இலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…

களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு உண்டு. அந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

agri2

நோய் பரவும் காரணிகள்

வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த நோய் எளிதில் நெல் பயிருக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் மண் மூலமாகவும், அதிகமான ஈரப்பதம் காரணமாகவும், மிதமான வெப்பம் இருக்கும் சூழல் மற்றும் பாசன நீர் மூலம் அடுத்த வயல்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

நோயின் அறிகுறிகள்

 • நோயின் தாக்குதல் முதலில் நீரின் மேற்பகுதியில் உள்ள இலை உறையின் ஓரங்களில் காணப்படும். இலைகளில் முட்டை வடிவத்தில் சாம்பல் பச்சை நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
 • பின்பு அவை வெண்ணிறப் புள்ளிகளாய் மாறும்.
 • மேலும் தாக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிற கடுகு போன்ற பூஞ்சாண விதைகளைக் காணலாம்.
 • இப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து படை படையாகத் தென்படும்.
 • இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும்போது இலை கரிந்து மடிந்து விடும்.

கட்டுபடுத்தும் முறைகள்

வயல்வெளிகள், சுற்றுப்புறங்களில் புல் மற்றும் களைச் செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சதுர நடவு (திருந்திய நெல் சாகுபடி) மேற்கொள்வதன் மூலம் இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தழைச்சத்து உரங்களை சமமாகப் பிரித்து இட வேண்டும். நோய் தாக்கிய வயலில் இருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும், ஊக்குவிக்கும் வகையில் நிலத்திற்கு அதிக அளவில் இயற்கை தழைச் சத்து உரங்களை இட வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்து சிகிச்சை

இந்த நோயை நன்கு கட்டுப்படுத்தக் கூடிய கார்பன்டாசிம் (50 டபுள்பி) என்ற பூசணக் கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் நடவு செய்த 45 முதல் 50 நாள்களுக்குப் பிறகு, அல்லது நோய் பாதிப்பு தென்பட்ட உடனும் மீண்டும் 15 முதல் நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் நீரில் கலந்து பயிரின் அடிப்பாகத்தில் உள்ள இலை உறைகள் மற்றும் தண்டுப்பகுதி நன்கு நனையும் வகையில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.

அல்லது ஏக்கருக்கு ஹெக்சோகோனசோல் 5 சதவிகிதம் இசி 500 மில்லி அல்லது புரோப்பிகோனசோல் 25 சதவிகிதம் இசி 200 மில்லி என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்க வேண்டும். அல்லது அசோசிஸ்டிரோபின் என்ற பூசணக் கொல்லி மருந்தை 200 மிலி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநர் சை.சுந்தரம், வேளாண் அலுவலர் செ.பரத்வாஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு

logo.png

நெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த என்ன வழி?

நெல் சாகுபடியில் நோய் கட்டுப்பாடு மிகவும் அவசியம். நெல் பயிரைக்

 • குலை நோய்,
 • இலைப்புள்ளி நோய்,
 • இலை உறை கருகல் நோய்,
 • கதிர் உறை அழுகல் நோய்,
 • நெல் மணி அழுகல் நோய்

போன்ற பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

குலை நோய்:

இந்த நோய் நாற்றங்காலில் தொடங்கி கதிர் விடும் பருவம் வரை எல்லா நிலைகளிலும் தாக்குகிறது. நோயின் அறிகுறிகளை இலை, கதிரின் கழுத்துப் பகுதி மற்றும் தானிய விதைகளின் மீது காணலாம். நோயின் தொடக்க நிலையில் சிறிய ஊதா கலந்த பச்சை நிறத்தில் புள்ளிகளாகத் தோன்றி, பின்னர் நீள் வடிவத்தில் சாம்பல் நிற மையப் பகுதியையும், பழுப்பு நிற ஓரத்தையும் கொண்ட பெரிய புள்ளிகளாக மாறும். கடுமையாகத் தாக்கப்பட்ட நாற்றங்கால், நெல் வயல் எரிந்து போனது போலத் தோற்றமளிக்கின்றன.மேலாண்மை:நோய் எளிதில் தாக்கும் ரகங்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். கார்பென்டசிம் அல்லது திரம் (2 கிராம் 1 கிலோ விதைக்கு) போன்ற பூசணக் கொல்லி கொண்டு விதையை நேர்த்தி செயவதன் மூலமும், கார்பென்டசிம் 200 கிராம் அல்லது டிரைசைக்லோஸ் 400 கிராம் அல்லது கார்பென்டசிம் 200 கிராம் (ஒரு ஹெக்டருக்கு) தெளிப்பதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்:

பயிரின் எல்லாப் பருவங்களிலும் இந்த நோய் தாக்கும். பழுப்பு நிற சிறு புள்ளிகளாக இலைகளில் தோன்றி, பின்னர் பெரிதாகி புள்ளிகள் இணைந்து பெரிய புள்ளிகளாகத் தோன்றும். இதனால், இலை கருகி விடும். இந்த நோய் தாக்குவதால், விதை முளைக்கும் திறன் குறைகிறது. இளம் நாற்று இறந்து விடும்.

