கோபியில் நிலக்கடலை பயிருக்கு மானிய விலையில் ஜிப்சம்

கோபி வட்டாரத்தில் மானாவாரியில் 2000 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

நிலக்கடலை வளர்ச்சிக்கு கால்சியம் சத்து 18 முதல் 23 சதவீதம் வரை உள்ள ஜிப்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலக்கடலையில் எண்ணெய் சத்து அதிகரிக்க கந்தகம் அடங்கிய ஜிப்சம் இடவேண்டும்.

இதனால் மண் இறுக்கம் தளர்த்தப்பட்டு காய்களின் பருமன் ஒரே மாதிரியாகவும், திரட்சியாகவும் வளரும்.

ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் அடியுரமாக இட வேண்டும். விதைத்த 45வது நாளில் களை எடுக்கும் முன் இட்டு மண் அணைத்தால் சாகுபடி பெருகும்.

கோபி, கூகலூர், மற்றும் வெள்ளாங்கோவில் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் ஜிப்சம் வழங்கப்படுகிறது

தினமணி தகவல் – திரு ஆசைத்தம்பி, வேளாண்மை உதவி இயக்குநர், கோபி

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற யோசனை

சாதாரண நிலையில் நிலக்கடலையின் முளைப்புத் திறன் குறைந்தபட்சம் 70 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளைக் கடினப்படுத்தும் முறையில் விதை நேர்த்தி செய்து, விதைப்புப் பணியை மேற்கொள்ளும்போது அதிகமாக 95 சதவீதம் முளைப்புத் திறன் ஏற்பட்டு, அதிக எண்ணிக்கையில் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. இதனால் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிகிறது.

விதைப்பதற்குத் தேவையான கடலைப் பருப்பை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட வேண்டும். விதையின் கொள்ளளவு எவ்வளவு வருகிறதோ, அதில் பாதி அளவுக்கு மட்டும் நீர் எடுத்துக் கொண்டு, அதில் 0.5 சதம் அளவுக்கு கால்சியம் குளோரைடு கலந்து, அதில் விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் அவற்றை ஈரமான சாக்குத் துணியின் மீது போட்டு, அதன்மீது மற்றொரு ஈரமான சாக்கால் மூடி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் லேசாக முளைவிட்ட விதைகளைத் தனியாகச் சேகரிக்க வேண்டும். இம் முறையை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, திரும்பச் செய்வதால் முளைக்கும் தன்மையுடைய விதைகளை தனியாகச் சேகரிக்கலாம்.

விதைகளை நிழலில் உலர்த்தி விதையின் ஈரப் பதத்தை 10 சதத்துக்குக் கொண்டு வர வேண்டும். இந்த விதைகளை 7 முதல் 10 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம். இம் முறையில் முளைப்புத் திறன் இல்லாத விதைகள் எளிதாக இனம் காணப்பட்டு, ஒதுக்கி வைக்கப்படுகிறது. விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் :
சக்கரவர்த்தி, வட்டார வேளாண் உதவி இயக்குநர், நரிக்குடி

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம்

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம் தேவை என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சி.​ செந்தமிழ்ச்செல்வன்.

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவது குறித்தும்,​​ நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது:

விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா 3 ​ பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.​ விதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ ​ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.​ பயிருக்கு ​ தேவையான பேரூட்டச் சத்துக்களுடன்,​​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.

ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் ​ காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.​ மேலுரமாக ​ இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.​ இதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.​ காய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.

பூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் 75 ​ நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.​ ​ இரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற ​ உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம்.

விவசாயிகளுக்குத் தேவையான விதைக் காய்கள் திண்டிவனம்-​ 7 ​(டி.எம்.வி-76) விருத்தாசலம்-​ 2 ​(வி.ஆர்.ஐ-2) உள்ளிட்ட விதை ரகங்கள் மற்றும் டி.ஏ.பி.​ அம்மோனியம் சல்பேட்,​​ போராக்ஸ்,​​ பிளானோபிக்ஸ் ஆகிய உரங்கள் பெரம்பலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

First Published : 03 May 2010 12:09:43 AM IST
Last Updated : 03 May 2010 10:00:24 AM IST

நாமக்கல்,​​ மே 2: ​ நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலைக்கடை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

÷இது தொடர்பாக,​​ நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா.​ சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி:

÷மானாவாரி நிலக்கடை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.​

15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும்.

இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும்.​ ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.

÷ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும்,​​ ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.​ வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.​ நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும்.​ வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.

எனவே,​​ தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.​ ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன் பெற முடியும்.