மஞ்சளில் நோய் மேலாண்மை

இந்தியா மற்றும் இதர நாடுகளில் மஞ்சள் ஒரு முக்கியமான பயிராகும். தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது.

பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோய்களின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இலைப்புள்ளி நோய்:

கொலிட்ரோடிரைக்கம் கேப்சைசி என்ற பூஞ்சணத்தால் உருவாக்கப்படும் இலைப்புள்ளி நோய், தென் இந்தியப் பகுதிகளில் தீவிரமாகக் காணப்படுகிறது.

பயிர் நட்ட 40-45 நாள்களுக்குப் பிறகு தோன்றும் இந்த நோய், ஈரமான பருவ நிலையில் தீவிரமாகப் பரவுகிறது. கருமை நிறவளையங்களை உள்புறமாகக் கொண்ட பழுப்பு நிற புள்ளிகள், இலையின் மேல் பரப்பில் காணப்படும். இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த செடிகளில் வெவ்வேறு அளவுகளில் புள்ளிகள் காணப்படும். முதலில் சாம்பல் நிற உள்புறத்தைக் கொண்ட நீள வடிவப் புள்ளிகளாகத் தோன்றும்.

ஓர் இலையின் எண்ணற்ற புள்ளிகள் தோன்றி நோயின் தீவிரம் அதிமாகும் போது புள்ளிகள் விரிந்து இலையின் முழுப் பரப்பையும் கரும்புள்ளிகளாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

தீவிரமாகத் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடுகின்றன. தாக்கப்பட்ட கிழங்குகளின் செதில்களில் கருமை நிற ஸ்ட்ரோமா காணப்படுகிறது. மழைக் காலங்களில் இந்த நோய் தீவிரமாகப் பரவுகிறது. இந்த நோய் கிழங்குகளின் மகசூலில் 60 சதம் வரை இழப்பை ஏற்படுத்துகிறது.

செந்நிற இலைக் கருகல் நோய்:

செந்நிற இலைக் கருகள் நோயின் தாக்கம் தற்சமயம் மஞ்சள் சாகுபடி செய்துள்ள இடங்களில் பெருமளவு காணப்படுகிறது. இந்த நோய் டாப்பரினா மேக்கிலன்ஸ் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் காணப்படும்.

இலை ஓரங்களில் பழுப்பு நிறத்தில் காயத் தொடங்கும். பின்னர் இலையின் மைய நரம்பு நோக்கி பரவும், தீவிரமாகத் தாக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி, சிறுத்துக் காணப்படும். இதனால், மஞ்சளின் தரம் பெருமளவு பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோய்களைந்ப்க் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எரிக்கவும், சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை 0.5 சதம் கரைசலை நடவுக்கு பின் 45 நாள்கள் கழித்து 30 நாள்கள் இடைவெளியில் மூன்று (அ) நான்கு முறை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும்.

ரசாயன பூஞ்சாண கொல்லிகளான கார்பண்டாசித்துடன் மேங்கோசெப் 2 கிராம் (அ) கேப்டானுடன் ஹெக்ஸகொனசோல் 2 கிராம் (அ) பென்கொனசோல் 1.5 மில்லி (அ) குளோரோதலோனில் 2 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒட்டும் திரவம் சேர்த்து இலைகளின் மேல் தெளித்து இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

கிழங்கு அழுகல் நோய்:

கிழங்கு அழுகல் நோய் பித்தியம் அபானிடெர்மேட்டம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் இலை, தண்டு, கரணைகளில் அதிகளவு காணப்படும். முதலில் இந்த நோய் தாக்கிய இலை ஒரங்கள் காய்ந்து பின்பு நடு நரம்பு காய்ந்துவிடும். செடி மேலிருந்து கீழாக காயத் தொடங்கும். தரையை ஓட்டிய தண்டுப் பகுதி வலுவிழந்து காணப்படும். மஞ்சள் கிழங்கு அழுகி உருக்குலைந்து பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால், அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் துகள் கலவையை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம்.

சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவையை 0.5 சதம் கரைசலை 30 நாள்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை செடியின் தண்டுப் பகுதி மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நனையும் படி ஊற்றுவதால் கிழங்கு அழுகல் நோய் பெருமளவு குறையும். இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவதால் மஞ்சளில் நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

மேலும், ரசாயன முறையில், மெட்டலாக்சிலுடன் மேங்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 1.5 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை தூர்ப் பகுதி நனையும்படி ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகம் பெறலாம்.

