குண்டுமல்லியில் பூச்சித் தாக்குதலா? கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்த குண்டுமல்லி தற்போது வடக்கு மாவட்டங்களிலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது.

இந்நிலையில் தற்போது குண்டுமல்லி செடிகளில் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. குறிப்பாக மொட்டுப் புழு, மலர் ஈ, இலைப்பிணைக்கும் புழு, சிலந்திப்பேன், இருபுள்ளி சிலந்திப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் உள்ளது.

மொட்டுப் புழு:

இது மொட்டைத் தாக்கக்கூடியது. இவை அல்லி இதழ்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும். தாக்கப்பட்ட மொட்டின் மேல் புழுவின் கழிவுகள் காணப்படும். மேலும் பூவின் நிறம் கத்தரிப்பூ போன்ற ஊதா நிறமாக மாறி நிறமிழந்து காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த பூக்காத பருவத்தில் செடி வளையத்தைச் சுற்றி இருக்கும் மண்ணை கிளறிவிட்டு கார்பரில் 10 சதவீத மருந்தை மண்ணில் தூவ வேண்டும். இதனால் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுவை கட்டுபடுத்தலாம்.

இரவில் வரும் தாய் அந்துப்பூச்சியை கவர்வதற்காக ஒரு ஹெக்டேருக்கு 15 விளக்குப்பொறி வைக்க வேண்டும். ஆரம்ப நிலையில் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசலைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். புரோபிளோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். அல்லது ஸ்பைனோசட் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.35 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும்.

மலர் ஈ:

மலர் ஈ மொட்டுகளின் காம்புப் பகுதியில் முட்டைகளை இடும். புழுவானது காம்புப் பகுதியின் உள்ளே நுழைந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மலரின் வளர்ச்சி குன்றி காய்ந்து இளம் மொட்டுகளிலேயே உதிர்ந்து விடும்.

இதைக் கட்டுப்படுத்த நொவலூரான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி. என்ற அளவில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். ஆசிட்டாமிபீரிட் அல்லது இண்டக்சாகாளாப் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மி.லி. வீதம் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.

இலைபிணைக்கும் புழு:

இலைபிணைக்கும் புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் இளம் தளிர்களில் முட்டையிடும். வெளிவரும் இளம்புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். இவை மழைக்காலத்தில் இலையின் அடிப் பாகத்தையும், வெயில் காலத்தில் குருத்துப் பகுதியையும் சேதப்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டம்பாஸ் அல்லது குயினால்பாஸ் அல்லது ஹோஸ்டேர்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.

சிலந்திப்பேன்:

தாய் சிலந்திப்பேன் தாக்குதலால் இலை, குருத்து, பூமொட்டு போன்ற பாகங்களில் மெல்லிய கம்பளம் போன்ற வெண்ணிற (திட்டுக்கள்) ரோம வளர்ச்சித் தோன்றும். இதனால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, பூக்களின் எண்ணிக்கை குறையும்.
இதைக் கட்டுப்படுத்த வெர்டிமெக் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். புரப்பார்ஹைட் அல்லது பெனாசாஃகுயின் மருந்தை 2 மி.லி. வீதம் மாலையில் தெளிக்க வேண்டும்.

இருபுள்ளி சிலந்திப் பூச்சி:

தாய் சிலந்திப்பூச்சிகள் வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களாக இலைப் பகுதிகளில் காணப்படும். தாக்கப்பட்ட இலைகள் மற்றும் பூ மொட்டுகள் நிறமிழந்து காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில் நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். செடிகளுக்கு இடையே நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட இலைப் பகுதிகளை கவாத்து செய்து அப்புறப்படுத்த வேண்டும்.

அபாமெக்டின் அல்லது எஜ்úஸôடஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. என்ற அளவில் மாலையில் தெளிக்க வேண்டும். ஆஸôராக்டின் 50,000 பிபிஎம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.

பெனாசாக்குபின் அல்லது ஹோஸ்டாதியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.

தினமணி தகவல் : ஐ.ஜெபக்குமாரிஆனி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரக்கோணம்

குண்டுமல்லி – இயற்கைமுறை சாகுபடி

இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.

ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை 4 அடி இடைவெளியில் எடுத்து (ஏக்கருக்கு 2500 குழிகள்) 5 மாத வயதான நாற்றுக்களை குழிக்கு இரண்டாக பதியம் போட்டு மூடி உடனே நீர்பாய்ச்ச வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியிலிருந்துதான் தமிழகம் முழுவதும் மல்லி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி வந்து நடுகிறார்கள் என்கிறார் விவசாயி. நாற்றின் விலை ஒரு ரூபாய்.

நடவு முடிந்ததும் வாரம் ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். முதல் 5 மாதத்திற்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 2 வது மற்றும் 5வது களைக்குப்பின் செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒரு முறை 500 லிட்டர் கோ மூத்திரத்துடன் 50 கிலோ சாணத்தைக் கரைத்து பாசனத்தண்ணீரோடு கொடுக்கலாம். பூச்சி கட்டுப்பாட்டிற்கு மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 150ம் நாளில் பூ மொட்டுக்களை அறுவடை செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு: ப.ஓதிச்சாமி, 97894 15898.

தினமலர் செய்தி