சாப்பிடும் வகையில என்னங்க அசிங்கம்?

தீண்டாமை பற்றிப் பேசினா தமிழ் கூறும் நல்லுலகில் சண்டை எழும். அது நம் வேலை இல்லை. சத்தமில்லாமல் சாப்பாட்டில் நாம் செய்யும் தீண்டாமையைப் பற்றிச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

ஒரு காலத்தில் சோறு (அரிசிக்கஞ்சி) என்பது பலருக்கும் கனவு. என்னவோ பல்லவராஜா காலத்தில் அல்ல. 10 முதல் 20 வருடங்களுக்கு முந்தி வரை. இருக்கும் கேழ்வரகுக்கஞ்சி (கூழ்)-ஐ மோரும் தண்ணீருமாகக் கலந்து கலந்து, வயலில் வேலை செய்யும் தன்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் என் கிராமத்துக் கிழவி என் கண்ணில் தோன்றுகிறார். அதில என்ன இருக்கு இன்னும் தண்ணிய ஊத்திட்டு இருக்கற என்று அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஒன்றுமில்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த அவர்களுக்கு ஏதும் உடல் இடையூறுகள் இருந்ததாய் தெரியலை. ஊட்டமாகச் சாப்பிட்டாலும் 5 வயதில் ரத்தசோகை மற்றும் கண் கோளாறு தகறாருகளைப் பெற்றிருக்கும் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் ஊட்டத்திற்கும் குறைவில்லை. பிறகு எங்கே பிரச்சினை?

எந்திரங்கள் பெறுகி உள்ளன. அதன் விளைவால் உற்பத்தி பெறுகிஉள்ளது. பெறுகி இருக்கும் உற்பத்தியும் பத்தாது என்று அறிஞர்கள் அலாரம் அடிக்கிறார்கள்! 2020 வல்லரசு ஆவோமோ இல்லையோ. 2040ல் திண்று தீர்க்கத் தயாராய் இருப்போம் என்பது உண்மை. இவ்வளவு உற்பத்தி இருந்தும் சிறு தானியங்கள் உற்பத்தி அதிகரித்ததா – இல்லை என்பதே உண்மை. அதாவது கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்றவை.

கம்பு அல்லது கேழ்வரகுக் கூழ் என்பது என்ன என்று இத்தலைமுறைக் குழந்தைகளுக்குத் தெரியாதே (அதையே அரச்சு டப்பா போட்டுக் கொடுத்தா மெடிக்கல் கடையில் சென்று வாங்குவோம்!) தெரிந்த பலருக்கும் அது ஒரு அசூசி! அதாவது தீண்டத் தகாத பொருள். கூழ் என்பது என்னவோ ஆக்கக் கூடாத சாப்பிடக் கூடாத ஐட்டம் என்பது மாதிரி!  பட்டிக்காட்டுத்தனமான சாப்பாடு என்று எனது நெருங்கிய உறவினர் வீட்டில் சொல்வார்கள்!?!?

ஆக நாகரீகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக உபயோகிப்பவர்களைத் தாழ்வாக
எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி நிறைய செலவு செய்கிறோம்.

தற்போது மக்களை நோய்கள் அதிகம் தாக்குவதால் குறிப்பாக நீரிழிவு நோய் கண்டவர்கள் கேழ்வரகை (ராகி) அதிகம் நாடுகிறார்கள். உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களும் கேழ்வரகு மாவை பாக்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.

பெரும்பாலான சிறு நகரங்களில் கேழ்வரகு கூழ் விற்பனைக்கு வந்துவிட்டது.

நவநாகரீக உடையில் வருபவர்கள்கூட அதை வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் குளிர்ச்சி என்றாலும், உடல்நலத்துக்கு முக்கிய பாதுகாப்பாகவும் விளங்குவதால் அதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

பொதுவாக தாய்பால் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது கேழ்வரகு கூழ் பரிந்துரை செய்யப்படுவதும், 40 வயதுக்குப் பின் உடல் சீர்கெடும் போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இந்த சிறுதானியங்களைத்தான்.  இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சிறுதானியங்கள் உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி, சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க ரசாயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்ய முடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.