மேலாண்மை:

வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருத்தல், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களைப் பயிரிடுதல், திரம் அல்லது கோப்டன் அல்லது கார்பென்டாசிம் (2 கிராம் 1 கிலோ விதைக்கு) கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் மேங்கோசெப் 80 கிராம் அல்லது கேப்டபால் 40 கிராமை 8 சென்ட் நாற்றங்காலுக்கும், நடவு வயலில் ஹெக்டருக்கு கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது மேங்கோசெப் 1 கிலோ அல்லது புரப்பிகொனசோல் 200 மி.லி. தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இலை உறை கருகல் நோய்:

இந்த நோய் பயிரை தூர் விடும் சமயத்திலிருந்து கதிர் விடும் சமயம் வரை தாக்குகிறது. முதலில் தண்ணீருக்கு அருகில் உள்ள இலைகளில் காணப்படும். பிறகு நீள் வட்ட வடிவ பச்சை கலந்த பழுப்பு நிறப் புள்ளிகளாக காணப்படும். பிறகு, இந்தப் புள்ளிகள் பெரிதாகி சாம்பல் நிற மையப் பகுதியையும் பழுப்பு நிற ஓரப் பகுதியையும் கொண்டு இருக்கும். பிறகு இந்தப் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேல் நோக்கிப் பரவி இலை உறை கருகல் நோயை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை:

அதிக நெருக்கமாகப் பயிரை நடவு செய்யாமல், போதிய இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நோய் தாக்கிய வயலிலிருந்து அறுவடைக்குப் பின்னால் கிடக்கும் பயிர் பாகங்களை நீக்கி விட வேண்டும். வயல் வெளிகளையும் வரப்புகளையும் களைகள் இன்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தழைச்சத்து உரத்தை பிரித்து இடுதல் அவசியம். யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுதல் வேண்டும். நோய் தாக்கிய வயலிலிருந்து அடுத்த வயல்களுக்குப் பாசன நீர் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஹெக்டருக்கு கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது புரப்பிகொனசோல் 200 மி.லி. மருந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கதிர் உறை அழுகல் நோய்:

இந்த நோய் கதிரை மூடியுள்ள இலை உறையைத் தாக்கும். இந்தப் பூசணம் நீள வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் பழுப்பு நிற புள்ளிகளாகத் தோன்றும். இவை பெரிதாகி சாம்பல் நிற மையத்தையும் பழுப்பு நிற ஓரப் பகுதியையும் கொண்டிருக்கும்.

மேலாண்மை:

பரிந்துரையின் படி விகிதத்தில் உரங்களை இடுதல், சரியான இடைவெளியில் பயிர்களை நடுதல் மற்றும் கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது குளோரோதிலோனில் (1 கிலோ ஒரு ஹெக்டருக்கு) என்ற அளவில் பூட்டைப் பருவத்தில் 15 நாள்கள் இடைவெளியில் விட்டு இரு முறை தெளிக்க வேண்டும்.

நெல்மணி அழுகல் நோய்:

இந்த நோய் நெல் மணிகளில் மட்டுமே காணப்படும். நோய் தாக்கிய நெல் கதிரில் உள்ள நெல் மணியும் பூஞ்சாணத் தாக்குதல் மஞ்சள் நிறமடைந்துவிடும். இதனால், நெல் மணியின் தரம் குறைந்து மணி பிடிப்புத் திறனும் பாதிக்கும்.

மேலாண்மை:

 • நோய் தாக்கதாத விதைகளைப் பயன்படுத்துதல்,
 • முன் கூட்டி நடவு செய்தல்,
 • வயல்கள் மற்றும் வரப்புகளைச் சுத்தமாக வைத்திருத்தல்,
 • அதிக தழைச் சத்து இடுவதைத் தவிர்த்தல்,
 • அறுவடை செய்யும் போது நோய் தாக்கிய நெல்மணிகளை அகற்றுதல்

ஆகியவற்றின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெல் பயிரில் அதிக லாபம் ஈட்டலாம்.தொடர்புக்கு: 04343-290600.

