BT பருத்தியில் வேரழுகல் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் பீ.டி பருத்தியானது அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பருத்தி செடிகளில் வேர் அழுகல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பல பகுதிகளில் பருத்தி செடிகள் அதிக சப்பைகளுடனும், சில பகுதிகளில் 20 முதல் 30 நாள்கள் வயதுடைய செடிகளாகவும் காணப்படுவதால், இவற்றில் நோய் தாக்குதல் ஏற்படும்போது பருத்தி மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். அதிக நாள்களுக்கு பருத்தி வயலில் மழை நீர் தேங்கும்போது, செடிகளில் உடற்செயலியல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் சிகப்பு இலை அதிகளவில் தாக்கி, செடிகளின் இலைகள் சிவப்பாக மாறி கீழே விழும் தன்மை ஏற்படும்.

எனவே, வயலில் தேங்கியுள்ள மழை நீரை பத்து வரிசைகளுக்கு இடையே வாய்க்கால் பறித்து வெளியேற்ற வேண்டும். பருத்தி செடிகளானது வாடிய நிலையில் காணப்படும் போது, அதை பிடுங்கி பார்த்து வேர் அழுகல் நோய் இருக்கும் பட்சத்தில் அதாவது, வேர்கள் அழுகி வேரின் மேல் பகுதி முழுவதும் அழுகியும், தண்டு பகுதி மட்டும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது 1 கிராம் கார்பண்டாசிம் என்ற ரசாயன பூஞ்சாணக் கொல்லி மருந்தை கரைத்து, வேர் அழுகல் நோய் தாக்கியுள்ள செடிகளுக்கு அருகில் உள்ள மற்ற அனைத்து பருத்தி செடிகளுக்கும், வேர் பகுதியில் ஊற்றி கட்டுப்படுத்தலாம் அல்லது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 கிலோ டிரைகோடெர்மா விரிடியை 100 கிலோ மட்கிய மாட்டு எருவுடன் கலந்து, செடிக்கு செடி இட்டால் வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்க முடியும்.

மழையின் காரணத்தால் இலைப்புள்ளி மற்றும் இலைக்கருகல் நோயின் அறிகுறிகள் பருத்தி செடியின் இலைகளில் தென்படும் சமயத்தில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் காப்பர் ஆக்ஸி குளோரைடு மற்றும் 0.1 கிராம் ஸரெட்டோமைசின் சல்பேட் ஆகியவற்றை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது, 9944244582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்தி

ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

Advertisements

பருத்தியில் நுனி கிள்ளுவது அவசியம்

வேலூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பருத்தியில் நுனி கிள்ளி விடுவதன் மூலம் பக்க கிளைகள் உருவாகி அதிக திறட்சியான காய்கள் உருவாகும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பருத்தி சாகுபடி செய்து 75 முதல் 80-வது நாளில் 15-வது கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும். இதனால் அதிக பக்கக் கிளைகள் உருவாகும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பூக்களும், திறட்சியான காய்களும் உருவாகும். மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டி.ஏ.பி. கலந்து தெளிக்க வேண்டும். இலை வழி உரமாக டி.ஏ.பி. அளிப்பதால் அதிக எண்ணிக்கையிலான காய்கள் உருவாக வாய்ப்புள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

வேளாண்பொருட்கள்

வேளாண் நிறுவனங்கள்

 

பருத்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

உழவியல் முறைகள்:

  • கோடையில் உழுதல் – பூச்சிகளின் முட்டை மற்றும் புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அழியும்.
  • அமில விதை நேர்த்தி செய்த விதைகளை பயன்படுத்துதல்.
  • பூஞ்சாண உயிர்கொல்லி டிரைக்கோடெர்மா விதைநேர்த்தி செய்தல் (1 கிலோ விதைக்கு 3 கிராம் வீதம்).
  • உயிர் உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்தல் (ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட்டுகள் (200கிராம் ஒரு பாக்கெட் எடை)).
  • வேப்பம் புண்ணாக்கு இடுதல் (100 கிலோ/ஏக்).
  • பொறிப்பயிர்கள் முறையே சூரியகாந்தி, சாமந்தி பயிரிடுதல்.
  • உயர் விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ரகங்களை பயிரிடுதல்.
  • ஊடுபயிராக உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரிடுதல்.
  • தரம் வாய்ந்த மற்றும் சான்று பெற்ற விதைகளை விதைத்தல்.
  • கிராமம் முழுவதும் ஒரே ரகமான விதைகளை விதைத்தல்.
  • தோட்டக்கால் சால் முறையில் பருத்தி விதையை விதைத்தல்.
  • வரப்பு பயிர்கள் மக்காச்சோளம், சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடுதல்.
  • பருத்தி மறுதாம்பு பயிர் விடுதலை தவிர்த்தல்.

கைவினை முறைகள்:

  • விளக்கு பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்கருக்கு).
  • இனக்கவர்ச்சிப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
  • கருநீலத்துணி விரித்தல் (2 சதுர அடி அளவில் 10 இடங்களில் / ஏக்).
  • முட்டை மற்றும் புழுக்கள் துணியின் அடியில் தங்குவதால் அதை சேகரித்து அழிக்கலாம்.
  • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
  • “டி’ வடிவ குச்சியை நடுதல் (6 எண்ணம்/ஏக்) இந்த குச்சியில் பறவைகள் அமர்ந்து புழுக்களை கண்காணித்து அதை உண்டுவிடும்.
  • பருத்தியை தாக்கும் பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை சேகரித்து அழித்தல். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட காய்கள், சப்பைகள், பூக்கள் மற்றும் இதர உதிர்ந்த பொருட்களை அகற்றி அழித்துவிடுதல்

உயிரியல் முறைகள்:

  • காய்ப்புழுவை கட்டுப்படுத்த 200மிலி என்.பி.வி. வைரஸ்/ஏக் தெளித்தல்.
  • தூரிசைடு (பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்) ஏக்கருக்கு 300 கிராம் தெளித்தல்.

நன்மை செய்யும் பூச்சிகள்:

  • டிரைக்கோகிரம்மா முட்டை அட்டையைப் பொருத்துதல் (ஏக்கருக்கு 4 சிசி சி40 துண்டு அட்டைகள்).
  • கிரைசோபா ஊன் உண்ணி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.
  • ஊன் உண்ணி ரெடுவிட் நாவாய்பூச்சி ஏக்கருக்கு 2000 வெளியிடுதல்.
  • முட்டை, புழு, ஒட்டுண்ணி சேலோனஸ் பிளாக்பர்னி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.

ரசாயன முறைகள்:

பருத்தி வயலில் பயிரைத் தாக்கும் பல பூச்சிகளின் பொருளாதார சேத நிலையைப் பின்பற்றி அதற்கேற்றவாறு பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.

வ.எண். பூச்சிகள் பொருளாதார சேதநிலை
1 இலைப்பேன் இலைக்கு 2 பூச்சிகள்
2 தத்துப்பூச்சி இலைக்கு 2 பூச்சிகள்
3 அசுவினி 15 முதல் 20% வரை தாக்கப்பட்ட செடிகள்
4 பயிர்ச்சிலந்தி 1 சதுர செ.மீ.க்கு 10 சிலந்தி பூச்சிகள்
5 காய்ப்புழு 10% தாக்கப்பட்ட காய்கள்
6 வெள்ளை ஈ ஒரு இலைக்கு 5 முதல் 10 வெள்ளை ஈ
7 புரோடினியா புழு 50 மீட்டர் நீளத்தில் 4 முட்டை குவியல்கள்
8 தண்டுக் கூன்வண்டு 10% தாக்கப்பட்ட செடிகள்

மேற்கண்ட அட்டவணையில் உள்ள பொருளாதார சேதநிலையை தாண்டிவிட்டால் கீழே உள்ள பாதுகாப்பான ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

  1. எண்டோசல்பான் 250மிலி மற்றும் பாசலோன் 100மிலி/ஏக். தெளித்தல்.
  2. வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அசாடிராக்டின் ஏக்கருக்கு 200மிலி தெளித்தல்.
  3. கார்போபியூரான் குருணை ஏக்கருக்கு 12 கிலோ இடுதல்.