சிறப்பு அம்சங்கள்:

  • இவை சத்துமிக்க தானியங்கள் மட்டுமின்றி மிகக் குறைந்த நீரே போதுமானது.
  • மழைநீரே போதும், நீர் பாசனம் தேவையில்லை.
  • வளமிக்க மண் தேவையில்லை.
  • ரசாயன உரம் உபயோகிக்கத் தேவையில்லை.
  • பூச்சித் தாக்குதல் குறைவு.
  • பல தானிய விதைப்பால் சுற்றுச்சூழல் வளமையாக்கப்படுகிறது

என்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகங்கள் இதில் உள்ளன.

பிறகு என்ன யோசனை? கோடை வருது. தானிய விதைப்பிற்கு தயாராகுங்க!

பார்க்க –

ஆகாயத்தாமரை – மாத்தி யோசி

சென்றவாரம் ஆகாயத்தாமரையைப் பற்றி பறிந்து பேசும் செய்தி ஒன்றை விவசாய இதழ் ஒன்றில் படித்தேன். தினமலரிலும் இதைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

குளங்களில் பச்சை பசேல் என படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரையை நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் இந்த தாமரை விவசாயிகளுக்கு நன்மையும் தீமை யும் செய்கிறது. ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து வேகமாக பரவுகிறது. மிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது. இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள் விரைவில் புதிய செடியாக பரவும்.

இந்த தாவரம் நீர் நிலைகளில் தோன்றி விரைவில் பரவும். இவை அந்த தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால் குளம் குட்டைகள் விரைவில் வறண்டுவிடும். எனவே விவசாயத்திற்கு மிகவும் ஊறு விளைவிக்கும் ஓர் தாவரமாக திகழ்கிறது.

ஆகாய தாமரையில் உள் அமைப்பு மற்றும் நார் போன்ற வேர்கள் தண்ணீரில் கலந்துள்ள உலோக வடிவிலான நச்சு பொருட்கள் எளிதில் உறிஞ்சி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும். இதன் காரணமாக தண்ணீர் மாசு கட்டுப் பாட்டிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மாசு நிறைந்த தண்ணீரில் காணப்படும் உலோகங்களான “ஈயம்”, “அர்சனிக்” போன்ற நஞ்சு தன்மைகளை நீக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சியில் ஆகாயத்தாமரை பயன்படுகிறது.

இயற்கை எரிவாயு தயாரிக்க ஆகாயத்தாமரை பயன்படும் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மை கண்டறியப் பட்டுள்ளது. கேவிஐசி எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் “கலன்களை” அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இயற்கை உரம் அதிக நார் தன்மை கொண்ட தண்டு பகுதிகளை ஆகாயத்தாமரை கொண்டிருப்பதால் இயற்கை அங்கக உரம் தயாரிக்க முடியும் என்பதும் நிரூபணமாகி உள்ளது. 2 முதல் 3 மாதங்களில் நன்கு மக்கும். ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது.

சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: எம்.அகமது கபீர், 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம், திருப்பூர்-638 656.
அகமது கபீர்,
வேளாண்மை ஆலோசகர்,
93607 48542.

இலவச பயிற்சிகள் – உடனடி கவனத்திற்கு

நாள் பயிற்சி இடம் தொடர்பு
08-03-2011 அசோலா வளர்ப்பு வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல் முன்பதிவு அவசியம்.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

வேளாண் அறிவியல் நிலையம்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய வளாகம்

நாமக்கல் 637 002

04286 266345, 266244

10-03-2011 கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்
17-03-2011 வீரிய ஒட்டு ரக தக்காளி, மிளகாய், கத்திரி சாகுபடி வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்
22-03-2011 வென்பன்றி வளர்ப்பு வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்
24-03-2011 ஒருங்கிணைந்த மீன், கால்நடை வளர்ப்பு வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்
07-03-2011 முதல் 28-03-2011 முடிய இயற்கை விவசாயம், புதிய விவசாயக் கருவிகள் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, கால்நடை மூலிகை வைத்தியம் ஸ்ரீகிருஷ்ணா கோசாலா, காக்கிவாடன்பட்டி, சிவகாசி. பி. விவேகானந்தன், சேவா, 45 டிபிஎம் நகர், விராட்டிபத்து, மதுரை 0452 238 0082 – 2380 943
28-03-2011 விஞ்ஞான முறையில் ஆடுவளர்ப்பு வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630206 04577 264288

பணி நிமித்தம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இருப்பிடத்தை மாற்றிக்கொண்டவர்கள், இத்தகவலை ஆர்வமிருக்கும் விவசாய நண்பர்கள் காதில் போடுங்கள்.

விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுமா?

தமிழகத்தில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயம் தற்போது வெகுவாக அழிந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்ற விவசாயம், இப்போது 48 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை, நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து வருகிறது. உர விலை உயர்வு, வேலையாள் பற்றாக்குறையால் விவசாய நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன.

எஞ்சியிருக்கும் நிலங்களில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள், இப்போது கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இதற்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் முக்கியக் காரணம்.

கிராம ஏழைகளின் வறுமையைப் போக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், இந்தத் திட்டமானது விவசாயப் பணிகள் நடைபெறும் கால கட்டங்களிலும் செயல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல கிராமங்களில் இயந்திரங்களைக் கொண்டு பணிகள் நடைபெற்றன. மேலும் சில கிராமங்களில் விவசாயமே மேற்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் பயனடைந்தாலும், விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காததால் நிகழாண்டில் நடவுப் பணிக்கு இயந்திரங்கள், அதிக கூலி கொடுத்து வெளியூர்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தோம். இந்நிலை நீடித்தால், வருங்காலங்களில் விவசாய நிலங்களை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

எனவே, விவசாயப் பணிகள் நடைபெறும் காலகட்டம் தவிர, மற்ற காலங்களில் வேலை உறுதித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

நெல் அரவை உபரிப் பொருட்கள் மூலம் மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரித்தல்

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகமும் தஞ்சாவூரிலுள்ள இந்திய பயிர்பதன தொழில்நுட்ப கழகம் மற்றும் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சாகா புட்ஸ் ஆகியவை கூட்டாக இணைந்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவி மூலம் பல்வேறு வகை நெற்பயிர்களில் இருந்து கிடைக்கும் குறைந்த மதிப்புடைய அல்லது வீணாகும் உபரிப் பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான மதிப்பூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

நெல்லில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நுட்பங்கள்: உடைந்த அரிசி, பொடிக்குருணையிலிருந்து பால் தயாரித்தல்; உடைந்த அரிசியிலிருந்து லட்டு தயாரித்தல்; உடைந்த அரிசி, பயறு வகை உபரிப்பொருட்களிலிருந்து வடகம் தயாரித்தல்.

உடைந்த அரிசி, பொடிக்குருணைகளில் இருந்து பால் தயாரித்தல்:
தேவையான பொருட்கள்: உடைந்த புழுங்கல் அரிசி, பச்சரிசி மாவு – 100 கிராம், நீர்-800 மிலி, மிளகாய் பொடி-1கிராம், சர்க்கரை-100 கிராம், வெல்லம்-120 கிராம்.

செய்முறை: 100 கிராம் உடைந்த புழுங்கல், பச்சரிசி மாவை 800 மி.லி. தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்தபின் அதிலுள்ள நீரை வடித்துவிட்டு அதனுடன் மிளகாய்பொடி, சர்க்கரை, வெல்லம் சேர்க்க வேண்டும். அதனை கொதிக்கும் தண்ணீர் உள்ள கலனில் வைத்து 5 நிமிடம் வெப்பப்படுத்த வேண்டும். பின் அதனை அறை வெப்பநிலையில் வைத்து குளிரூட்ட வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி அதனை மூடவேண்டும். பின் இதனை குளிரூட்டி தேவையான நேரங்களில் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

உடைந்த அரிசியில் இருந்து வடகம் தயாரித்தல்:
தேவையான பொருட்கள்: உடைந்த புழுங்கல், பச்சரிசி மாவு(1:1) – 300 கிராம், மிளகாய் பொடி-1கிராம், சீரகம்-4 கிராம், உப்பு-2 கிராம், மிளகு-2 கிராம், நீர்-200 மிலி.

செய்முறை: உடைந்த புழுங்கல், பச்சரிசி மாவை எடுத்து அதை நன்றாக சல்லடை கொண்டு சலிக்க வேண்டும். பின் இரண்டு அரிசி மாவையும் 1:1 என்று சேர்த்து அதனுடன் மிளகாய் பொடி, சீரகம், நீர் சேர்த்து நன்றாக 20 நிமிடம் சமைக்க வேண்டும். பின் அந்த கூழ் போன்றதை கையில் இயங்கும் பிழிவான் (எக்ஸ்ட்ரூடர்) கொண்ட தேவையான அளவு பிழிய வேண்டும். பின் உலரவைப்பான் (டிரையர்) மூலம் உலரவைத்து அதை பாலிதீன் பைகளில் இட்டு அறைவெப்பநிலையில் பயன்படுத்தலாம். இதுபோன்ற உபரிப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களின் மூலம் உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.