தினமணி செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையப் பயிர் நோயியல் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா

வேளாண் அரங்கம் மார்க்கெட்
வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

மஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி?

நூற்புழுக்களின் தாக்குதல்

பொதுவாக மஞ்சள் வேர் முடிச்சுகளில் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்புழுக்கள் செம்மண் கலந்த மணற்பாங்கான நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இப்புழுக்கள் மஞ்சளின் வேர்களைப் பாதிக்கின்றன. எனவே, வேர்கள் மூலம் ஊட்டச்சத்து, தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது.

விதைக்கப்பட்ட 3 மாதங்களில் மஞ்சள் பயிரில் தாக்குதல் உண்டானால் விரலியோட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, 70 முதல் 80% வரை இழப்பைச் சந்திக்க வேண்டிவரும். நூற்புழு தாக்கியச் செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமடைந்து காணப்படும்.

தாக்கப்பட்ட மஞ்சளின் வேர்களில் ஆங்காங்கே வீக்கங்கள், மிளகு போன்ற வேர் முடிச்சுகள் காணப்படும். புகையிலை, மிளகாய், கத்தரி, தக்காளி, பெரிய வெங்காயம், வாழை போன்ற பயிர்களை பயிர் சுழற்சியிலோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்க இயலும்.

மேலாண்மை

மஞ்சள் நடுவதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நூற்புழுக்களின் பெருக்கம் மற்றும் தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். மீண்டும் யூரியா இடும்போது 5 முதல் 10 கிலோ வரை வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

தொழு உரம், கம்போஸ்ட் உரம் இடுவதும் இலுப்பைப் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுவதும் பலனளிக்கும். பாதிக்கப்பட்ட பயிரை அடையாளங்கண்டு, ஏக்கருக்கு 13 கிலோ கார்போபியூரான் குருணைகளை பயிரைச் சுற்றி 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் இடவைப்பு முறையில் விதைத்த 3-வது மற்றும் 5-வது மாதங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் கிழங்கு அழுகல் நோய்

இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமடைந்து சுருண்டு காணப்படும். தாக்கப்பட்ட மஞ்சளின் வேர் மற்றும் கிழங்குகளில் அழுகல் காணப்படும்.

வேர்களில் நூற்புழுக்கள் உண்டாக்கிய துளைகள் மூலம் பூஞ்சாணம் உள்ளே செல்வதால் நூற்புழு தாக்கியச் செடிகளில் கிழங்கு அழுகல் நோய் தாக்குதலின் வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும்.

மேலாண்மை

மெட்டலாக்சில் 2 கிராமை ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து, அதில் விதைக் கிழங்கை 30 நிமிடம் ஊறவைத்து நட வேண்டும். நன்கு வளர்ந்த செடிக்கு மெட்டலாக்சில் (அ) மேங்கோசெப் 2 கிராம் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கி (அ) காப்பர் ஆக்சைடு 1.5 கிராம் இவற்றை தூர் பகுதியில் நனையும்படி ஊற்றவும்.

இலை தீயல் நோய்

நட்ட வயலில் இலைகளின் இருபக்கமும் வட்ட வடிவ அல்லது ஒழுங்கற்ற வட்ட வடிவமான புழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின் கரும்பழுப்பு நிறமாகி இலைப் புள்ளிகளின் அளவு பெரிதாகும். இளம் இலைகளை அதிக அளவு பாதிப்பதால், அவை முதிர்ச்சி அடையாமலே காய்ந்து விடும். அதிகளவில் பாதிக்கப்பட்ட வயல் பார்ப்பதற்கு தீய்ந்து போன தோற்றத்தைத் தரும். இந் நோயின் பாதிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும்.