பூச்சிக்கொல்லிகளை மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். பகல் நேரங்களில் தெளித்தால் சூரிய ஒளியில் பூச்சிக்கொல்லிகள் ஆவியாகிவிடுவதோடு மட்டுமல்லாமல் புழு மற்றும் பூச்சிகள் இலைக்கு அடியில் போய் மறைந்துகொள்ளும். மேலும் மாலை நேரங்களில் புழு மற்றும் பூச்சிகள் வெளியில் வரும். அப்போது தெளித்தால் உடனே அழிந்துவிடும்.

ஒரே பூச்சிக்கொல்லி திரும்பத்திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிக்கு கட்டுப்படவில்லை என்றால் மற்றொன்றை பயன்படுத்த வேண்டும்.

-முனைவர் ப.சுதாகர், உதவி பேராசிரியர், சிதம்பரம்-608 002. 99941 97666.

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 45,000 ஹெக்டரில் மக்காசோளமும், 26,000 ஹெக்டரில் பருத்தியும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், மாநில சராசரி விளைச்சலை விட குறைவான மகசூல் பெறுகின்றனர். எனவே, ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக பயிர் எண்ணிக்கை பராமரிப்பதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் எடுக்கமுடியும்.

பருத்தியில், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும், அடுத்த வரிசை 4 அடியும், அடுத்த வரிசை 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும். ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து, அதிக பயிர் எண்ணிக்கையை பராமரித்து கூடுதல் வருவாய் பெறலாம்.

மக்காசோள சாகுபடியில் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்கு செடி ஒன்றரை அடி விட்டு ஒரு குழியில் இரண்டு விதை நடவு செய்தால், அதிக பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.

இதன்மூலம், இரட்டிப்பு வருவாய் பெறலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த புதிய தொழில் நுட்பத்தை கடைத்து அதிக மகசூல் பெறலாம்.

தினமணி செய்தி – வேளாண் இணை இயக்குநர் பி. சங்கரலிங்கம், பெரம்பலூர்

பருத்தியில் தண்டு கூன்வண்டு கட்டுப்பாடு

கோடையில் தென்மாவட்டங்களில் பயிரிடப் பட்டுள்ள பருத்தி பயிர்களை தண்டுக்கூன்வண்டு என்ற பூச்சி அதிகம் தாக்கி சேதம் விளைவித்து வருகிறது.

கூன்வண்டின் அதகளம்:

3-5 மி.மீ. அளவில் கறுப்பு நிறத்தில் இருக்கும் இக்கூன்வண்டு பருத்திச்செடியின் இளம் பருவத்தில் தண்டுப்பகுதியில் முட்டையிடுகின்றன. தண்டுப்பாகத்தின் உட்பகுதியில் புழு தின்று வளர்வதால் தரைமட்டத்திற்கு மேல் உள்ள தண்டுபாகம் வீங்க ஆரம்பிக்கிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி காய்ந்துவிடுகின்றன. மேலும் வீங்கிய பகுதி வலுவிழந்து பலமான காற்று வீசும்போதும் மண் அணைப்பு செய்யும்போதும் ஒடிந்துவிடும். பருத்தி நட்டு 30-40 நாட்களுக்குள் தாக்கப்பட்டால் அந்த செடிகள் இறந்துவிடும். ஒரு செடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருக்கலாம். அப்போது செடியில் அடுத்தடுத்து வீக்கம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட செடிகளின் காய்பிடிப்பு பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். மேலும் பஞ்சு மற்றும் நூலின் தரம் குறைந்துவிடும். வயலில் 15-20 சத தாக்குதல் இருக்கும்போது பெரும் நஷ்டம் ஏற்படும்.

