இயற்கை முறை கறிப்பலா சாகுபடி : நவீன தொழில்நுட்பம்

இதனுடைய பழங்கள் 25 சதம் மாவுச்சத்தும், கால்சியம், வைட்டமின் ஏ, பி, போதுமான அளவிலும் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இதனை “பிரெட் புரூட்’ என்று அழைத்தனர். தென்னிந்தியாவில் இப்பழம் சமையலுக்கு பயன்படுகிறது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். மண், தட்பவெப்ப நிலை: மேற்கு கடற்கரை ஓரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கீழ்பழநிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை பகுதிகளில் காணப்படுகிறது. கரிமச்சத்து நிறைந்த செம்பொறை மண் ஏற்றது. காற்றின் ஈரப்பதம் மிகுந்தும், சூடான தட்பவெப்பமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண்டு மழையளவு 2000-2500 மி.மீ. உள்ள இடங்களில் நன்கு வளர்கிறது.

வகைகள்:

  1. விதையுள்ளது
  2. விதைஅற்றது.

விதையுள்ள வகைகள் சமையலுக்கு ஏற்றதல்ல. விதைகளை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடலாம். விதையற்ற வகைகளே பொதுவாக சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா வகைகள் 20 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. விட்டம் கொண்ட வேர்த்தண்டுகள் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்த்தண்டுகளை செங்குத்தாக இல்லாமல் படுக்கை முறையில் நடவு செய்ய வேண்டும். நடவின்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.

நீர்பாசனம்:

நடவு செய்த முதல் 2 மாதங்களுக்கு தினமும் 8-10 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு 2 வருடம் வரை 10-20 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.

உரமிடுதல்:

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கியதொழு உரம் இட்டால் போதுமானது.

பின்செய் நேர்த்தி:

களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். மரத்தின் அருகே ஆழமாக செலுத்தினால் வேர்கள் பாதிக்கப்படும்.

ஊடுபயிர்:

காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக இஞ்சி, மிளகு, வெனிலா ஆகியவற்றை பயிரிடலாம்.

நோய்:

பழங்களைத் தாக்கும் மென்மையழுகல் நோயானது பழங்களை அழுகச் செய்து மரத்திலிருந்து உதிரச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தசகவ்யா என்ற இயற்கை கலவையை தெளிக்க வேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 5 முதல் 6 வருடங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்பிடிப்பை அதிகரிக்க கையால் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 10 மணி வரை பூவடிச் செதிலிலிருந்து பெண் மஞ்சரியானது விரிகிறது. அதிலுள்ள ஒவ்வொரு பூக்களும் படிப்படியாக திறக்க 72 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.

ஒரு ஆண் மஞ்சரியை ஒரு பெண் மஞ்சரியின் அருகே எடுத்துச் சென்று மகரந்தத்தைப் பெண் மஞ்சரியின் சூல்முடியின்மீது வைத்து மென்மையாகத் தேய்க்க வேண்டும். பெண் பூ திறந்த 3 நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்துவிட வேண்டும். பெண் மஞ்சரியில் உள்ள அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் திறப்பதில்லை. எனவே மகரந்தச் சேர்க்கையை திரும்பவும் 4 முதல் 5 நாட்களுக்குத் தினமும் செய்துவர வேண்டும். மஞ்சரி விரிந்த 60 முதல் 90 நாட்களில் காய்கள் கிடைக்கின்றன. பழத்தின் நிறமானது பச்சையிலிருந்து மஞ்சள் கலந்த பச்சையாக மாறும்போது பழம் முதிர்ச்சி அடைகிறது. பழங்களை பழுப்பதற்கு முன் அறுவடை செய்தால் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு மரமானது ஒரு வருடத்தில் 50-100 பழங்கள் (25-50 கிலோ) வரை கொடுக்கிறது. நீளமான கம்புடன் கூடிய கொக்கியைக் கொண்டு பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு கிலோ பழத்தின் விலை சராசரியாக ரூ.10 என்று எடுத்துக்கொண்டால் ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.250முதல் ரூ.500 வரை மொத்த வருமானமாகப் பெறலாம்.

தகவல்:

க.வி.ராஜலிங்கம்,
ந.அசோக ராஜா,
மு.ப.திவ்யா,
வேளாண் காடுகள் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, 04254-222 010, 225 064