கல்பாக்கத்தில் ஒரு ஒருங்கிணைந்த விவசாயம்

கல்பாக்கத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கரியச்சேரி. அவ்விடத்தைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மனைவி திருமதி சபீதா ராணி தாவரவியல் பட்டம் பெற்றவர். 2000ம் வருடங்களில் அலுவலகப் பணி காரணமாக கிட்டத்திட்ட விவசாயம் கைவிடப்பட்டது.

சுனாமியின் கோரதாண்டவத்திற்கு இவரகள் கிராமம் ஆளாக, படிப்புச் சான்றிதழ் கூட மிச்சமின்றி அனைத்தையும் இழந்திருக்கின்றனர்.  மிச்சம் திரு பாலாஜியின் அலுவலகப் பணி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சான்றிதழ்.

இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்தத் தம்பதியினர் இயற்கையை நம்பியதுதான் இவ்விடத்தின் திருப்பம். நீர் வடியாத இவர்கள் நிலத்தைச் சுற்றி பொக்லைன் கொண்டு தோண்டி ஆழமான வடிகால்களை அமைத்துள்ளனர்.
தற்பொழுது 4 மாடுகள், 3 கன்றுகள், 11 ஆடுகள், 40 கோழிகள் (கிரிராஜா, நாட்டுக்கோழி, வனராஜா), 5 வான்கோழிகள், 6 கின்னிக் கோழிகள், 14 காடை , 3 மணிலா வாத்துக்கள்,  8 நாட்டு வாத்துக்கள்,  16 காதல் பறவைகள், 6 ஆப்பிரிக்கன் கிளி, 10 காக்டைல் என்றும் சிறு கிளிகள் என்று அவர்கள் வாழ்விடத்தை இயற்கை கலை கட்டியிருக்கிறது.

கிராமியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று தங்காளால் ஆன பங்களிப்பைச் செய்யும் இவர்கள் “நமது விவசாயிகள் ஒவ்வொருவரும் தினசரி வருமானம், வார வருமானம், வருட வருமானம் என்று தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் தற்சார்புடன் வாழ இயலும்” என்று கூறுகின்றனர்.

இதற்கான முறைகள்

 • பால், முட்டை, கீரை – இவைகளிலிருந்து தின வருமானம்
 • கொடி வகை (பீர்க்கன், பாகல், புடல்) – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
 • தென்னை, கறிவேப்பிலை – இரு மாதங்களுக்கு ஒரு முறை
 • பப்பாளி, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை – கூடிய காலஇடைவெளி
 • மா, பலா போன்றவை – வருட வருமானம்
 • பயன்தரு மரங்கள் – பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருத்த வருமானம்.

சொல்வதுடன் மட்டுமல்லாமல் செயல் படுத்தியும் உள்ளனர்.

பள்ளிகளில் செயல்முறை விளக்கங்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு பயிற்சிகள் என்று சமூக சிந்தனையுடன் செயல்படும் இவர்கள் தங்கள் ஊர் பள்ளியை சுற்றுச்சூழல் நட்புப் (eco friendly) பள்ளியாக மாற்றியருக்கின்றனர். எடுத்த சில பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், இயற்கைவிவசாயத்தை விடாமல் தொடர்ந்திருக்கின்றனர்.

இவர்கள் தோட்டத்தில் விளையும் பச்சைப் பயிறு, காய்கறிகள், அரிசி, இலைகளை கல்பாக்கத்திலேயே விற்றுவிடுகின்றனர். இவர்களிடம் அசோலா குழி ஒன்று உள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக அதை அளிக்கின்றனர். நெல் சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் இந்த அசோலாவை விரும்பி உண்கின்றனர்.

இவர்கள் பயிர் பாதுகாப்பிற்கு இஞ்சி – பூண்டு கசாயம், பஞ்ச கவ்யா போன்றவைகளைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். அவை தவிர அசிட்டோபாக்ட்டர் (கறுப்பு யூரியா), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், மொபலைசர், சூடோமொனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பி.டி, கிரப்நில் போன்ற உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

மீன் வளர்ப்பிலும் கால் வைத்துள்ளனர். இவர்களது கிணற்றில் வலை இறக்கி (மிதவை போல) 50 விரால் குஞ்சு விட உள்ளனர். வீட்டிற்கு முன் உள்ள குட்டையில் 200 கட்லாவும் 200 காமன் கார்ப்பும் உள்ளன. இவைகளுக்கு பச்சரிசித் தவிடு, புண்ணாக்கு போன்றவை கொடுத்து வளர்த்து வருகின்றனர்.

கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்திலிருந்து (KVK) ஆலோசனை மையத்திலிருந்து ஆலோசனை பெறுகின்றனர்.

இவர்கள் செய்த வேர்க்கடலை சாகுபடியில் செலவு போக ஏக்கருக்கு 12000 கிடைத்துள்ளது; ஏக்கருக்கு 25 மூட்டைகள் (75 கிலோ) கிடைத்துள்ளன. ஸ்வீட் கார்ன்-ஐக் கூட இவர்கள் விடவில்லை. இது தவிற இயந்திர நடவில் பொன்னி, ADT 43, ADT 37 (குண்டு அரிசி), சீரகச் சம்பா, சிவப்புக் கார், அன்னம் (புதிய ரகம்) போன்றவற்றையும் சாகுபடி செய்கின்றனர்.

சாண எரிவாயு வைத்துள்ளனர். ஸ்லரியை பஞ்ச கவ்யா தயாரிக்கவும் உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.

வயல் வரப்போரங்களில் வெட்டிவேர், லெமன் கிராஸ், கோ4, அவுரி, சணப்பு, க்ளைரிசீடியா என்ற பெரும்பாலும் கால்நடைகளுக்கு உதவும் தீவன வகைகளைச் சாகுபடி செய்துள்ளனர்.

தங்களைப் பார்த்து மற்றவர்களும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கும் இவர்களின் செயலில் லாப நோக்கும் இல்லை. வியாபார உத்தியும் இல்லை. நூறு சதவீத சேவை மட்டுமே.
திரு. டி. பாலாஜி 94453 97577
(தமிழக விவசாயி உலகம்)

அசோலா

அசோலா பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். நமது சீதோஷ்ண நிலையில் வளரக்கூடியது. அதிக வெப்பமும் அதிகக் குளிரும் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். கோழி மற்றும் வான்கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப் படுகிறது.

 • அசோலாவை சாகுபடி செய்ய வயலை உழுது சமன் செய்யவேண்டும்.
 • பிறகு ஒரு செண்டு (20க்கு 2 மீட்டர்) பாத்திகளாகப் பிரித்து நான்கு புறமும் வரப்பு எழுப்பவும்
 • ஆங்காங்கே வாய்க்கால்கள் இருப்பது அவசியம்.
 • எப்பொழுதும் தண்ணீர் 10 செண்டி மீட்டர் அளவில் பாத்திகளில் இருக்க வேண்டும்
 • 10 கிலோ மாட்டு சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு பாத்தியிலும் தெளிக்கவேண்டும்
 • பின்னர் 8 கிலோ அசோலாவை ஒவ்வொரு பாத்திகளிலும் இட வேண்டும்.
 • 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 3 பங்காகப் பிரித்து 4 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பாத்தியிலும் இட வேண்டும்

ஒவ்வொரு பாத்தியிலிருந்தும் 80 முதல் 100 கிலோ அசோலா கிடைக்கும்

எளிதில் ஜீரணிக்கவல்ல அசோலா கால்நடைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக அமைகிறது .

அசோலாவை உணவாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் அளவு (நாள் ஒன்றுக்கு)

எடை

இனம் அளவு
கறவைப் பசு, எருது 1.5 ~2 கிலோ
முட்டைக்கோழி, கறிக்கோழி 20~30 கிராம்
ஆடுகள் 300~500 கிராம்
வென்பனறி 1.5~2.0 கிலோ
முயல் 100 கிராம்

பார்க்க –

http://www.indg.in/agriculture/animalhusbandary/b85b9abb2bbe-b95bbebb2bcdba8b9fbc8-ba4bc0bb5ba9baebcd

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=268487&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%22%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE

http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:3609

விவசாயிகளின் நண்பன் – அசோலா

தென்னைக்கு அசோலாவின் தேவை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டு இருந்தோம். இது மற்றொரு பதிவு.

ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளம் மற்றும் மகசூல் குறைபாடுகளைத் தவிர்க்க விவசாயிகள் அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெறலாம் என திரூர் நெல் ஆராய்ச்சி மையத் தலைவர் கோ.வி.இராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொதுவாக நவீன யுகத்தில் விவசாயத்துக்கும் பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதிக பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் பயிர்களுக்கு தீமை விளைக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்கு துணைபுரியும் நுண்ணுயிர்களும் அழிந்துவிடுவது வருந்தத்தக்கது. ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தால் விளைவிக்கப்படும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுக தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினால் மண் வளம் செழிப்பாக இருப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. அசோலா என்பது உயிர் உரங்களில் முக்கியமானதும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவதுமாகும்.

