்.

பால் கறக்கும் போது கால்களைக் கட்டியோ அல்லது மாடுகளைப் பிடித்துக் கொண்டோ கறக்கும் பழக்கமுள்ள மாடுகளை வாங்குவது நல்லதல்ல. மேலும், மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது, மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் கொடுக்கும். எனவே, மாடுகளை முதல் மூன்று ஈற்று இருக்குமாறு பார்த்து வாங்குவது சிறந்தது என்றனர் அவர்கள்.

தினமணி செய்தி –
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல் ஆகியோர் கூறியது:

பூ பூக்கும் காலத்தில் மணிலா பயிைரக் காக்க ஜிப்சம்

அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ள மானாவாரி மணிலா பயிர் இப்போது பூ பூக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் காய்கள் முதிர்ச்சி அடையும் பருவம் வரை சுண்ணாம்புச் சத்து 90 சதவீதத்துக்கும் அதிகமாகத் தேவை. இதனால் மணிலாவுக்கு ஜிப்சம் மேலுரமாக இடுவது அவசியம்.

சுண்ணாம்பு சத்தை மணிலா செடிகள் வேர் மூலம் மண்ணில் இருந்து உறிஞ்சி, இலை திசுக்களில் நிலை நிறுத்திக் கொள்கிறது. பின்னர் வளரும் காய்களுக்கு சத்தை விழுது மூலம் இறங்கிச் செல்வதைத் தடுத்து விடுவதும் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.

மணிலாவில், சுண்ணாம்புச் சத்து தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, பொக்கு காய்கள் குறைந்து, திரட்சியுடன் கூடிய முதிர்ந்த காய்கள் கிடைக்கும்.

எப்படி இட வேண்டும்?

மணிலா பயிரில், பூ பூத்த நிலையில் இருந்து அதற்கு தேவையான சுண்ணாம்புச் சத்தை மண்ணில் இட்டு ஈடுசெய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

மணிலா விதைப்பு செய்த 6 முதல் 9 வார காலத்துக்குள் மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ள நேரங்களில் இட்டு, மண்ணை கைக் களை மூலம் 3 செ.மீட்டர் ஆழத்துக்கு நன்கு கிளறி விட வேண்டும்.

மண்ணில் நேரடியாக இடுவதற்கு பதிலாக, நன்கு பொடி செய்த ஜிப்சத்தை துணியின் மூலம், கைகளால் செடிகளைச் சுற்றி தூவி, மண்ணை கிளறி விடுவதால் மட்டுமே, ஒரு ஏக்கரில் 100 முதல் 200 கிலோ அளவுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கூடுதல் நன்மை தரும் கந்தகச் சத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் தொடர்ந்து மணிலா பயிரிடப்பட்டு வருவதால், மண்ணில் உள்ள கந்தகச் சத்து அளவு குறைந்து வருகிறது. இதனால் கூட மணிலா பயிரில் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது.

ஜிப்சம் மேலுரமாக இடுவதால், இதில் உள்ள கந்தகச் சத்து மணிலாவுக்கு கிடைத்து மகசூல் அதிகரித்துள்ளதும் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

மானியத்தில் ஜிப்சம்

அணைக்கட்டு வட்டாரத்தில் அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் இப்போது ஜிப்சம் விற்பனை செய்யப்படுகிறது. மானியச் சலுகை அனைத்து விவசாயிகளுக்கும் உண்டு

ஜி.ராமகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநர், அணைக்கட்டு, வேலூர்

தினமணி செய்தி : 04 Aug 2011 12:22:16 PM IST

இலவச மின் மோட்டார்களால் மின் சேமிப்பு சாத்தியமா?

இலவச மின் மோட்டார்கள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, ஒரே தவணையில் அனைத்துப் பழைய மோட்டார்களும் மாற்றப்படுமா, எத்தனை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் வழங்கப்படும் என்ற உறுதியான அறிவிப்பு இல்லாததால், தமிழக முதல்வர் அறிவித்துள்ள மின் மோட்டார் வழங்கும் திட்டத்தால் 20 சதம் மின் சேமிப்பு சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் நீர்ப் பாசன வசதி செய்யப்பட்ட மொத்த வேளாண் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர். இதில் 15 முதல் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடி நீர்ப் பாசனத்தை நம்பியே உள்ளன. தமிழகத்தில் உள்ள 19 லட்சம் மின் இணைப்பு பெற்ற பம்பு செட்டுகளில், 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுடையவை.