தினமணி செய்தி – கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய நோயியில் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா

வேளாண் அரங்கம் – மார்க்கெட்டில்

வீரிய ஒட்டு நெல் கோ.4 விதை உற்பத்தி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டு நெல் கோ.4 விதை உற்பத்தியில் விவசாயியின் சாதனை

நடவு:
2011-12ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம், மாதாம்பாளையம் விவசாயி வெங்கிடு வீரிய ஒட்டுநெல் விதை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளார். வீரிய ஒட்டு நெல்லின் “தாயாதி விதைகள்’ “கோ.எம்.எஸ்.23ஏ ஆறு கிலோவும் (பெண்), சி.பி.174 (ஆண்) 4 கிலோவும் வழங்கப்பட்டது.

முதல் நாள் 2 கிலோ சி.பி.174 ஆண் ரகத்தை நன்கு சமன் செய்யப்பட்ட நாற்றங் காலில் பரவலாக விதைத்தார்.

5 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் பகுதியாக 2 கிலோ சி.பி.174 ஆண் ரகத்தையும் 6 கிலோ பெண் ரகத்தையும் விதைத்தார்.

ஏனைய நெல் நாற்றங்காலைப் போலவே பராமரித்து நாற்றின் வயது 22-25 நாட்கள் ஆனதும் நடவு வயலில் 6 வரிசை பெண் நாற்றுக்கு, 2 வரிசை ஆண் நாற்றுக்கு என்ற விகிதத்தில் காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக நடவு செய்தார். முதல் விதைப்பு நாற்றுக்களை முதல் வரிசையிலும் இரண்டாம் விதைப்பு ஆண் நாற்றுக்களை இரண்டாம் வரிசையிலும் நடவுசெய்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ., நாற்றுக்கு நாற்று 30 செ.மீ. இடைவெளி விடப்பட்டது.

ஆண் வரிசைக்கும் பெண் வரிசைக்கும் இடையே 20 x 20 செ.மீ. என்ற இடைவெளியில் நடப்பட்டன. அதாவது நாற்றுக்கு நாற்று 20 செ.மீ. இடைவெளியும், வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும் கொண்டு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யப்பட்டது.
பயிர் பாதுகாப்பு, களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் ஆகியவற்றை இதர நெல் ரகங்களுக்கு பரிந்துரைப்பதையே பின்பற்றினார். பின்னர் முதல் மேலுரமாக எக்டருக்கு 82.5 கிலோ யூரியாவுடன் 25 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் தூர்கட்டும் பருவத்தில் இட்டார். இதே அளவு உரங்களை இரண்டாவது மேலுரமாக கதிர் உருவாகும் சமயத்தில், 3வது மேலுரமாக பூக்கும் தருணத்தில் இட்டார்.

மகரந்தச் சேர்க்கை

கலப்பு செடிகளை ஒவ்வொரு வரிசையிலும் செடிகள் நட்ட முதலில்இருந்தே அகற்றிவிட்டுள்ளார். பூக்கும் பருவத்தில் மகரந்தம் கொட்டும் செடிகள் மாற்றுப் பாதைகளைக் கொண்ட செடிகளை கண்காணித்து தூரோடு அகற்றினார்.

முக்கிய தொழில்நுட்பங்களான ஆண் பெண் ரகங்கள் ஒரே சமயத்தில் பூக்க வேண்டும். அல்லது பெண் ரகம் இரு நாட்களுக்கு முன்பாக பூக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் தழைச்சத்து கொண்ட யூரியா போன்ற ரசாயன உரங்களை மேலுரமாக இடுவதாலும் அல்லது யூரியா கரைசல் தெளிப்பதாலும் 3 முதல் 4 மாதங்கள் வரை பூக்கும் பருவத்தைத் தாமதப்படுத்தலாம். 20 கிராம் குருணையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 2 சதவீதக் கரைசலை தயாரிக்கலாம். இதே போல் 2 சதவீத டி.ஏ.பி. கரைசலைத் தெளிப்பதால் 2 முதல் 3 நாட்கள் முன்பாக பூக்கச் செய்யலாம். மேலும் வயலில் உள்ள தண்ணீரை வடிப்பதன் மூலம் ஆண் ரகத்தில் பூக்கள் மலர்வதைத் தாமதப் படுத்தவும் முடியும்.

