அவிநாசியில் 'பர்ரி' பேரிச்சை நடவு

விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக “பர்ரி’ என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.

அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும்.

புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார்.

திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர்.

வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர்.