துளசி சாகுபடி

துளசி நல்ல துளசி, தூளாய், புனித துளசி, அரி, துளவு குல்லை, வனம் விருத்தம், துமாய், மலாலங்கல் போன்ற பெயர்களிலும் தமிழ் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள துளசி லேபியேட்டே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆசிமம் சேங்க்டம் என்ற தாவர பெயரால் குறிப்பிடப்படும் நறுமணப் பெயராகும். இலைகள் வெப்பமுண்டாக்கி, கோழையகற்றி, வியர்வை பெருக்கி பண்புகளையும் விதைகள் உள்ளழலாற்றி பண்பையும் கொண்டுள்ளன.

துளசி நறுமணத் தொழிற்சாலைகளிலும் மருத்துவ துறையிலும் அதிகமாக பயன்படுவதோடு வாசனை எண்ணெயையும் கொடுக்கின்றன. துளசி சார்ந்த ஆசிமம் பேரினத்தில் 160 சிற்றினங்கள் காணப்பட்டாலும் முக்கியமாக 10 சிற்றினங்கள்தான் சாகுபடிக்கு உதவுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம் வரையிலும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்றன.

துளசி வகைகளை

  • பேசிலிக்கம் இனம்,
  • சேங்டம் இனம்

என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இலைகளுக்காக வளர்க்கப்படும்.

சேங்டம் இனம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்பவைகளாகவோ அல்லது பல்லாண்டுவாழ் குத்துச் செடிகளாகவோ வளருபவை. இலைகளில் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மை இல்லாமலும் சிறிய மலர்கள் உடனும் காணப்படும் பேசிலிக்கம் வகையில் செடிகளெல்லாம் பல்லாண்டு வாழ் பூண்டுகளாகவும் மிகச்சிறியவைகளாகவும் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மையுடைய இலைகளுடனும் காணப்படும்.

ரகங்கள்:

பெரும்பாலும் உள்ளூர் ரகங்களே சாகுபடி செய்யப் படுகின்றன. ஜம்முவிலுள்ள பிராந்திய ஆய்வுக்கூடம் ஆர்.ஆர்.எல்.01 என்ற மேம்படுத்தப்பட்ட ரகத்தை வெளியிட்டுள்ளது. இது எக்டருக்கு 40 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெய் மகசூலும் கொடுக்கவல்லது.

இனப்பெருக்கம்:

விதைகள் மூலமாக இனவிருத்தி செய்யப் படுகிறது. விதைகள் மிகச்சிறியவை களாக, தூள் போன்று இருக்கும். ஒரு எக்டருக்கு தேவையான நாற்று உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதை போதுமானது.

நாற்றங்கால் தயாரித்தல்:

விதைகள் மேட்டுப்பாத்திகளில் மார்ச் இறுதியில் விதைக்கப்படுகின்றன. 10 நாட்களில் முளைத்து வெளிவந்துவிடும். 6 முதல் 7 வாரங்களில் நாற்றுக்களை பிடுங்கி நடவு வயலில் நடலாம். விதைகளை முளைப்புத்திறன் கெடாமல் 5 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம். துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது.
துளசி ஒரு வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப்பயிர். அதிக மழைப்பொழிவும் ஈரப்பதமும் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும். வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும் திறன் உடையது. எனினும் அவற்றைப் பயிரிடும்போது எண்ணெயின் அளவு குறைந்துவிடுகிறது. நடவுக்கு பிப்ரவரி மத்திய பகுதி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் மிகவும் உகந்தவை. விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50 முதல் 60 செ.மீ. இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும். நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்யும்போது எக்டருக்கு 150 முதல் 200 கிராம் விதை தேவைப்படும். நாற்றுக்களை நடவு வயலில் 60 x 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்முன் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். பின் 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

உரமிடுதல்:

எக்டருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவுக்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்கலாம். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10 முதல் 15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும். மேலும் சாம்பல்சத்தை எக்டருக்கு 75 கிலோ அளவில் இடவேண்டும். நுண்ணூட்டச்சத்துக்களான தாமிரத்தை 50 பி.பி.எம். என்ற அளவில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது. செடிகளின் வளர்ச்சிப்பருவத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். பயிர் பாதுகாப்புக்கு மாலத்தியான் 2 மிலி/ லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

அறுவடை:

விதைத்தபின் செடிகளை 90-100 நாட்கள் கழித்து முதன் முறையாக தழைக்காக அறுவடை செய்யலாம். நாற்று நட்ட பயிர்களை 75 முதல் 90 நாட்களில் அறுவடை செய்யலாம். செடிகளை முதல் வருடத்தில் தரை மட்டத்திலிருந்து 25 செ.மீ. உயரத்திலும், 2வது வருடம் 20-25 செ.மீ. உயரத்திலும், 3வது வருடம் 35-45 செ.மீ. உயரத்திலும் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக முதல் அறுவடைக்குப்பின் 50-60 நாட்கள் இடைவெளியில் மற்ற அறுவடைகளைச் செய்து தழைகளைச் சேகரிக்கலாம். ஒரு எக்டரில் 25-30 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெய் மகசூலும் பெறலாம்.

(தினமலர் தகவல்: சி.ரிச்சர்ட் கென்னடி, ஹேமலதா, தோட்டக்கலை மலரியல் ஆராய்ச்சி நிலையம், தோவாளை)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம்

ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுடன் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக அதிக லாபம் தரும் மருத்துவப் பயிரான வசம்புவை பயிரிடலாம்.

அஜீரணம், வயிற்றுப்போக்கு, தலைவலி, மூல வியாதி, இதயநோய், கண், காது நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது வசம்பு. சிறு குழந்தைகள் உணவு செரிக்காமல் வயிற்றுவலிக்காக அழுதால் கிராமப்புறங்களில் இன்றும் வசம்பு விழுதை பாலில் கலந்து கொடுப்பார்கள். சிறிது நேரத்தில் வயிற்றுவலி நின்று குழந்தைக்கு பசிக்கத் தொடங்கிவிடும்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஏற்றுமதி பயிரான வசம்புவை காவிரி டெல்டா விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக பயிரிடலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: காவிரி டெல்டா பகுதியான நாகை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசம்புவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வசம்பு தற்போது அதிகமாக பயிரிடப்படுகிறது. வசம்பு 10 மாத பயிராகும்.

அதன் வேர் பகுதியில் விளைந்த வசம்பை நன்றாக காய வைத்து பின்புதான் விற்பனை செய்ய முடியும். வசம்பை எந்த நோயும் தாக்குவதில்லை. இதனால் பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாகுபடி செலவும் நெற்பயிருக்கு ஆவதைவிட ஏக்கர் ஒன்றுக்கு 2 முதல் 3 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு டன் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனையாகும்.

மருத்துவப் பயிரான வசம்பு ஏற்றுமதியாகும் பொருள்களில் ஒன்றாகத் திகழ்வதால் அதற்கு வேளாண் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பு வசம்பிலிருந்து பக்கவாட்டில் வெடித்து வரும் சிம்புகளை நாற்றாக விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் 4 ஏக்கருக்கு உரிய நாற்றும் கிடைக்கிறது. வசம்பு பயிரிடும் செலவில் 25 சதவீதத்தை மத்திய அரசு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியம் மானியமாக வழங்குகிறது.

தமிழக அரசு வேளாண் துறையினர் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக வசம்பு பயிரிட விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கே.வி.இளங்கீரன்.

தினமணி தகவல் : ஜி.சுந்தரராஜன்