பெண் ரகத்தில் கதிர் முழுமையாக கண்ணாடி இலை உறையைவிட்டு வெளியே வராது. கதிர்கள் நன்கு வெளிவரச்செய்ய 10 முதல் 15 சதம் செடிகள் பூக்கும் தருணத்தில் 15 கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு முறையும், 24 மணி நேரம் கழித்து 15 கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டாவது முறையும் தெளித்தார். ஜிப்ரலிக் அமிலம் எளிதாக தண்ணீரில் கரையாது. எனவே 1 கிராம் தூளை 10 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் தண்ணீரில் கலந்து தெளித்தார்.

அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்த காலையில் 10 மணி முதல் 11 மணி வரை நீண்ட கயிரை பயிர்களின் கதிர் மட்டத்தில் 4 முறை அல்லது 5 முறை ஆண் வரிசைக்கு நேர் கோட்டில் வளைவு கொடுத்து இழுக்கப்பட்டது. இதுபோல் 10 நாட்களுக்கு மகரந்தச் சேர்க்கை ஊக்குவிக்கப்பட்டது. காற்று இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை. பொதுவாக ஆண் பயிரில் 10 முதல் 20 சதம் நெல்மணிகள் மட்டுமே பிடிக்கும். ஆனால் சரியான விதை உற்பத்தி தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விதை பிடிப்பு சுமார் 60 சதவீதம் இருக்கும்.

நெல்மணிகள் முற்றியபின் ஆண் ரகம் முதலில் அறுவடை செய்யப் பட்டது. பெண் வரிசைகள் விடுபட்ட கலவன்களை அகற்றிவிட்டு பிறகு அறுவடை செய்தபின் தூய்மையான விதைகள் களத்தை நன்கு சுத்தப்படுத்தி தனியாக அடித்து காயவைக்கப்பட்டது. இவ்வாறு பெண் வரிசைகளிலிருந்து கிடைக்கும் விதைகள் வீரிய ஒட்டுநெல் விதைகளாகும்.

வீரிய ஒட்டு நெல் விதைகள் கிலோ ரூ.110க்கு துறையிலிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளப்பட்டது. ஏக்கருக்கு வீரிய ஒட்டு நெல் விதை 800 கிலோ கிடைத்துள்ளது. ஆண் நெல் ரகத்திலிருந்து 1350 கிலோ விதையும், 3500 கிலோ வைக்கோலும் கிடைத்துள்ளது. மொத்த சாகுபடி செலவு ரூ.24,796. மொத்த வரவு ரூ.1,05,000/- நிகர லாபம் ஏக்கருக்கு 80,204. தொடர்புக்கு:

முன்னோடி விவசாயியின் முகவரி:
எஸ்.பி. வெங்கிடுசாமி, 29, ஊர்க்கவுண்டர் தோட்டம், வரதம்பாளையம், சத்தியமங்கலம்.

தினமலர் தகவல்: முனைவர் க.மனோன்மணி, முனைவர் ச.ராஜன், க.தியாகராஜன், நெல் இனவிருத்தி நிலையம், த.வே.ப.கழகம், கோவை-641 003. போன்: 0422-247 4967
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

வெள்ளைப்பொன்னி – வெள்ளை அரிசிக்கும் மென்னை வைக்கோலுக்கும்

இன்று பச்சரிசிக்குப் பெயர் பெற்ற பல நெல் ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் ஆவணி, புரட்டாசியில் வெள்ளைப் பொன்னியைத்தான் சாகுபடி செய்கிறார்கள். இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் வைக்கோலும் போடப்படுகிறது. வெள்ளைப் பொன்னி ரகம் இக்காரணத்தால் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் வெள்ளைப்பொன்னி அரிசி சிறந்த பச்சரிசியாகவும் உள்ளது. அரவையில் குருணை விழுந்தாலும் வெள்ளைப் பொன்னி தொடர்ந்து சாகுபடியில் உள்ளது. சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட சோறாகின்றது. இதனால் விவசாயிகள் இந்த ரகத்தை முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி என்று அழைக்கின்றனர்.

இந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர். நாற்றின் வேர்கள் களர் தன்மையைத் தாங்கி நாற்று பச்சைகட்டி விடுகின்றது.

வெள்ளைப்பொன்னி

வெள்ளைப்பொன்னி

விதைப்பு

வெள்ளைப் பொன்னியை சாகுபடி செய்ய 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து 20 கூடை மக்கிய தொழு உரம் இடவேண்டும். மேலும் 16 கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். நாற்று செழிப்பாக வரும். நடவு வயலுக்கு அதிக அளவு நன்கு மக்கிய இயற்கை உரம் இடவேண்டும். இதற்கு நான்கு ட்ரெய்லர் லோடு இயற்கை உரம் இடவேண்டும்.