கூன்வண்டின் வாழ்க்கை சுழற்சி:

இக்கூன்வண்டுகள் ஒரு செடிக்கு 7 முதல் 8 முட்டைகள் வீதம் 120 முட்டைகள் வரை இடுகின்றன. பத்து நாட்களில் வெளிவரும் புழுக்கள் இரண்டுமாத காலம் வரை தண்டினுள் வளரும். இறுதியில் 10 நாட்களுக்கு கூட்டுப் புழுக்களாக இருந்துவிட்டு தாய் வண்டாக வெளிவருகின்றன. பருத்தியின் 6-7 மாத பருவ காலத்தில் 3 தலைமுறைகள் வரை உற்பத்தியாகிப் பெருகுகின்றன.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்:

  • கூன் வண்டிற்கு எதிர்ப்புதிறன் வாய்ந்த எம்சியு3 போன்ற ரகப் பருத்திகளை பயிரிடலாம்.
  • நெருக்கமான நடவும் செடிகளுக்கு சரியான மண் அணைப்பு பராமரிப்பு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
  • பழைய பருத்திக் கட்டைகளை வயலிலிருந்து அப்புறப் படுத்தி அழித்துவிட்டு புதிய நடவு செய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு தொழு உரம் 10 டன் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவில் இடவேண்டும்.
  • கார்போபியூரான் 3 சத குருணை 12 கிலோ/ஏக்கர் நட்ட 20 நாட்கள் கழித்து இட்டு, மண் அணைக்க வேண்டும்.
  • தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • வேப்பங் கொட்டைச்சாறு 5 சதத்தை நட்ட 20வது நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 5 முறை தண்டினைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • விதைத்த 3வது வாரத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் குளோர்பைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தூர்பகுதி மற்றும் தூர் பகுதியை சுற்றியுள்ள மண் பரப்பும் நன்குநனையுமாறு ஊற்ற வேண்டும்.

தினமலர் செய்தி – ஜெ.ஜெயராஜ், என்.முத்துகிருஷ்ணன், பெ.நிலவழகி, க.முரளிபாஸ்கரன்,
பூச்சியியல் துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.

பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த, 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு, ஒரு மரக்கட்டைக்கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும் (குஜராத்).

-வேளாண்மை பல்கலை, கோவை

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறை – TNAU

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நெல்:

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இலைச் சுருட்டுப் புழுவிற்கு விளக்குப் பொறியும் வேப்பங்கொட்டைச் சாறும்:

இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெல் குலை நோய்க்கான முன்னறிவிப்பு:

தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

நிலக்கடலை:

இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003. தொலைபேசி: 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003. தொலைபேசி: 0422-6611226.

TNAU: நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

தமிழகத்தில் நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக நடத்திய பூச்சி, நோய் ஆய்வின்படி டிசம்பர் மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் வெளியிடப்படுகிறது.

நெல் :

நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பரவலாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் மற்றும் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். அந்துப் பூச்சி அதிகமாக காணப்பட்டால் – டிரைகோகிராம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் வயலில் விடவும்.

இலை சுருட்டு

இலை சுருட்டு

பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரசாயன பூச்சிக் கொல்லி குளோர்பைரிபாஸ் 2.5 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அ) பிரப்பனோபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்றளவில் கலந்து தெளிக்கவும். நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் திருவாரூர் மாவட்டத்தில் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் தட்பவெட்ப நிலை சாதகமாக இருந்ததாலும் நெற்பயிரினில் நெல்குலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில் டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாட்கள் இடை வெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சும் பூச்சி

சாறு உறிஞ்சும் பூச்சி

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காய் புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

சிவகங்கை, தஞ்சை, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுபடுத்த டிரைக்கோகிராம்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தவும்.

நிலக்கடலை:

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலைகளைத் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் விட்டு கட்டுப்படுத்தவும்.

மேலும், விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422- 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.