கொய்யா மேட்டர் – கொய்யா பழச்சாறு

கொய்யா பழச்சாறு:

நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்துக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து பழக்கூழ் தயாரிக்க வேண்டும். இந்தப் பழக்கூழை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்துப் பின் குளிரவைத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் வீதம் பெக்டினால் என்னும் என்சைம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் என்னும் பாதுகாப்பான் (100 பிபிஎம்) சேர்த்து சுமார் 24 மணி நேரம் வைக்க வேண்டும். பின் இதனை மெல்லிய துணி கொண்டு வடிகட்டிய பின் கிடைக்கும் பழச்சாறை 85 செ. வெப்பநிலை வரும்வரை சூடுபடுத்தி நன்கு சுத்தம் செய்த பாட்டில்களில் நிரப்பி மூடிவிட வேண்டும். நன்கு கொதிக்கும் நீரில் இப்பாட்டில்களை 30 நிமிடங்கள் வைத்திருந்து பின் எடுத்து குளிர்ந்த நீரில் உடனே குளிரவைக்க வேண்டும். தேவைப்படும்பொழுது தேவையான அளவு நீரும் சர்க்கரையும் சேர்த்து பருகலாம்.

கொய்யாப்பழ ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்:

 • பழச்சாறு – 1 லிட்டர்,
 • சர்க்கரை – முக்கால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-3 கிராம்.

செய்முறை: நன்கு பழுக்கும் நிலையிலுள்ள கொய்யாப் பழங் களை கழுவி நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கியபின் பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அடி கனமாக உள்ள பாத்திரத்தில் பழத் துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி பழங்கள் அசையாத வாறு கலக்காமல் மெதுவாக மேலே உள்ள தண்ணீரை மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். இதுதான் பெக்டின் அடங்கிய பழச்சாறாகும். பின்னர் பழச்சாறுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து கலக்கி நன்கு கரைந்தபின் இன்னொரு முறை வடிகட்ட வேண்டும். அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஜெல்லி பதம் வரும்வரை வேகவைக்க வேண்டும். (ஜெல்லி பதம் அறிதல்: ஜெல்லியை கரண்டியில் எடுத்து ஆறவைத்து ஊற்றினால் கட்டியாக விழாமல் தொடர்ந்து கீழே விழவேண்டும்) ஜெல்லியின் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு சுத்தம் செய்த வாய் அகன்ற பாட்டில்களில் நிரப்பி மூடிவிட்டு பாதுகாத்து வைக்க வேண்டும். தேவைப்படும் பொழுது மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

கொய்யாப் பழ சீஸ்

தேவையான பொருட்கள்:

 • பழக்கூழ் – 1 கிலோ,
 • சர்க்கரை-ஒன்னேகால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-2.2 கிராம்,
 • வெண்ணெய்-50 கிராம்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்து கழுவி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் சம அளவு நீரை சேர்த்து பழத் துண்டுகள் மிருதுவாகும்வரை வேகவைத்து சல்லடையில் போட்டு தோல் மற்றும் கொட்டைகளை நீக்க வேண்டும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கெட்டியாகும்வரை அடுப்பில் வைத்து சூடாக்கி, தேவைக்கேற்ப சிவப்பு நிறம் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி சீராக பரப்பி சிறு துண்டுகளாக வெட்டி வெண்ணெய் காகிதத்தில் சுற்றி பாட்டிலில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு நல்ல உணவாகும்.

கொய்யாப்பழ தயார்நிலை பருகும் பானம்

தேவைப்படும் பொருட்கள்:

 • பழச்சாறு-1லிட்டர்,
 • சர்க்கரை-1.25 கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-28 கிராம்,
 • தண்ணீர்-7.7 லிட்டர்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யா பழங்களை தேர்ந்தெடுத்து நான்கு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து இரும்பு வடிகட்டியில் வடித்து பழச்சாறை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். தண்ணீருடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, குளிரச் செய்து மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். பழச்சாறை சிறிது சிறிதாக சர்க்கரைப்பாகுடன் சேர்த்து முழுவதும் கரையும்வரை கலக்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் ஏற்றி 80 டிகிரி செ. வெப்பநிலைவரும்வரை சூடாக்கிய பின் குளிரச்செய்து நன்கு சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் அடைத்து பாதுகாத்து வைத்துப் பருகலாம்.