நடவு – களை
விவசாயிகள் மரங்களின் தழைகளையும் சேற்றில் போட்டு மிதித்துவிடலாம். வெள்ளைப் பொன்னிக்கு இயற்கை உரங்கள் அதிகம் இட்டு ரசாயன உரத்தைக் குறைத்தால் பயிர் கீழே சாயாது. மேலும் பயிர் பாதுகாப்பு செலவும் குறையும். வயலில் டிஏபி அரை மூடை மற்றும் பொட்டாஷ் அரை மூடை, யூரியா 5 கிலோ இவைகளை இடலாம். நடவு வயலில் சரியாக அண்டை வெட்டி சீராக சமன் செய்ய வேண்டும். சமன் செய்த நிலத்தில் ஏக்கரில் 12 கிலோ ஜிங்க் சல்பேட்டினை தேவையான ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும். உடனே நாற்றினை வயலில் வரிசை நடவு போடவேண்டும்.

வரிசைக்கு வரிசை 9 அங்குலமும் வரிசையில் குத்துக்கு குத்து 9 அங்குலமும் இடைவெளி விட்டு 30 நாட்கள் வயதுடைய நாற்றினை குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். இவ்வாறு செய்தால் சாயும் தன்மை கொண்ட பயிரை வயலில் சாயாமல் நிற்க செய்யலாம். இதனால் கதிர்கள் வாளிப்பாக வரும். மகசூலும் அதிகம் கிடைக்கும். நட்ட பயிருக்கு இரண்டு முறை களையெடுக்க வேண்டும். நடவு நட்ட 25 நாட்களுக்கு பிறகு மேலுரமாக யூரியா 15 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ இடவேண்டும். சாகுபடி சமயம் பயிரை கண்காணித்து பூச்சி, வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும்.

இம்மாதிரியாக சாகுபடிசெய்தால் ஏக்கரில் 25 மூடைகள் (மூடை 75 கிலோ) மகசூலாகக் கிடைக்கும். மூடைக்கு விலை ரூ.675 வரை கிடைக்கும். நியாயமான விலை ரூ.750 இருந்தாலும் வியாபாரிகள் இந்த விலையைக் கொடுக்க மாட்டார்கள். விவசாயிகள் வைக்கோல் விற்பனையிலும் ரூ.1,125 வரை பெறமுடியும். வெள்ளைப் பொன்னி சாகுபடியில் செலவு போக நிகர லாபமாக ரூ.8000 வரை பெறமுடியும்.

வெள்ளைப்பொன்னியை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி விவசாயிகள் புரட்டாசியிலும் நாற்று விட்டு நடலாம். இப் பட்டத்தில் சாகுபடி செய்பவர்களது இளம்பயிர் ஐப்பசி – கார்த்திகை பட்டத்தில் பெய்யும் மழையில் மாட்டிக் கொள்ளும். இருப்பினும் தீங்கு எதுவும் ஏற்படுவது இல்லை. இளம் பயிர்களது மகசூல் திறன் அதிகரிக் கின்றது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கின்றது.

மேலும் நல்ல அனுபவம் பெற்ற இப்பகுதி விவசாயிகள் பயிர் தொண்டைக்கதிர் பருவம் வரும்போது ஒரு கிராம் பவிஸ்டின் மருந்தினை ஒருலிட்டர் நீரில் கலந்து தெளித்து பூஞ்சாள நோய் வராமல் தடுத்துவிடுகின்றனர். இந்த சிகிச்சைக்குப்பின் நெல்மணிகள் சவரன் நிறத்தை அடைகின்றது. இந்த விவசாயிகள் இயற்கை உரங்களோடு உயிர் உரங்களையும் (அசோஸ் பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா) உபயோகப் படுத்துகின்றனர்.

விவசாயிகள் கவனிக்க:

வெள்ளைப்பொன்னி சிறந்த பச்சரிசி ரகம். அரிசி பச்சரிசியாக இருந்தாலும் புழுங்கல் அரிசியாக இருந்தாலும் கலர் மங்கலாக இருக்காமல் வெண்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாகுபடியில் வெற்றியடைவது விவசாயிகளது திறமையைப் பொருத்து இருப்பதால் விவசாயிகள் திறமையாக செயல்பட வேண்டும்.