தினமலர் தகவல்: எம்.ராமநாதன், பா.கலைச்செல்வம், பி.மாசிலாமணி, சந்தை விரிவாக்கத்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், விரிவாக்கக்கல்வி இயக்ககம், கோயம்புத்தூர்-641 003.

விவசாயக் கடன்களில் விவசாயம் உள்ளதா?

பசுமைப்புரட்சி தொடங்கப்பட்ட காலத்தில் 1960-களிலிருந்து கிராமங்களில் கிராமிய விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கி.பி. 2000-க்குப் பின் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கிகளும் பிணை அடிப்படையில் விவசாயக் கடன்களை வழங்குவதில் சற்று வேகம் காண்பித்தன. ஒவ்வோராண்டும் விவசாயக் கடன் ஒதுக்கீடு உயர்ந்து வருகிறது. 2010-11 பட்ஜெட்டில் விவசாயக் கடன்  ரூ.3,75,000 கோடி என்பதுகூட 2009-10 ஒதுக்கீட்டைவிட  ரூ.50,000 கோடி அதிகம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1990-லிருந்து 2008 வரை கிராமங்களில் விவசாயிகளின் கடன் நிலை பற்றிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலும், விதர்பாவிலும் பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களின் எதிரொலியாக இப்படிப்பட்ட சர்வேயை மத்திய அரசு எடுக்கப் பணித்தது. இதன் பெயர் “ஆல் இண்டியா டெப்ட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் சர்வே’. இந்த சர்வே வழங்கிய தகவலின்படி, 1990-லிருந்து 2008 வரை விவசாயக் கடன் அதாவது ஒரு வட்டிக்கடன் வழங்குவதில் தேசிய வங்கிகளின் பங்களிப்பு குறைந்துவிட்டதால் தனியார்துறை ஃபைனான்சியர்களிடம் 3 வட்டி, 4 வட்டி, 5 வட்டி, 10 வட்டி போடும் கந்துவட்டிக்கு விவசாயிகள் கடன் வாங்கும் போக்கு அதிகம். அரசுத்துறை வங்கி 1992-ல் 64 சதவீதம் 1 வட்டிக்கடனாக வழங்கியது, 2008-ல் 57 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

ஆகவே, மொத்தக்கடன் வழங்கலில் தனியார் கந்துவட்டிக்கடன் 20 சதம் என்றால் எவ்வளவு லட்சம் கோடி இப்படிப்புரண்டு, வட்டிக்கு வட்டி என்று குட்டிபோட்டுப் பெருகும்  என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1990-ம் ஆண்டிலிருந்து 2008 வரை தேசிய வங்கிகள் யார் யாருக்கு விவசாயக் கடன் வழங்கின? விவசாயக் கடன்களை வழங்குவது நகர வங்கிகளா? கிராம வங்கிகளா? அப்படியிருந்தால் அதன் பங்கு என்ன? போன்ற புள்ளிவிவரங்களை “ஷெட்யூல்டு கமர்சியல் பாங்க்ஸ் இன் இண்டியா’ வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பல்லவி சவான் என்ற பத்திரிகையாளர் ஆராய்ந்து ஹிந்து நாளிதழில் (13-8-2010) வழங்கியுள்ள ஒரு கட்டுரையில், “விவசாயக் கடன்களில் விவசாயம் இல்லை‘ என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளைக் கந்து வட்டியாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றுதான் தேசிய வங்கிகள் மூலம் கிராமங்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இதன் பலனாக தேசிய வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் கிராம-விவசாயக் கடன் 1990-2000 பத்தாண்டில் 2 சதவீதமாயிருந்த நிலை, 2001-2008-க்கு வந்தபோது 19 சதவீதமாக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நபார்டு மூலம் கிராமியக் கூட்டுறவு வங்கி மற்றும் நிலவள வங்கி (ரிசர்வ் வங்கி மூலம் பெறப்படும் நிதி) எல்லாம் சேர்த்து கிராமிய – விவசாயக் கடனின் பங்கு இதே காலகட்டத்தில் 31 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2004-ம் ஆண்டிலிருந்து 2008-க்கு வரும்போது கிராமிய – விவசாயக் கடன் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு வரும்போது விவசாயக் கடன் பல்லாயிரங்கோடி என்பது பல லட்சங்கோடிகளாக உயர்ந்துள்ளது. ஆனால், கடன் பெறும் தகுதி என்று வரும்போது விவசாயம் புறந்தள்ளப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளின் விவசாயக் கடன் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மறைமுகமாகவே விவசாயம் பயன் பெறும். மறைமுக விவசாய உதவி என்றால் விவசாய உற்பத்திக்கு வித்திடும் தொழில் நிறுவனங்கள், உரநிறுவனங்கள், விதைநிறுவனங்கள், பூச்சிமருந்து நிறுவனங்கள், விவசாய எந்திரங்களான டிராக்டர், புல்டோசர், குழாய், மோட்டார், பம்பு செட், ஆழ்துளைக் கிணறு தோண்டும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் தனியார் நிதி அமைப்புகள் ஆகியவற்றுக்கான உதவி. சொல்லப்போனால் யார், யார் விவசாயக் கடன் பெறலாம் என்ற வரையறையில் விவசாயி நீங்கலாக விவசாயத்துடன் மறைமுகத் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத்தான் முன்னுரிமை!

