மரம் வளர்ப்பு அட்டவணை

மரம் மண் கன்று இடைவெளி கன்றுகள்/ஏக்கர் அறுவடை பயன்பாடு
மலைவேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள், மணல் கலந்த வண்டல் மண் ஏற்றது 15 அடி 200 7 ஆண்டுகள். ஏக்கருக்கு 7 லட்சம் 3ம் ஆண்டில் தீக்குச்சி, 4ம் ஆண்டில் பிளைவுட், 7ம் ஆண்டுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கலாம்.
குமிழ் வடிகால் வசதி கொண்ட ஆழமான மண் கண்டம் உள்ள அனைத்து வகையான மண்ணிலும் வளரும் 15 அடி 200 8 ஆண்டுகள். ஏக்கருக்கு 14 லட்சம் கதவு, நிலை, ஜன்னல், மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படும்.
சந்தனம் உவர்நிலம் அல்லாத மண் கண்டம் உள்ள நிலங்கள் வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தனத்திற்கும் ஏற்றவை. 16 அடி 200 25 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 கோடி வாசனைப் பொருட்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள் செய்ய உகந்தது.
மூங்கில் செம்மண் இருமண்பாடு நிலங்கள் ஏற்றவை. மற்ற நிலங்களில் குழிக்குள் செம்மண் இட்டு நடலாம். 15 அடி 200 5 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 லட்சம் கட்டட வேலை, காகித ஆலைப் பயன்பாட்டுக்கு தேவை
சவுக்கு மணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை 4 அடி 4000 3 ஆண்டுகள். ஏக்கருக்கு 80 ஆயிரம் கட்டிட வேலை, எரிபொருள், காகிதக்கூழ் ஆகியவை
தேக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்கள் ஏற்றவை 6 அடி 1000 25 ஆண்டுகள். (7 மற்றும் 12ம் ஆண்டுகளில் மரங்களை கலைத்துவிட வேண்டும்) ஏக்கருக்கு 25 லட்சம் மரப்பொருட்களைத் தயாரிக்கலாம்

மூலம் – தினமலர் செய்தி

சவுக்கு சாகுபடிக்கு தண்ணீரில் வளர்க்கப்பட்ட நாற்றுக்கள்

தற்போது வடகிழக்கு பருவமழை ஓரளவிற்கு குறைந்து வருகின்றது. இது மார்கழி பட்டமாகும். மார்கழி-தைப் பட்டத்தில் விவசாயிகள் அதிகப் பரப்பளவில் சவுக்கு நாற்றினை நடுவார்கள். விவசாயிகள் மரங்களில் இருந்து விதைகளை சேரித்து சவுக்கு நாற்றுக்களை உற்பத்தி செய்து விவசாயம் செய்துவந்தனர். விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட மரங்கள் சிறியது பெரியதாக ஒரு சீர் இல்லாமல் இருக்கும். மேலும் இம்மரங்கள் வறட்சியில் வாடி இறந்துவிடும். மேலும் மழைக்காலங்களில் புயல் காரணத்தினால் அடியோடு சாய்ந்துவிடும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சவுக்கு நாற்றுக்களை புதிய முறையில் உற்பத்தி செய்து தனக்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார் வெங்கடபதி ரெட்டியார் (நம்.6, பெருமாள் கோயில் தெரு, கூடப்பாக்கம், புதுச்சேரி-605 502). ஜனாதிபதி பரிசிலிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்று அடக்க ஒடுக்கமாக விவசாயிகளின் வாழ்வில் வளம்பெருக அமைதியாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்.

இவர் சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண் கலவை இல்லாமல் தண்ணீரில் நாற்றுக்களை உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளார். இந்த முறையை ஆங்கிலத்தில் “வாட்டர் கல்சர் மெதட்’ என்பர். இவர் இந்த முறையை இணையதளம் மூலம் அறிந்துகொண்டு ஒரு உந்துதலைப் பெற்றார். இவர் பார்த்தது யாதெனில் சீனாவில் அரசு பண்ணையில் வாட்டர் கல்சர் முறையில் சவுக்கு நாற்றுக்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்துகடலோரப் பகுதிகளில் அதிகப் பரப்பளவில் நட்டு வெற்றி பெற்ற காட்சியாகும்.

இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக கற்று உடனே சோதித்துப் பார்த்து புதுச்சேரியில் அறிமுகப்படுத்தினார். இவர் என்ன செய்தார் என்பதைக் கவனிப்போம்.

  • சவுக்கு மரங்களில் 8-10 அங்குலம் அளவில் குச்சிகளை சேகரித்து சிறிய கட்டுகளாக கட்டினார்.
  • இந்த கட்டுகளை வேர் ஊக்கி “ஐ.பி.ஏ’ கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்தார்.
  • பிறகு 8-10 செ.மீ. பிளாஸ்டிக் டம்ளரில் 4 செ.மீ. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஊற்றி அதில் “ஐ.பி.ஏ.’ கலவையில் ஊறவைத்த கட்டுகளை மாற்றினார்.

அன்றாடம் தண்ணீரை மாற்றிக் கொண்டே இருந்தார். இந்த முறையை அனுசரித்து 8 முதல் 15 தினங்களில் குச்சிகளில் நன்கு வேர்கள் வளர்ந்தன.

பிறகு மண் கலவை அல்லது மண் இல்லாத கலவையில் செடிகளை வளர்த்து இவைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன. இந்த முறையில் குறைந்த இடத்தில் அதிக நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். வேலை ஆட்கள் குறைவு.

இந்த முறையில் கவனிக்க வேண்டியது யாதெனில் சுத்தமான தண்ணீரினை உபயோகிக்க வேண்டும். குழாய் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. அதில் குளோரின் கலந்துள்ளது. நன்கு “ஆட்டோகிளோவில்’ வடிகட்டப்பட்ட தண்ணீரை உபயோகிக்கலாம். இவர் மேலும் ஆராய்ச்சியில் அக்கறை காட்டி கன்றுகள் சிறியதாகவும், பெரியதாகவும் அதாவது ஒரே சீராக இல்லாத தன்மையை அகற்ற ஆஸ்திரேலியா முறையை அனுசரித்தார்.

இந்த முறையில் குச்சிகளில் உள்ள இலைகளை வெட்டி எடுத்து வேர் உருவாக்கி நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். இது வீரிய ரகம் என்கிறார். இந்த முறையில் சவுக்கு நாற்றுக்களை உருவாக்க பசுமைக் குடில்களை அமைத்து அதில் தாய்ச் செடிகளை வளர்த்து வருகிறார். ஆக விவசாயி தற்போது இரண்டு ரகங்களில் (சீனா, ஆஸ்திரேலியா) ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரை கட்டுரை ஆசிரியர் “ஐயா! தற்போது நடப்பது சவுக்கு நாற்று நடும் காலம். தங்கள் ஆராய்ச்சியை படித்த விவசாயிகள் நாற்றுக்கள் கிடைக்குமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்’ என்று கேட்டபோது கீழ்க்கண்ட விவரம் கிடைத்தது.

நான் தற்சமயம் ஆஸ்திரேலியா மற்றும் சீனா இரண்டு ரகங்களில் கன்றுகள் உற்பத்தி செய்ய இருக்கின்றேன். விவசாயிகளுக்கு விலை குறைவாக தரமான சவுக்கு நாற்றுக்களை எந்தமுறையில் கொடுக்க முடியுமோ அந்த முறையை தொடருவேன் என்றார். சவுக்கு சாகுபடியில் வெகு சீக்கிரத்தில் விதை போட்டு, நாற்றுக்களை உண்டாக்கி அவைகளை நட்டுக்கொண்டிருந்த பழைய முறை மாறி தண்ணீரில் வளர்க்கப்பட்ட நாற்றுக்களை நடும் புதிய முறை பிரபல்யமாகப் போவது நிச்சயம். “பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்க்கொப்ப ரெட்டியார் போன்ற விவசாய பிரம்மாக்கள் விவசாயத்திற்கு மாபெரும் சேவைகள் செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.