தினமலர் செய்தி -எஸ்.எஸ்.நாகராஜன்

நெற்பயிரைத்தாக்கும் இலைச்சுருட்டுப்புழு

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது இலைச்சுருட்டுப்புழு அல்லது இலை மடக்குப்புழுவாகும். சமீப காலங்களில் இதன் தாக்குதல் முக்கியமாக உயர் விளச்சல் ரகங்களில் அதிக மாகக் காணப்படுகின்றது. தமிழகத்தில் மட்டுமல்லாது நெல் பயிரிடப்படுகின்ற அனைத்து மாநிலங்களிலும், எல்லாப் பருவங்களிலும் இதன் தாக்குதல் காணப் படுகின்றது. கோடைப் பயிரில் தாக்குதல் சிறிதளவு குறைந்து காணப்படுகின்றது. முக்கியமாகப் புரட்டாசி முதல் தை மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும்.

தாக்குதல் ஏற்படுத்தும் விதம்:

தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாட்டில் மடித்து சேதப்படுத்துகின்றது. இவ்வாறு சுருட்டப்பட்ட இலைச் சுருள்களுக்குள் புழுக்கள் இருந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் சேதம் அதிகமாகிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிறித் தோன்றுவதுடன் பயிரின் ஒளிச் சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றிவிடுகிறது. வளர்ந்த பயிர்களிலும் புடைப்பருவத்திலும் தாக்குதல் ஏற்படுவதாலும் கண்ணாடி இலை பாதிக்கப்படுவதாலும் மகசூல் வெகுவாகக் குறைகிறது. வயல்களில் இலைகள் பச்சையம் சுரண்டப்பட்டு வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.

மேலாண்மை முறைகள்:

 • பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரம் அளிக்க வேண்டும்.
 • இலைச் சுருட்டுப் புழுவின் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப் படுகின்றன. எனவே முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்குக் கவரப்படுகின்ற பூச்சிகளின் எண்ணிக்கையைக் கணித்து, தேவைப்பட்டால் பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கலாம்.
 • தேவைக்கு ஏற்ப தழைச்சத்து இட்டும் இப்பூச்சி அதிகமாகத் தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களைத் தவிர்த்தும் இப்பூச்சியின் சேதத்தைக் குறைக்கலாம். தழைச்சத்தின் தேவையை தொழு உரம் அல்லது பசுந்தாள் உரமாக இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.
 • டிரைக்கோகிரம்மா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும், பிராக்கிமிரியா, ஜேன்தோபிம்ப்ளா போன்ற கூட்டுப் புழு ஒட்டுண்ணிகளும் கோனியோசஸ், அப்பாண்டிலஸ் போன்ற புழுப்பருவ ஒட்டுண்ணிகளும் இப்புழுக்களைத் தாக்குகின்றன. முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் எக்டருக்கு 5 சி.சி. என்ற அளவில் நட்ட 37, 44 மற்றும் 51ம் நாட்களில் விடவேண்டும்.
 • பயிர் வளர்ச்சிக் காலத்தில் பத்து சத இலைச்சேதம், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் ஐந்து சத நிலையை அடையும்போதும் எக்டருக்கு மோனோகுரோட்டோபாஸ் 1000 மி.லி., புரோபனோபாஸ் 1000 மி.லி., குளோர்பைரிபாஸ் 1250 மி.லி., வேப்பெண்ணெய் 3 சதம் மற்றும் 5 சத வேப்பங்கொட்டை பருப்புச்சாறு (25 கிலோ பருப்பு) அல்லது நிம்பிசிடின் 500 மி.லி. இவற்றில் ஒன்றினைத் தெளித்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.

தினமலர் செய்தி : முனைவர் சு.இருளாண்டி மற்றும் முனைவர் க.இறைவன், வேளாண்மை அறிவியல் நிலையம், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி-629 161.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

மதுரையில் கிணற்றுப்பாசனத்தில் J-11 நெல் சாகுபடி

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ்நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக்கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூர், திருபுவனம் மற்றும் சோழவந்தான் என்ற இடங்களில் செய்கிறார்கள். சில நேரங்களில் கிணற்றுநீர் சற்று குறைந்துவிடுவதும் உண்டு. மதுரை விவசாயிகள் துணிவே துணை என்ற நம்பிக்கையில் சோதனையிலும் சாதனை படைக்கும் நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர். மதுரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகுபடி செய்கிறார்கள்.

இந்த ரகத்திற்கு செழிப்பைக் கொடுக்க வயலுக்கு கணிசமான அளவு மக்கிய தொழு உரம் இடுகின்றனர். பயிர் வரிசைகளின் இடைவெளிகளிலும் உயிர் உரங்கள், உலர்ந்த தொழு உரக் கலவைகள் இடப்படுகின்றது. உடனே பயிர் வரிசை இடையில் களையெடுக்கும் கருவிகளை உபயோகிக்கின்றனர். தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட் டால் இந்த ரகம் வறட்சியைத் தாங்கிக் கொள்கிறது.