(தினமலர் தகவல்:

முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் க.மீனாட்சிசுந்தரம்,
வேளாண் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், குன்றக்குடி-630 206)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

 

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

ஆடுதுறை, மருங்குளம் பண்ணைகளில் கொய்யாக் கன்றுகள் விற்பனை

தமிழ்நாட்டில் சுமார் 8,500 ஹெக்டேரில் கொய்யா பயிரிடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 160 ஹெக்டேரில் இது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அங்காபாத், லக்னோ-49, லக்னோ-46 ரக கொய்யா நல்ல மகசூல் தரவல்லது. இதை ஐந்துக்கு, ஆறு மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.

45-க்கு 45 என்ற அளவில் குழிவெட்டி அதில் தொழுஉரம் 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ, மேல் மண் இட்டு, குழியில் லிண்டேன் 1.3 சதத் தூள் விட்டு நடவு செய்ய வேண்டும். நட்ட அன்றும், பின்னர் மூன்று நாள்கள் கழித்தும் தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். பின்னர், 10 நாள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

நடவு செய்யப்பட்ட கொய்யாப் பயிர்கள் இரண்டரை ஆண்டுகள் முதல் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.

நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தில் இருந்து ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 20 டன்கள் வரை மகசூல் பெறலாம்.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. எனவே, இதற்கு சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதால், விவசாயிகள் இதை சாகுபடி செய்து பயன்பெறலாம்.

தினமணி தகவல் . எம் செல்வராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்

அலகாபாத் சபேத் கொய்யா

கொய்யா ரகங்களில் அலகாபாத் சபேத் கொய்யாவும் நுகர்வோர்களால் விரும்பப்படுகிறது.

சாகுபடி முறைகள்:

கொய்யாவில் வருடம் பூராவும் அறுவடை இருந்துகொண்டிருந்தாலும் இரண்டு முக்கிய அறுவடைப் பருவங்கள் உள்ளன.

 • முதல் அறுவடை வைகாசி முதல் ஆவணி வரையிலும்,
 • இரண்டாவது அறுவடை ஐப்பசி முதல் தை வரையிலும்

கிடைக்கும். ஒரு மரம் ஒரு வருடத்தில் இரண்டு அறுவடைகளிலும் சேர்ந்து மொத்தமாக 20 கூடை பழங்கள் கொடுக்கும். ஒரு மரம் ஒரு வருடத்தில் 120 கிலோ மகசூல் கொடுக்க வேண்டும். இதை அடைய விவசாயிகள் பாடுபட வேண்டும். கொய்யாவில் மகசூலினை அதிகரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவும்.
உரமிடல்:

ஆண்டிற்கு இருமுறை அதாவது ஜூன் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் உரமிட வேண்டும். கொய்யாவில் மகசூல் திறனையும், சுவையினையும் அதிகரிக்க இயற்கை உரங்கள் இடுவதற்குக் கவனம் செலுத்த வேண்டும். நன்றாக வளர்ந்து காய்த்துக் கொண்டிருக்கும் மரங்களுக்கு கீழ்க்கண்ட அளவு உரங்களை மேலே விவரித்தபடி இருமுறை இடவேண்டும்.

 • மக்கிய தொழு உரம்-100 கிலோ,
 • அம்மோனியம் சல்பேட்-3 கிலோ,
 • சூப்பர்-2 கிலோ,
 • மூரியேட் ஆப் பொட்டாஷ் -2 கிலோ.

கொய்யா மரத்திலிருந்து ஒரு மீட்டர் தள்ளி மரத்தைச் சுற்றிலும் மண்வெட்டியால் சிறிது பள்ளம் வெட்டி அதனுள் உரமிட்டு மண்ணால் மூடவேண்டும். விவசாயிகளுக்கு ஆலைக்கழிவு கிடைக்குமாயின் அதனையும் பயன்படுத்தலாம். இதனை ஆலையில் இருந்து பண்ணைக்குக் கொணர்ந்து சில நாள்கள் ஆறப்போட்டு பின் உபயோகிக்கலாம்.

பாசனம்:

பாசனம் வாரம் ஒரு முறை செய்வது நல்லது. சற்று பாசன வசதி குறைந்த இடத்தில் 15 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். பாசனம் செய்ய இயலவில்லையெனில் கொய்யா சாகுபடியை கைவிட்டுவிடலாம். முதல் அறுவடை வெயில் காலத்தில் வரும். இந்த அறுவடை முடிந்தவுடன் 15-20 நாட்கள் தற்காலிகமாக பாசனத்தை நிறுத்தவேண்டும். இது தழை மஞ்சளாகி கீழே கொட்ட உதவுவதுடன் செடிக்கு ஓய்வு அளிக்கின்றது. அடுத்து அதிக மகசூல் கொடுக்க செடி தன்னிடத்திலுள்ள ஊட்டச்சத்தினை அதிகப்படுத்திக் கொள்கிறது. இந்த காலத்திற்கு பின் உரம் வைத்து பாசனம் செய்யலாம்.

