தமிழகத்தில் நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக நடத்திய பூச்சி, நோய் ஆய்வின்படி டிசம்பர் மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் வெளியிடப்படுகிறது.
நெல் :
நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பரவலாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் மற்றும் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். அந்துப் பூச்சி அதிகமாக காணப்பட்டால் – டிரைகோகிராம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் வயலில் விடவும்.

இலை சுருட்டு
பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரசாயன பூச்சிக் கொல்லி குளோர்பைரிபாஸ் 2.5 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அ) பிரப்பனோபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்றளவில் கலந்து தெளிக்கவும். நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் திருவாரூர் மாவட்டத்தில் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் தட்பவெட்ப நிலை சாதகமாக இருந்ததாலும் நெற்பயிரினில் நெல்குலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில் டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாட்கள் இடை வெளியில் தெளிக்கவும்.
பருத்தி:

சாறு உறிஞ்சும் பூச்சி
தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காய் புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தவும்.
கரும்பு:
சிவகங்கை, தஞ்சை, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுபடுத்த டிரைக்கோகிராம்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தவும்.
நிலக்கடலை:
நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.
மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி
மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலைகளைத் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் விட்டு கட்டுப்படுத்தவும்.
மேலும், விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422-6611214.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422- 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.