நடவின் சமயம் 10 கிலோ பொடி செய்யப் பட்ட ஜிங்க் சல்பேட்டினை இடுகின்றனர். நடவு நட்ட 15ம் நாள் யூரியா 25 கிலோ அளவினை 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஒரு இரவு வைக்கப்பட்டு மறுநாள் வயலுக்கு இடப்படுகின்றது. பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்தோடு கலந்து வயலுக்கு இடப்படுகின்றது. விவசாயிகள் செய்யும் பணிகளால் குறிப்பாக பயிருக்கு திறமையாக களை எடுப்பதால் வேர் வளர்ச்சி ஊக்கப்பட்டு பயிர் அதிக அளவில் தூர்கள் பிடிக்கின்றன. தூர்களில் திரட்சியான கதிர்களும் பிடிக்கின்றன.

ஜே-13 பயிர் வயலில் 75 நாட்கள் தங்கி இருந்து, பயிர் நாற்றுவிட்ட 100வது நாளில் அறுவடைக்கு வந்துவிடுகின்றது. பயிர் சாகுபடிக்கு ரூ.11,000 லிருந்து 12,000 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். 32 மூடை மகசூல் எடுக்கின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20,800 இருக்கும். ஏக்கரில் ரூ.10,000 வரை லாபம் எடுக்கின்றனர். ஜே-13 நெல் மிக சன்னம். இதில் அரிசி வெண்மையாக இருக்கும். இட்லி, தோசை போன்ற பலகாரங்கள் செய்ய மிகவும் ஏற்றதாக உள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாக பொரி செய்வதற்கு ஏற்ற ஜே-13 நெல்லினை வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர். இந்த ரகத்தில் கணிசமான அளவு வைக்கோல் கிடைக்கின்றது. விவசாயிகள் ஜே-13 ரகத்தில் நல்ல பலன் அடைவார்கள்.

நெல் சாகுபடியில் நெல் மகசூலோடு வைக்கோல் மகசூலும் முக்கியமானது. நமது நாட்டில் கறவை மாடுகள், கன்றுகள், வண்டிகளை இழுக்கும் வண்டிமாடுகள் போன்றவைகள் உள்ளன. இவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கொடுத்தாலும் அவைகளின் வயிறு நிரம்ப அதிக அளவு வைக்கோலும் அவசியம். வைக்கோல் பஞ்சு போல் இருக்கும். ஜே-13 ரகத்தில் வைக்கோல் அதிக அளவு கிடைப்பதோடு அதன் விலை மற்ற ரகங்களின் வைக்கோலின் விலையைவிட சற்று அதிகமாகும்.

சாகுபடியில் ஒரு சில ரகங்களை குறிப்பிட்ட பட்டத்தில்தான் சுலபமாக சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஜே-13 ரகத்தை எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஆபத்தில் உதவக்கூடிய ஜே-13 ரகம் விவசாயிகளை சோதனை காலங்களில் காப்பாற்றுகின்றது. ஆற்காடு கிச்சடி என்ற ரகம் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இருப்பினும் இந்த ரகத்தை விவசாயிகள் விதை கிடைத்தால் தொடர்ந்து சாகுபடி செய்கிறார்கள். 100 நாள் ரகம் ஜே-13ம் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் இதை விடாமல் சாகுபடி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் செய்தி -எஸ்.எஸ்.நாகராஜன்

நெல் நாற்றங்காலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.

தற்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சம்பா பருவதுக்கான நெல் விதைகள் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நெல் நாற்றங்காலை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் முறையாக பாதுகாக்க முடியும். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக,

 • வெள்ளைப் பொன்னி,
 • பொன்மணி (சி.ஆர். 1009) அல்லது சாவித்திரி,
 • பாபட்டலா, ஐ.ஆர். 20 மற்றும்
 • பின் சம்பா ரகமான ஆடுதுறை 39

போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடிசெய்து வருகின்றனர்.

இவ்வாறு சாகுபடி செய்யும்போது ஒற்றை நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விதைகள், நீர் மற்றும் உரங்களின் அளவு குறைந்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.

உயிர்ரக பூச்சிக்கொல்லிகள்…

மேலும் நெல் நாற்றங்காலில் தோன்றக்கூடிய பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிர்ரக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிகளை அழியாமல் பாதுகாக்க முடியும்.