இலைப்புள்ளி நோய்

இலையின் மேல் பகுதியில் பழுப்பு நிறப் புள்ளிகள் பல்வேறு வடிவத்துடன் தோன்றும். நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது, புள்ளிகள் வளர்ந்து நீள்வட்ட வடிவமாக இருக்கும். இலைப் புள்ளிகள் புழுப்பு நிற விளிம்புகளையும், சாம்பல் நிற நடுப் பகுதியையும் கொண்டிருக்கும். நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் இலைப் புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலைகள் காய்ந்து பின் கீழே உதிர்ந்துவிடும்.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்து விட வேண்டும். பின்னர் ஒரு ஹெக்டேருக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 1,250 கிராம் அல்லது மேன்கோசெப் 400 கிராம் என்னும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 2 அல்லது 3 முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தொடர்பு எண்: 92444-04789

தினமணி செய்தி – பேராசிரியர்கள் கி. பூர்ணிமா, கி. கல்பனா –  பையூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலையம் – கிருஷ்ணகிரி மாவட்டம்

மஞ்சள் சாகுபடியில் விழுப்புரம் விவசாயி அடைந்த பயன்

விழுப்புரத்தை அடுத்த, கோலியனூரில் சூசைநாதன் என்ற விவசாயி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்தவாறு மஞ்சள் பயிர் செய்து அறுவடைக்கு பின் மிகுந்த லாபத்தை எதிர்பார்க்கவுள்ளனர்.

தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

 • சாகுபடிக்குத் தேர்வு செய்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை 4 தடவை உழவு செய்து, 8 டிராக்டர் லோடுகள் தொழுஉரம் இட்டு, நாட்டுக் கலப்பை மூலம் கடைசி உழவு செய்து 37.5 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து இதில் 15 செ.மீ. இடைவெளியில் மஞ்சள் கிழங்குகளை ஜூன் மாதம் நடவு செய்தேன்.
 • 1200 கிலோ விதை மஞ்சள் கிழங்குகள் பயன்படுத்தப்பட்டன.

நீர் நிர்வாகம்:

 • பார்களுக்கு இடையே நீர்ப்பாசனம் செய்து மஞ்சள் விதைக் கிழங்கை  பார்களின் பக்கவாட்டில் நடவு செய்யப்பட்டது.
 • பிறகு ஐந்தாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
 • பிறகு வாரம் ஒருமுறை மண்ணின் ஈரத்துக்கு ஏற்றார்போல் நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.

மேலுரம்:

 • நடவு செய்த இரண்டாம் மாதம் யூரியா 2 மூட்டை, 17:17:17 காம்ப்ளெக்ஸ் 1 மூட்டை, டிஏபி 1 மூட்டை வீதம் களையெடுத்து உரம் இட்டு, மண் அணைத்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
 • நடவு செய்த மூன்றாம் மாதம் காம்ப்ளெக்ஸ் 4 மூட்டை, பொட்டாஷ் 2 மூட்டை, யூரியா 2 மூட்டை வீதம் செடிகளுக்கு அருகில் இட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
 • நான்காம் மாதம் காம்ப்ளெக்ஸ் 1 மூட்டை, பொட்டாஷ் 6 மூட்டை, டிஏபி 1 மூட்டை வீதம் இட்டு நீர்ப்பாசனம் செய்தேன்.
 • நடவு செய்த 6-ம் மாதத்தில் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, பொட்டாஷ் 4 மூட்டை, அம்மோனியம் சல்பேட் 1 மூட்டை வீதம் இட்டு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கப்பட்டது.

மேலும் கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலைத் துறையினர் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வழங்கிய 112 கிலோ மண்புழு உரம், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 12.50 கிலோ நுண்ணூட்ட உரங்கள், 8 கிலோ 19:19:19 மற்றும் 4 கிலோ 13:00:45 நீரில் கரையும் உரங்கள், செடிக்கு செடி இட்டு மண் அணைத்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.பின்னர் 6 கிலோ சூடோமோனாஸ் உயிர் உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து செடிக்கு செடி இட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.

பயிர் பாதுகாப்பு:

 • மஞ்சள் இலைகளில் தோன்றிய இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த டைமெத்தியேட் மருந்து 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரிலும்,
 • இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பன்சாசிம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரிலும் கலந்து தெளித்து பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டது

என்றார் சூசைநாதன்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வீராசாமி கூறியது: தோட்டக்கலைத் துறையின் பரிந்துரையின் பேரில் முறையாக அந்த விவசாயி பயிர் பாதுகாப்பு செய்துள்ளார். மார்ச் மாதத்தில் அறுவடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் உள்ள நிலவரப்படி சராசரியாக செடிக்கு 170 கிராம் வரை மஞ்சள் கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தமாக ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலிருந்து 15 மெட்ரிக்டன் பச்சை கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

உலர் மஞ்சள் 3000 கிலோ கிடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.இன்றைய சேலம் லீ சந்தை நிலவரப்படி குவிண்டால் ரூ. 17 ஆயிரத்துக்கு விற்பனை செய்தாலும் ரூ. 5.10 லட்சம் வரை மொத்த வருமானமாகவும், ரூ. 4.10 லட்சம் வரை நிகர லாபமாகவும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.

