கொய்யா மேட்டர் – கொய்யா பழச்சாறு

கொய்யா பழச்சாறு:

நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்துக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து பழக்கூழ் தயாரிக்க வேண்டும். இந்தப் பழக்கூழை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்துப் பின் குளிரவைத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் வீதம் பெக்டினால் என்னும் என்சைம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் என்னும் பாதுகாப்பான் (100 பிபிஎம்) சேர்த்து சுமார் 24 மணி நேரம் வைக்க வேண்டும். பின் இதனை மெல்லிய துணி கொண்டு வடிகட்டிய பின் கிடைக்கும் பழச்சாறை 85 செ. வெப்பநிலை வரும்வரை சூடுபடுத்தி நன்கு சுத்தம் செய்த பாட்டில்களில் நிரப்பி மூடிவிட வேண்டும். நன்கு கொதிக்கும் நீரில் இப்பாட்டில்களை 30 நிமிடங்கள் வைத்திருந்து பின் எடுத்து குளிர்ந்த நீரில் உடனே குளிரவைக்க வேண்டும். தேவைப்படும்பொழுது தேவையான அளவு நீரும் சர்க்கரையும் சேர்த்து பருகலாம்.

கொய்யாப்பழ ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்:

 • பழச்சாறு – 1 லிட்டர்,
 • சர்க்கரை – முக்கால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-3 கிராம்.

செய்முறை: நன்கு பழுக்கும் நிலையிலுள்ள கொய்யாப் பழங் களை கழுவி நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கியபின் பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அடி கனமாக உள்ள பாத்திரத்தில் பழத் துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி பழங்கள் அசையாத வாறு கலக்காமல் மெதுவாக மேலே உள்ள தண்ணீரை மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். இதுதான் பெக்டின் அடங்கிய பழச்சாறாகும். பின்னர் பழச்சாறுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து கலக்கி நன்கு கரைந்தபின் இன்னொரு முறை வடிகட்ட வேண்டும். அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஜெல்லி பதம் வரும்வரை வேகவைக்க வேண்டும். (ஜெல்லி பதம் அறிதல்: ஜெல்லியை கரண்டியில் எடுத்து ஆறவைத்து ஊற்றினால் கட்டியாக விழாமல் தொடர்ந்து கீழே விழவேண்டும்) ஜெல்லியின் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு சுத்தம் செய்த வாய் அகன்ற பாட்டில்களில் நிரப்பி மூடிவிட்டு பாதுகாத்து வைக்க வேண்டும். தேவைப்படும் பொழுது மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

கொய்யாப் பழ சீஸ்

தேவையான பொருட்கள்:

 • பழக்கூழ் – 1 கிலோ,
 • சர்க்கரை-ஒன்னேகால் கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-2.2 கிராம்,
 • வெண்ணெய்-50 கிராம்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்து கழுவி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் சம அளவு நீரை சேர்த்து பழத் துண்டுகள் மிருதுவாகும்வரை வேகவைத்து சல்லடையில் போட்டு தோல் மற்றும் கொட்டைகளை நீக்க வேண்டும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கெட்டியாகும்வரை அடுப்பில் வைத்து சூடாக்கி, தேவைக்கேற்ப சிவப்பு நிறம் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி சீராக பரப்பி சிறு துண்டுகளாக வெட்டி வெண்ணெய் காகிதத்தில் சுற்றி பாட்டிலில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு நல்ல உணவாகும்.

கொய்யாப்பழ தயார்நிலை பருகும் பானம்

தேவைப்படும் பொருட்கள்:

 • பழச்சாறு-1லிட்டர்,
 • சர்க்கரை-1.25 கிலோ,
 • சிட்ரிக் அமிலம்-28 கிராம்,
 • தண்ணீர்-7.7 லிட்டர்.

செய்முறை: நன்கு பழுத்த கொய்யா பழங்களை தேர்ந்தெடுத்து நான்கு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து இரும்பு வடிகட்டியில் வடித்து பழச்சாறை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். தண்ணீருடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, குளிரச் செய்து மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். பழச்சாறை சிறிது சிறிதாக சர்க்கரைப்பாகுடன் சேர்த்து முழுவதும் கரையும்வரை கலக்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் ஏற்றி 80 டிகிரி செ. வெப்பநிலைவரும்வரை சூடாக்கிய பின் குளிரச்செய்து நன்கு சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் அடைத்து பாதுகாத்து வைத்துப் பருகலாம்.