நாற்றங்கால் தயார் செய்யும் போது நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.

விளக்கு கம்பங்களுக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைக்கக் கூடாது. ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரிய உயிர் ரக நோய்க்கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு அல்லது புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.

நாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கிருமிகளை பரவாமல் தடுக்கலாம்.

இலைப்பேன் தாக்குதல்:

விதை விதைத்த 10 நாள்களுக்குள் நாற்றின் முனைப்பகுதி கருகி, இலையானது சிறிது சிறிதாக மஞ்சள் நிறமாக மாறினால் அது இலைப்பேன் என்ற பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.

இதை உறுதி செய்ய உள்ளங்கையை நாற்றாங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையை திருப்பி பார்த்தால் கருப்பு நிறத்தில் சிறிய பேன்கள் இருக்கும்.

இதனை கட்டுப்படுத்த, ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதனை விசை தெளிப்பான் கொண்டு நாற்றங்கால் இலையின் முனைப்பகுதியில் படும்படி பீய்ச்சி அடிப்பதால் இலைப்பேன்கள் கீழே விழுந்துவிடும். பின்பு நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடிகட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

விசைத் தெளிப்பான் வைத்திராத விவசாயிகள், நாற்றங்காலை நீரில் 10 நிமிஷங்கள் முழுவதும் நனையுமாறு மூழ்கடித்து பின் நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இதற்குப்பின் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 10 மில்லி 3 சத வேப்ப எண்ணெய்யை 10 கிராம் ஒட்டுத் திரவத்துடன்( டீப்பால், டிரைட்டான், சேண்டோவிட்) சேர்த்து நாற்றங்கால் இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைப்பேன்கள் கசப்பு தன்மை காரணமாக விலகி ஓடிவிடும் அல்லது இறந்துவிடும்.

குட்டைக் கொம்பு வெட்டுக்கிளி:

விதைத்த 10 லிருந்து 15 நாட்களுக்குள் தோன்றக்கூடிய குட்டைக் கொம்பு வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய்யே போதுமானதாகும்.

மேலும், நாற்றங்காலில் 10 “வி’ வடிவ குச்சிகள் வைப்பதால், பறவைகள், குருவிகள், மைனா, கோட்டான் போன்றவைகள் அதன்மீது அமர்ந்து குட்டை கொம்பு வெட்டுக்கிளிகளையும், இலை உண்ணும் புழுக்களையும், பறக்கும் தாய்பூச்சிகளையும் உண்டுவிடும்.

இலை சுருட்டுப் புழு:

நாற்றங்காலில் தோன்றக் கூடிய இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலை குறைக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் “பெவேரியா பேசியானா’ என்ற உயிர்ரக பூச்சிக்கொல்லியை அதிகாலைப் பொழுதில் கைத் தெளிப்பான் மூலம் 200 லிட்டர் நீரினை பயன்படுத்தி தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாக்கி புழுக்களை அழிக்கலாம்.

பச்சை தத்துப்பூச்சி:

நாற்றங்கால் வயது 15 முதல் 20 நாட்கள் உள்ள தருணத்தில் நாற்றுக்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அது பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறியாகும்.

இதை நிவர்த்தி செய்ய 5 சீத்தாபழங்களில் உள்ள கொட்டைகளை லேசாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) வைத்திருந்து அந்த சாற்றினை மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி நாற்றங்காலில் தெளித்தால் கட்டுப்படும்.

செஞ்சிலந்தி தாக்குதல்:

தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக நிலவும் ஒடுக்கத்துடன் கூடிய அதிகமான வெப்பநிலையால் செஞ்சிலந்திகளின் தாக்குதல் நெல் நாற்றுக்களில் தோன்றி இலைகள் மீது சிகப்பு வண்ண திட்டுக்கள் ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்த ஒரு சத புங்கம் எண்ணெய் (1 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது டைக்கோபால் (1.5 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது நனையும் கந்தகம் (1 கிலோ 8 சென்ட் நாற்றங்கால்) தெளிக்க வேண்டும். இதன் மூலம் செஞ்சிலந்தி தாக்குதல் கட்டுப்பாடும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு மற்றும் களைகள் இல்லாதவாறு நன்கு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றங்காலை தாக்காதவாறு பாதுகாக்கலாம்.

இவ்வாறான முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் நாற்றங்காலை பாதுகாக்க முடியும். செலவும் விவசாயிகளுக்கு குறையும்.

தினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

வேளாண் அரங்கத்தில் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் புதுச்சேரி