மஞ்சளில் அதிக மகசூல்: விழுப்புரத்தில் ஒரு சாதனை பெண் விவசாயி

விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக ரூ.11.80 லட்சம் ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.

தியாகதுருகம் ஒன்றியம், ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா.  தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் மஞ்சள் கிழங்கு பயிரிட்டார். 2009 ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உரிய இடைவெளியில் நடவு செய்து, அடியுரமாக தொழு உரம் 5,500 கிலோ, விரிடி 10 கிலோ, சூடோமோனஸ் 10 கிலோ இட்டு நடவு செய்துள்ளார்.

மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கிய சொட்டுநீர் பாசனக்கருவி அமைத்து நீர்வழி உரமளிக்கும் டாங்க் மூலம் வாரத்துக்கு இருமுறை நீரில் கரையும் உரத்தை இட்டு, 4 மூட்டை (100 கி) சல்பேட்டா, 2 மூட்டை (50 கி) பொட்டாஷ் ஆகியவை மேலுரமாக போட்டுள்ளார். மேலும் சூடோமோனஸ் 1 லிட்டர் மற்றும் விரிடி 1 லிட்டர் திரவங்களை உரடாங்க் மூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கோகிலா கூறியது: உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு முறைகள் உள்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் தோட்டக்கலை உதவி இயக்குநரின் நேரடி வயல் ஆய்வின் மூலம் பெற்று சீரான நடவடிக்கை மேற்கொண்டேன். எனது மஞ்சள் பயிர் 2010  மார்ச் இறுதி வாரத்தில் அறுவடைக்கு வந்தது. அறுவடையின் போது எனக்கு விரல் மஞ்சள் 2 ஏக்கருக்கு 26 ஆயிரம் கிலோ மற்றும் உருளை மஞ்சள் 4 ஆயிரம் கிடைத்தது. விரல் மஞ்சளை ஒரு கிலோ ரூ.40 வீதமும், உருளை மஞ்சளை ஒரு கிலோ ரூ.60 வீதமும் விற்பனை செய்தேன். மொத்த வருமானமாக ரூ.12.80 லட்சம் கிடைத்தது. இதற்காக நான் ரூ.1 லட்சம் செலவு செய்தேன். இதில் என்னுடைய சாகுபடி செலவு போக நிகர வருமானமாக ரூ.11.80 லட்சம் பெற்றுள்ளேன் என்றார்.

இது குறித்து தியாகதுருகம், தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் பியூலா ராஜா கூறியது: எங்களது அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாக பயன்படுத்தியதால் தான் யாரும் எதிர்பாராத அளவுக்கு கோகிலா, 2 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு ஏறத்தாழ ரூ.12 லட்சம் லாபம் பெற்றுள்ளார் என்றார்.

தினமணி தகவல்

கோபியில் செம்மை நெல் சாகுபடி அதிகரிப்பு

கோபி, ஜூன் 19 2010: கோபி தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் செம்மை நெல் சாகுபடி அதிகரித்து வருகிறது.

÷பவானிசாகர் அணை மற்றும் கொடிவேரி அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதியில் முதல்போக சாகுபடிக்காக கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் முதல் போக சாகுபடியாக நெல் மற்றும் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

÷செம்மை நெல் சாகுபடி முறையில் 3,750 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,700 ஏக்கரில் செம்மை நெல் நாற்று முறையில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.தடப்பள்ளி பாசனப் பகுதிகளான செங்கலக்கரை, தொட்டிபாளையம், சோழமாதேவிக்கரை பகுதியில் கோனா வீடர் கருவி மூலம் களை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

÷இந்த சாகுபடி முறையை பின்பற்றினால் குறைந்த விதை, நெல் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்களே போதும். அதிக மகசூலும் கிடைக்கும். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உளள் கோபி வட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் செம்மை நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட்டுள்ளனர் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Coimbatore&artid=259666&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=