குழாய் உள்ளிட்ட இதர சாதனங்களுடன் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட புதிய நீர்மூழ்கி மோட்டாரின் விலை ரூ. 40,000. மோட்டார் மட்டும் ரூ. 25,000-லிருந்து ரூ. 30,000 வரையிலான விலையில் கிடைக்கும். இதுவே கம்ப்ரசர் மோட்டார் என்றால் ரூ. 28,000 தொடக்க விலையாகிறது.

எனவே, சராசரியாக புதிய மின் மோட்டாரின் விலை ரூ. 30,000 என்று வைத்துக் கொண்டால், தமிழகத்திலுள்ள 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கும் மோட்டார் வழங்க ரூ. 4,500 கோடி ஒதுக்க வேண்டும்.

அடுத்து, மோட்டார்களை எப்படி வழங்கப் போகிறார்கள் என்பதும் மின் சேமிப்புக்கு முக்கியமானது. இலவச எரிவாயு இணைப்பு, இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் போன்ற திட்டங்கள் தவணை அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற, முதல் தவணையாக 3 லட்சம் வீடுகளுக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டு, மீதமுள்ளவை ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன்படி, உதாரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் அல்லது மூன்று லட்சம் மோட்டார்கள் வழங்குவோம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக பழைய மோட்டார்கள் அனைத்துக்கும் பதிலாக புதிய மோட்டார்களை ஒரே தவணையில் பொருத்தினால்தான் மின் சேமிப்பு சாத்தியமாகும். எனவே, தேர்தலுக்கு முன்பாக ஒரே தவணையில் மின் மோட்டார்கள் வழங்கப்படுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் மூழ்கி மின் மோட்டார்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு கம்ப்ரசர் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:

விவசாயிகள் ஐந்து முதல் ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், உதாரணமாக மாவட்டம் முழுவதற்கும் விவசாயத்துக்கு மட்டும் 500 கிலோ மெகாவாட் மின்சாரம் செலவாகும் என்று ஒதுக்கீடு செய்வோம்.

ஆனால், பல விவசாயிகள் 15 முதல் 25 குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை ஊறிஞ்சுவதால், ஒதுக்கீட்டைவிட அதிக மெகாவாட் மின்சாரம் இழுக்கப்பட்டு மின் இழப்பு அதிகரிக்கிறது.

அரசு ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் கொடுத்தாலும், பெரும்பாலான விவசாயிகள் அதைப் பயன்படுத்தாமல் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் உபயோகிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

எனவே, இலவசமாக புதிய மின் மோட்டார்களை கொடுப்பதனால் மட்டும் மின் சேமிப்பு சாத்தியமாகிவிடாது என்கிறார் அந்த அதிகாரி.

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:

நெல், கரும்பு, தென்னை, வாழை தவிர இதர காய்கறி தோட்டக்கலைப் பயிர்கள், பருப்பு பயிர்கள் பயிரிட்டால் இலவச மின்சாரம் கிடையாது என்றும், அவ்வாறு பயன்படுத்திய விவசாயிகள் மீது மின் திருட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது இலவச மின்சாரத்தை படிப்படியாக குறைக்க அரசு கையாளும் தந்திரமாகத் தெரிகிறது.

மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை பயிர்களின் அடிப்படையில் பாகுபடுத்தாமல், வேளாண்மை உற்பத்தி மின்சாரம் என்று வழங்க அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பயிர்ப் பாகுபாடு கூடாது என்பது போல, சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடும் கூடாது.  பயிர்ப் பாகுபாடு அடிப்படையில் இலவச மின்சாரத்தை பறித்துக் கொண்டு இலவச மின் மோட்டார், அதுவும் குறைந்த திறன்கொண்ட மின் மோட்டார்கள் வழங்குவதில் விவசாயிகளுக்கு நன்மையில்லை. மின் சேமிப்பும் சாத்தியமாகாது என்றார் கல்யாணம்.

தமிழக மக்கள் கவனத்தை திசை திருப்பும் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல்,  விவசாயிகளுக்கும், மின் சேமிப்புக்கும் வாய்ப்பளிக்கும் திட்டமாக மின் மோட்டார்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி கட்டுரை – த. முருகானந்தம்