வில்வமரத்தின் பயன்கள்

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இதன் தழை ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது. இதன் காய், கனி, வேர் ஆகிய அனைத்தும் நல்ல பலனை நமக்கு கொடுக்கிறது. பெரும்பாலும் வில்வமரம் ஈஸ்வரன் கோயில்களில் உள்ளது. வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப் படுகிறது. வில்வமரம் இந்தியாவில்தான் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. எனவே இது இந்தியாவில் முக்கியமாக சிவஸ்தலங்களில் வளர்க்கப் படுகின்றன. இது பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வளர்க்கப் படுகிறது. இது சுமார் 10 மீட்டர் அதாவது 30 அடி வரை வளரும் தன்மையுடையது. இதன் இலைப்பகுதிகளில் பூக்கள் மாசி, பங்குனி மாதங்களில் பூக்கும். இதன் பூக்கள் பன்னீர் போன்ற வாசனை உடையதாக இருக்கும். பிறகு இது வில்வ பழமாக மாறும்.

வில்வ பழம்: வில்வ பழத்தில் பல சத்துக்கள் உள்ளன. அவை புரதச்சத்து, தாதுப்பொருள் சத்து, மாவுப்பொருள் சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்புச் சத்துக்கள் உண்டு. மேலும் வைட்டமின் ஈ சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உள்ளன.
வில்வ பழத்தின் பயன்கள்: வில்வ பழத்திலிருந்து ஜாம், ஸ்குவாஷ், சர்பத், சிரப் ஆகியவைகளை தயாரிக்கலாம். கற்கண்டு, மிட்டாய் மற்றும் மிட்டாய்பானங்கள் தயாரிக்கலாம். இதன் குழம்பு வண்ணப் பொடிகளுடன் கலந்து படங்கள் வரைய பயன்படுகிறது. இதன் பழச்சதையை சோப்பு போலும் பயன்படுத்தலாம். பழத்தின் ஓட்டிலிருந்து ஒரு வகையான தைலம் தயாரிக்கலாம். இது வில்வ தைலம் எனப்படுகிறது. இதன் விதைகளிலிருந்து எண்ணெய் அதாவது வேப்பங்கொட்டையில்இருந்து வேப்ப எண்ணெய் தயாரிப்பதுபோல் வில்வ எண்ணெய் தயாரிக்கலாம். இதன் மரப்பட்டையிலிருந்து காகிதம் தயாரிக்கலாம். வில்வ பழத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வில்வ பழச்சதைகள் தண்ணீரில் போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனை ஜுஸ் செய்தும் சாப்பிடலாம். வில்வ இலைகளிலிருந்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும். மேலும் வில்வ இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அதனை காய்ச்சி, வடிகட்டி தினந்தோறும் அரை டம்ளர் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இதன் பழச்சதையை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றோட்டம், வயிற்று கடுப்பு குணமாகும். இதன் சதையுடன் பசும்பால் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தல் கண் எரிச்சல், தலைச்சூடு தணிந்துவிடும். இதன் இலைகளை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தலைவலி ஆகியவை நீங்கிவிடும். வில்வப் பழம் குடலுக்கு வலிமையை கொடுக்கும். ஜீரணம் ஆகிவிடும். இவை அனைத்தும் உள்ள இந்த மரத்தை நாம் வீடுகளில் வளர்த்து பயன்பெறலாம். வீடுகளில் வேப்பமரத்தை நட்டு பயனடைவது போல வில்வமரத்தையும் நட்டு நாம் பயன்பெறலாம்.

டி.எம்.என்.தண்டபாணி, விவசாயம் தாத்தையங்கார்பேட்டை, திருச்சி-621 214.