பசுமைப்புரட்சிக் காலகட்டத்தில் பயிர்க்கடன் என்பது நெல், தானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்வோருக்கு மட்டுமே உண்டு. விவசாயக் கடன் பற்றிய புது வரையறையில் பயிர்க்கடன் இல்லை. வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பக்குவம் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விவசாயக் கடன் பெறுவதில் முன்னுரிமை உண்டு. நவீனப்படுத்தும் அரிசி ஆலை, கோதுமை ஆலை, சமையல் எண்ணெய் ஆலை பெறுவதும் விவசாயக் கடன். விவசாயக் கடன் பெறுவதற்கு கிராமம் அவசியமில்லை. ஏனெனில், விவசாயக் கடன்களில் பெரும்பகுதி பெரிய நகரங்களில் உள்ள தேசிய வங்கிகள் வழங்கியுள்ளனவாம். சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகர்களிலும் விவசாயம் உண்டு. இதுகுறித்த புள்ளிவிவரங்களையும் வங்கி அமைப்புகளே வழங்கியுள்ளன. “கிரீன் புராடக்ட்ஸ்”, “அக்ரி புராடக்ட்ஸ்” என்ற லேபிள்கள் போதுமானவை. ஏற்றுமதி செய்யும் பொருள்களாக இருக்க வேண்டும்.

பசுமைப்புரட்சி நிகழ்ந்து வந்த காலகட்டத்தில் விவசாயிகள் கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் 12 சதவீத வட்டி (1 வட்டிக்கடன்) என்ற கணக்கில் கடன் பெற்றார்கள். அப்போது தரகர்கள் இல்லை. விலை இருக்காது. விளைச்சல் இருக்காது. வாங்கிய கடனைத் திருப்பிக்கட்ட முடியாது. ஆண்டுக்கணக்கில் வசூலாகாவிட்டால், வட்டிக்கும் வட்டி போடுவார்கள். மீண்டும் கடன் வாங்கினால் பழைய கடனை அடைத்துவிட்டு மிஞ்சுவது  ஒன்றுமில்லை என்றாலும் எப்போது விவசாயக் கடன்  ரத்தாகும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஓர் அறிவிப்பு வந்ததும், மீண்டும் கடன் வாங்குவது உண்டு.  இப்போது வாங்கிய பயிர்க்கடனை 6 மாதத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி இல்லை    என்ற சலுகை உண்டு. முன்புபோல் இப்போது பயிர்க்கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தரகர் மூலமே பெறமுடியும். ஒரு வட்டிக்கடன் பெற 2 வட்டி செலவழிக்க வேண்டும். நிறைய அலைய வேண்டும். கிராமப்பகுதிகளில் விவசாயக் கடன் அதாவது பயிர்க்கடன் என்பது லேவாதேவி அதாவது ஃபைனான்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிராமங்களிலும் சிற்றூர்களிலும் விவசாயக்கடன், பணம் டெபாசிட் செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தக் குழுவும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற தொழிலாளர்களாக இருக்கலாம். அப்படி எதுவும் தொழில் செய்தால் அது விவசாயமாக இருக்காது. சிறுதொழில் வியாபாரமாகவோ சிறுதொழில் உற்பத்தியாகவோ இருக்கலாம். குழு அமைப்புகள் 1 வட்டிக்கடன் வாங்கி மறைமுகமாக கந்துவட்டிக்கு விடுவது உண்டு. அதற்கு ஆதாரம் இருக்காது. கிராமங்களில் உள்ள வங்கிகள் 1 வட்டிக்கடன் வழங்குவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஆனால், இன்னமும் மக்கள் 2 வட்டி, 3 வட்டி வழங்கும் கந்துவட்டிக்காரர்களை நாடுவது ஏன்?