இடை உழவு:

கொய்யா மரங்கள் 20 அடி அடுத்து 20 அடி இடைவெளியில் நடப்பட்டு இருக்கும். மழைக்காலங்களில் செடிகளின் இடையே உழவு செய்வது முக்கியம். இவை, புல், பூண்டுகளை தலைகாட்டாத வண்ணம் செய்வதோடு, மண்ணின் ஈரம் காக்கும் தன்மையினை அதிகரிக்கும்.

களையெடுப்பது, கொத்துவது:

 • கொய்யாவிற்கு மரத்தின் அடியில் அகலப்பாத்தி போட்டு அதில் பாசனம் செய்வதோடு, உரங்கள் வைக்கப்படுகின்றன. இந்தப்பாத்தியில் களை முளைக்காமல் இருக்க நன்கு கொத்திவிட்டு வேர்பாகத்தில் காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
 • மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். கொய்யா மரங்களை அதிகமாக படர்ந்து வளர்ந்துவிடாமல் பார்ப்பதற்கு குடை போன்ற உருவம் உள்ளபடி கவாத்து செய்ய வேண்டும்.
 • பழங்களை அறுவடை செய்தபிறகு காய்ந்த குச்சிகள், “”வாட்டர் சக்கர்” என்று சொல்லப்படும் மலட்டுக்கிளைகள் இவைகளை அகற்ற வேண்டும்.
 • ஒல்லியாகவும், நீளமாகவும் வளர்ந்த கிளைகளின் நுனிகளைக் கிள்ளிவிட வேண்டும்.
 • உடனே கிளையில் புதிய துளிர்கள் தோன்றும். இந்தத் துளிர்களில் காய்கள் பிடிக்கும்.
 • சில சமயம் கிளைகளின் கீழ் நோக்கி வளைத்து முளையடித்துக் கட்ட வேண்டும். இதனால் கிளையில் துளிர்கள் தோன்றி காய் பிடிக்கும்.
 • இளம் செடிகளில் கவாத்து செய்தலுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 • கவாத்து செய்தபிறகு காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டு சதவீதம் உடனடியாக தெளிக்க வேண்டும். கவாத்து செய்தபிறகு மகசூல் அதிகமாக கிடைக்கின்றது. கவாத்து செய்யாவிட்டால் மகசூல் குறைந்துவிடும். வெகு தூரத்திற்கு எடுத்துச் சென்றாலும் பழம் அழுகிவிடுவதில்லை.

கொய்யாவினை பேன், தேயிலைக்கொசு, செதிள் பூச்சி, பழ ஈ போன்ற பூச்சிகளும், வாடல் நோய், கன்கர் நோய் போன்ற நோய்களும் தாக்குகின்றன. பூச்சிகளைக் கட்டுப்படுத்த நுவக்ரான் மருந்தினையும், நோயினைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 மருந்தினையும் தகுந்த அளவில் பயன்படுத்த வேண்டும். கொய்யா மரங்களுக்கு மாதம் ஒரு முறை தவறாமல் வேப்பம் பிண்ணாக்கு நீர் கரைசலைத் தெளித்துவந்தால் பூச்சிபாதிப்பு இல்லாமல் இருக்கின்றது. பூச்சிகள் உயிரோடு இருந்தாலும் அவைகள் செடிகளை அழிப்பதில்லை. பட்டினி கிடந்து அழிந்துவிடுகின்றன.

பெங்களூருவுக்கு அருகிலுள்ள ஹசர்கட்டா என்ற இடத்தில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்நிலையம் கொய்யாவில் விழக்கூடிய மாவுப்பூச்சியை அழிக்க உயிரியல் முறையினைக் கண்டுபிடித்துள்ளது. அவர்களை அணுகி முறையினைத் தெரிந்து அனுசரித்து பயன்பெறலாம்.

பழங்களின் தரத்தை உயர்த்த:

மரங்களில் பூக்கள் மலராமல் மொட்டாக இருக்கும்போது 100 மில்லிகிராம் ஜிப்ரலிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து இந்தக் கலவையைத் தெளிக்கும்போது பழங்களில் விதைகள் குறைந்து, பழங்கள் சற்று பெரியதாகி அதிக சுவையினைப் பெறுகின்றன. இக்கலவை மொட்டுகளின் மேல் ஒட்டுவதற்கு டீபால் என்னும் சோப்புக்கலவையை ஜிப்ரலிக் அமிலக் கலவையினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்