அசோலாவின் தன்மைகள்:

 • தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
 • பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
 • பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது.
 • நாற்றங்கால் விடப்பட்ட 2-3 நாள்களில் இரு மடங்காக பெருகும்.
 • உற்பத்தி பெருக்கமும் சுலபம்.
 • அசோலா அதிக புரதச்சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
 • நீர் நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள் மற்றும் கொசுக்களையும் கட்டுப்படுத்துகிறது.

எனவே விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியன்.

தென்னையில் ஊடுபயிராக அசோலா

தழைச்சத்தை சேர்க்கும் நீர்பச்சை பாசியான அசோலா பொதுவாக குளம், குட்டை, கால்வாய், நெல்வயல்களில் மிதக்கின்ற நீர் நுண்தாவரம். பச்சை நுண்ம குச்சியான அனபீனா அசோலாவை தன்னிடம் ஒருமித்த இணைவாக அதனின் மேற்புற இலை இடுக்குகளில் கொண்டு உள்ளது. வளிமண்டல தழைச்சத்தை பச்சை நுண்ம குச்சி, அசோலாவில் சேர்த்துக்கொள்கிறது. அசோலா நீர் நுண்தாவரம் 0.2-0.3 சதம் தழைச்சத்தைக் கொண்டுள்ளது. (ஈர எடை அடிப்படையில்) எனவே அதனின் இதழ் இலைகள் செழிப்பான பசுந்தாள் உரமாக உள்ளது.

உற்பத்தி பெருக்கம்: அசோலாவானது வருடம் முழுவதும் வளரும் தன்மை உடையது. தென்னை மரங்களுக்கிடையே குழிகள் வெட்டி ஊடுபயிராக அசோலா வெற்றிகரமாக வளர்க்கப்படுகிறது. தென்னை நீலபச்சை பாசிக்கு தேவையான நிழலைத் தருகிறது. தென்னையின் அடிப்பகுதியிலிருந்து 5 அடி தள்ளி 6 அடி து 36 அடி து 3 அடி அளவுள்ள குழிகள் எடுக்க வேண்டும். இதுபோன்று 2 குழிகள் 2 அடி இடைவெளியில் வெட்டவேண்டும். ஒரு கிலோ புதிய பசுஞ்சாணம் குழியில் இட்டு நீர்விட வேண்டும். மேலும் நீர் அளவை 0.5 அடியாக வளர்க்கும் காலம் முழுவதும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். சூப்பர் பாஸ்பேட் கார்போபியூரான் 3 சதம் குருணை 15 கிராம் அடியுரமாக குழியில் இட்டு நீர்விட்டு கிளறி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குழிக்கு புதிய அசோலா இலை இதழ்கள் 100 கிராம் வீதம் வளர் இடுபொருளாக இடவேண்டும். பிறகு அசோலா வளர்ந்து உற்பத்தியாகும் புதிய உயிர்பெருக்க நீலபச்சை பாசியானது இட்ட 15 நாட்களுக்குப் பின் நீர்ப்பரப்பை மூடிவிடும். உயிர்பெருக்கமடைந்த நிலையில் அசோலாவை அறுவடை செய்து நெல்வயல்களுக்கு இடலாம். ஒவ்வொரு குழியிலும் 3 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது சிறு அளவிலான அசோலாவை (100 கிராம்) குழியில் அப்படியே விட்டு அடுத்த வளர்ப்பிற்கு வளர் இடுபொருளாக பயன்பட வழிவகுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சூப்பர்பாஸ்பேட் மற்றும் கார்போ பியூரான் 3 சதக்குருணை திரும்பவும் அடுத்தடுத்த அசோலா வளர்ப்பிற்கு கொடுக்கப்பட வேண்டும்.

இம்முறையில் அசோலா வளர்ப்பதால் அருகாமையிலுள்ள தென்னையின் வளர்ச்சி, மகசூல் பாதிப்புஏற்படுவதில்லை. எனவே விவசாயிகள் அசோலா மற்றும் நீலபச்சை பாசியை மலிவாக உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கும் பிற விவசாயிகளுக்கும் விற்று பயன்பெறலாம்.

தகவல்: த.அருள்ராஜன், கா.ராஜப்பன், சி.நடராஜன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்-614 906

தினமலர் செய்தி