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கந்துவட்டி வழங்குவோர் பெருகி வருகின்றனர். இதுதான் கசப்பான உண்மை.

உண்மையில் இத்தகைய சூழ்நிலையில்கூட, விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வம் திக்குத் தெரியாத காட்டில் வாழும் அறியாமை நிரம்பிய விவசாயிகளிடம் உள்ளது. கந்து வட்டி வாங்கி விவசாயம் செய்யும் இவர்களுக்கு வங்கிக்கடன் வேண்டுமானால், தாதாவாக உள்ள தரகர்களைப் பிடிக்க வேண்டும். லேவாதேவி செய்யும் தாதாத் தரகர்கள் கட்சி செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கலாம்.

கி.பி. 2000-த்திலிருந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டு தொடங்குகிறது. இதை விவசாயிகளின் தற்கொலை நூற்றாண்டு எனலாம். முதலில் ஆந்திரப்பிரதேசம், பின்னர் மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்களில் பருத்தி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர்.  டிராக்டர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பால்மாடுகளுக்குத் தீவனம் இல்லாமல் மாடுகளுடன், மாடுகளை வளர்த்த மனிதர்களும் இறந்தனர். இப்போது ஆந்திர மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிக் கடனாகி, நீரும் கிட்டாமல், தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கூடி வருகிறதாம். கடந்த 10 ஆண்டுகளில் இப்படித் தற்கொலைச்சாவு, பட்டினிச்சாவின் எண்ணிக்கை 3 லட்சத்துக்குமேல் இருக்கலாம். இவர்களில் 2.9 லட்சம் விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் இம்சை தாங்காமல் இறந்துள்ளனர்.

இவர்களுக்குக் குறைந்த வட்டியில் பணம் வழங்குவோர் இல்லை. நகரத்து வங்கிகள் நகரங்களையே கிராமமாக எண்ணி விவசாயக்கடன் வழங்கும் ‘சமரசம் உலாவும்’ இடமாகிவிட்டது. சிற்றூர்களில் ரியல் எஸ்டேட்டுடன் கந்து வட்டியும் செய்யும் கல் நெஞ்சங்களுக்கு மட்டுமே விவசாயக் கடன் கிட்டுவது எளிதாக உள்ளதால் “எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடாகிய வீட்டில் தொல்லையின்றித் தூங்கிவிட” முடிவுசெய்து அந்த விவசாயி தொங்கிவிட்டான். 64-வது ஆண்டு தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. தொங்குபவனைக் கொத்தக் கழுகுகள் காத்திருக்கின்றன.

தினமணி கட்டுரை : திரு. ஆர்.எஸ். நாராயணன்

இலவச மின் மோட்டார்களால் மின் சேமிப்பு சாத்தியமா?

இலவச மின் மோட்டார்கள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, ஒரே தவணையில் அனைத்துப் பழைய மோட்டார்களும் மாற்றப்படுமா, எத்தனை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் வழங்கப்படும் என்ற உறுதியான அறிவிப்பு இல்லாததால், தமிழக முதல்வர் அறிவித்துள்ள மின் மோட்டார் வழங்கும் திட்டத்தால் 20 சதம் மின் சேமிப்பு சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் நீர்ப் பாசன வசதி செய்யப்பட்ட மொத்த வேளாண் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர். இதில் 15 முதல் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடி நீர்ப் பாசனத்தை நம்பியே உள்ளன. தமிழகத்தில் உள்ள 19 லட்சம் மின் இணைப்பு பெற்ற பம்பு செட்டுகளில், 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுடையவை.