(தினமலர் தகவல்:

முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் க.மீனாட்சிசுந்தரம்,
வேளாண் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், குன்றக்குடி-630 206)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

 

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

தென்னை பிரச்சினைகளும் தீர்வுகளும்

ஒல்லிக்காய்கள்:

தென்னையில் 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன. மானாவாரி தோப்புகளிலும் சரியாக பராமரிக்கப்படாத தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் அதிகமாக தோன்றுகின்றன.

காரணங்கள்:

 • பாரம்பரிய குணம்,
 • ஊட்டச்சத்து பற்றாக்குறை,
 • குறைவான மகரந்த சேர்க்கை.

நிவர்த்தி முறை:

 • தரமான கன்றுகளை நடவு செய்தல்;
 • பரிந்துரை செய்யப்பட்ட உர அளவிற்கு மேலாக மரத்திற்கு கூடுதலாக ஒரு கிலோ பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் உரங்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுதல்;
 • தேனீக்களை வளர்த்தல்;
 • 200 மில்லி தென்னை டானிக் ஆண்டுக்கு இரு முறை கொடுத்தல்

நுனி சிறுத்தல்:

மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மரத்தில் நுனிப்பகுதி பென்சில் முனை போன்று காணப்படும். காய்களின் உற்பத்தி குறைந்து சிறுத்துக் காணப்படும். இலைகளின் இணுக்களில் பச்சையம் குறைந்து காணப்படும். மட்டைகளின் நிறம் மற்றும் அகலம் குறைந்து சிறுத்துக் காணப்படும். பாளைகளின் உற்பத்தி குறைந்தும் சிறுத்தும் தோன்றும். இறுதியில் மரம் பட்டுவிடும்.

காரணங்கள்:

 • சரியாக பராமரிக்கப்படாத தோப்புகள்,
 • தகுந்த சூழ்நிலை அமையாதல்,
 • வயதான மரங்கள்.

தீர்வுகள்:

 • மரங்களை வெட்டி அகற்றிவிட்டு தரமான புதிய கன்றுகளை நடவு செய்தல்,
 • கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது,
 • பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை இடுவது,
 • அரை கிலோ நுண்ணூட்டக் கலவை அல்லது 200 மில்லி தென்னை டானிக் இருமுறை இடவேண்டும்.

குரும்பை உதிர்தல்:

தென்னையில் குரும்பை உதிர்தல் ஒரு முக்கியமான பயிர் வினையியல் இடர்பாடாகும். பாளை வெடிக்கத் துவங்கியது முதல் 3-4 மாதங்கள் வரை குரும்பைகள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும்.

காரணங்கள்:

 • பாரம்பரிய குணம்,
 • மண்ணின் அதிக உவர் மற்றும் களர் தன்மை,
 • வறட்சி,
 • நீர் தேங்குதல்,
 • மண்ணில் சத்துப் பற்றாக்குறை,
 • குறைந்த மகரந்தச் சேர்க்கை,
 • குறைவான பயிர் வளர்ச்சி ஊக்கிகள்,
 • பூச்சி மற்றும் நோய்கள்.

நிவர்த்தி முறைகள்:

 • தோப்புகளில் ஒன்று அல்லது இரண்டு மரங்களில் பாரம்பரிய குணத்தால் குரும்பை முழுவதும் கொட்டிவிடும்.
 • காய்கள் பிடிக்காது.
 • இவ்வகை மரங்களை அகற்றிவிட்டு தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
 • மண்ணின் கார அமிலத்தன்மை (பிஎச்) குறைவாகும் அல்லது அதிமாகும் போது குரும்பைகள் உதிரும். எனவே மண் ஆய்வு செய்து அமிலத்தன்மை கொண்ட மண்களுக்கு சுண்ணாம்பும் காரத்தன்மைக்கு ஜிப்சம் இட்டும் சரிசெய்யலாம்.
 • தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும். பொதுவாக 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.
 • நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினால் குரும்பைகள் உதிரும்.
 • தென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்ட கலவை மரம் ஒன்றிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரை கிலோ இடலாம். அல்லது தென்னை டானிக் 200 மில்லியை வேர் மூலம் செலுத்தலாம்.

இலை விரியாமை:

தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமல் காணப்படும். இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்றுபின்னிக்கொண்டு இலைகள் வெளிவர இயலாத நிலையில் இருக்கும். சில சமயங்களில் குரும்பைகளும் உதிர்ந்துவிழும்.

காரணங்கள்:

 • போரான் சத்து பற்றாக்குறை.

நிவர்த்தி முறைகள்:

 • மரம் ஒன்றிற்கு 50 கிராம் போராக்ஸ் உரத்தை அரை கிலோ மணலுடன் கலந்து இரண்டு முறை தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் இட்டு மண் அணைக்க வேண்டும்.

