மதுரை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகளை வழங்கியும், பயிரிடும் பரப்பளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. அதனால் விவசாயிகளால் அதிக அளவு பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. அப்படியே பயிரிட்டாலும் உற்பத்தி எதிர்பார்த்த அளவு கிடைக்காத நிலை இருந்தது.
அதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆகும் நிலை ஏற்பட்டது. விவசாயிகளின் கிணறுகளில் இருக்கின்ற நீர்வளத்தைப் பயன்படுத்தி, தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் வீரிய ஒட்டு ரக மாங்கன்று, சப்போட்டா, எலுமிச்சை, நெல்லி, கோகோ, நாவல், முந்திரிக்கொட்டை உள்ளிட்ட மரக் கன்றுகளை வளர்க்கும் திட்டம் தமிழகத்தில் 2005-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி, திருமங்கலம், கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்பட 13 வேளாண் வட்டார அலுவலகங்கள் மூலம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன.
இக்கன்றுகளை வளர்க்க ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டில் ரூ.10,500, 2-ம் ஆண்டில் ரூ.4,500, 3-ம் ஆண்டில் ரூ.6,750 மதிப்பில் ரொக்கம் இல்லாமல் உரம் மற்றும் இடுபொருள்களாக வழங்கப்படுகிறது.
இக்கன்றுகள் அனைத்தும் விரீய ஒட்டு ரகத்தைச் சேர்ந்தது. இதனால் விரைவில் காய்ப்புக்கு வந்து விடும். எனவே விவசாயிகள் உரிய பலன்களைப் பெற முடியும்.
இத்திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், கொட்டாம்பட்டி, பேரையூர், சுப்புலாபுரம், பூஞ்சுத்தி ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து காய்ப்புக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பயனடையும் விவசாய நிலப் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 2009-10-ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 3,714 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதற்கு மானியமாக ரூ.3.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2010-11-ம் ஆண்டுக்கு 3,389 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.3.57 கோடியில் திட்ட ஒதுக்கீட்டுக்கு அனுப்பி உள்ளனர். இது கடந்த ஆண்டை விடக் குறைந்த பரப்பளவு ஆகும்.
இத்துறை மூலம் மரம் வளர்க்கும் திட்ட நிலப்பரப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.