குழாய் உள்ளிட்ட இதர சாதனங்களுடன் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட புதிய நீர்மூழ்கி மோட்டாரின் விலை ரூ. 40,000. மோட்டார் மட்டும் ரூ. 25,000-லிருந்து ரூ. 30,000 வரையிலான விலையில் கிடைக்கும். இதுவே கம்ப்ரசர் மோட்டார் என்றால் ரூ. 28,000 தொடக்க விலையாகிறது.

எனவே, சராசரியாக புதிய மின் மோட்டாரின் விலை ரூ. 30,000 என்று வைத்துக் கொண்டால், தமிழகத்திலுள்ள 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கும் மோட்டார் வழங்க ரூ. 4,500 கோடி ஒதுக்க வேண்டும்.

அடுத்து, மோட்டார்களை எப்படி வழங்கப் போகிறார்கள் என்பதும் மின் சேமிப்புக்கு முக்கியமானது. இலவச எரிவாயு இணைப்பு, இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் போன்ற திட்டங்கள் தவணை அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற, முதல் தவணையாக 3 லட்சம் வீடுகளுக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டு, மீதமுள்ளவை ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன்படி, உதாரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் அல்லது மூன்று லட்சம் மோட்டார்கள் வழங்குவோம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக பழைய மோட்டார்கள் அனைத்துக்கும் பதிலாக புதிய மோட்டார்களை ஒரே தவணையில் பொருத்தினால்தான் மின் சேமிப்பு சாத்தியமாகும். எனவே, தேர்தலுக்கு முன்பாக ஒரே தவணையில் மின் மோட்டார்கள் வழங்கப்படுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் மூழ்கி மின் மோட்டார்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு கம்ப்ரசர் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:

விவசாயிகள் ஐந்து முதல் ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், உதாரணமாக மாவட்டம் முழுவதற்கும் விவசாயத்துக்கு மட்டும் 500 கிலோ மெகாவாட் மின்சாரம் செலவாகும் என்று ஒதுக்கீடு செய்வோம்.

ஆனால், பல விவசாயிகள் 15 முதல் 25 குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை ஊறிஞ்சுவதால், ஒதுக்கீட்டைவிட அதிக மெகாவாட் மின்சாரம் இழுக்கப்பட்டு மின் இழப்பு அதிகரிக்கிறது.

அரசு ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் கொடுத்தாலும், பெரும்பாலான விவசாயிகள் அதைப் பயன்படுத்தாமல் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் உபயோகிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

எனவே, இலவசமாக புதிய மின் மோட்டார்களை கொடுப்பதனால் மட்டும் மின் சேமிப்பு சாத்தியமாகிவிடாது என்கிறார் அந்த அதிகாரி.

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:

நெல், கரும்பு, தென்னை, வாழை தவிர இதர காய்கறி தோட்டக்கலைப் பயிர்கள், பருப்பு பயிர்கள் பயிரிட்டால் இலவச மின்சாரம் கிடையாது என்றும், அவ்வாறு பயன்படுத்திய விவசாயிகள் மீது மின் திருட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது இலவச மின்சாரத்தை படிப்படியாக குறைக்க அரசு கையாளும் தந்திரமாகத் தெரிகிறது.

மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை பயிர்களின் அடிப்படையில் பாகுபடுத்தாமல், வேளாண்மை உற்பத்தி மின்சாரம் என்று வழங்க அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பயிர்ப் பாகுபாடு கூடாது என்பது போல, சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடும் கூடாது.  பயிர்ப் பாகுபாடு அடிப்படையில் இலவச மின்சாரத்தை பறித்துக் கொண்டு இலவச மின் மோட்டார், அதுவும் குறைந்த திறன்கொண்ட மின் மோட்டார்கள் வழங்குவதில் விவசாயிகளுக்கு நன்மையில்லை. மின் சேமிப்பும் சாத்தியமாகாது என்றார் கல்யாணம்.

தமிழக மக்கள் கவனத்தை திசை திருப்பும் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல்,  விவசாயிகளுக்கும், மின் சேமிப்புக்கும் வாய்ப்பளிக்கும் திட்டமாக மின் மோட்டார்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி கட்டுரை – த. முருகானந்தம்