தினமலர் தகவல்

கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் (பயிர் வினையியல்) மற்றும் கு.சிவசுப்பிரமணியம்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

வேளாண் பொருட்கள்

மரம் வளர்ப்பு அட்டவணை

மரம் மண் கன்று இடைவெளி கன்றுகள்/ஏக்கர் அறுவடை பயன்பாடு
மலைவேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள், மணல் கலந்த வண்டல் மண் ஏற்றது 15 அடி 200 7 ஆண்டுகள். ஏக்கருக்கு 7 லட்சம் 3ம் ஆண்டில் தீக்குச்சி, 4ம் ஆண்டில் பிளைவுட், 7ம் ஆண்டுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கலாம்.
குமிழ் வடிகால் வசதி கொண்ட ஆழமான மண் கண்டம் உள்ள அனைத்து வகையான மண்ணிலும் வளரும் 15 அடி 200 8 ஆண்டுகள். ஏக்கருக்கு 14 லட்சம் கதவு, நிலை, ஜன்னல், மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படும்.
சந்தனம் உவர்நிலம் அல்லாத மண் கண்டம் உள்ள நிலங்கள் வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தனத்திற்கும் ஏற்றவை. 16 அடி 200 25 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 கோடி வாசனைப் பொருட்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள் செய்ய உகந்தது.
மூங்கில் செம்மண் இருமண்பாடு நிலங்கள் ஏற்றவை. மற்ற நிலங்களில் குழிக்குள் செம்மண் இட்டு நடலாம். 15 அடி 200 5 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 லட்சம் கட்டட வேலை, காகித ஆலைப் பயன்பாட்டுக்கு தேவை
சவுக்கு மணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை 4 அடி 4000 3 ஆண்டுகள். ஏக்கருக்கு 80 ஆயிரம் கட்டிட வேலை, எரிபொருள், காகிதக்கூழ் ஆகியவை
தேக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்கள் ஏற்றவை 6 அடி 1000 25 ஆண்டுகள். (7 மற்றும் 12ம் ஆண்டுகளில் மரங்களை கலைத்துவிட வேண்டும்) ஏக்கருக்கு 25 லட்சம் மரப்பொருட்களைத் தயாரிக்கலாம்

மூலம் – தினமலர் செய்தி

TNAU: நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

தமிழகத்தில் நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக நடத்திய பூச்சி, நோய் ஆய்வின்படி டிசம்பர் மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் வெளியிடப்படுகிறது.

நெல் :

நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பரவலாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் மற்றும் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். அந்துப் பூச்சி அதிகமாக காணப்பட்டால் – டிரைகோகிராம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் வயலில் விடவும்.

இலை சுருட்டு

இலை சுருட்டு

பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரசாயன பூச்சிக் கொல்லி குளோர்பைரிபாஸ் 2.5 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அ) பிரப்பனோபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்றளவில் கலந்து தெளிக்கவும். நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் திருவாரூர் மாவட்டத்தில் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் தட்பவெட்ப நிலை சாதகமாக இருந்ததாலும் நெற்பயிரினில் நெல்குலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில் டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாட்கள் இடை வெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சும் பூச்சி

சாறு உறிஞ்சும் பூச்சி

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காய் புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

சிவகங்கை, தஞ்சை, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுபடுத்த டிரைக்கோகிராம்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தவும்.

நிலக்கடலை:

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலைகளைத் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் விட்டு கட்டுப்படுத்தவும்.

மேலும், விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422- 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாகை மரம் வளர்ப்பீர்

வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.

மானாவாரிக்கு ஏற்றது !

வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

அனைத்து மண்ணிலும் வளரும் !

வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.

ஒன்பது அடி இடைவெளி !

நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து  ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.

நடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

ஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் !

சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.

இதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.

நடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேம்பை விட வேகமா வளருது !

வாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்சு, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.

வாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”

இனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்!

தொடர்புக்கு சுபாஷ்,
செல்போன்: 98427-52825.

வாகையில் இரண்டு வகை !

அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகையின்  தாயகம்… தெற்காசியா. வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு. இதில் தூங்குமூஞ்சி வாகை, அவ்வளவாக வணிகப் பயன்பாட்டுக்கு உதவாது. நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, வணிகரீதியாகப் பயன்பெற வாகையையும்… சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையையும் நடவு செய்யலாம்.

பிரசுரம் காப்புரிமை

இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

பசுமை விகடன்