துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க டிஏபி கரைசல்

12.5 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும். இக்கரைசலை தெளிப்பதற்கு முன் வடிகட்டி, 600 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் மீது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மீண்டும் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு இருமுறை தெளிப்பதால் நல்ல திரட்சியான, தரமான விதைகள் கிடைப்பதோடு, ஹெக்டேருக்கு 1,000 முதல் 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

தினமணி செய்தி

நாற்று நடவு மூலம் துவரை சாகுபடி

துவரை நம் மாநிலத்தின் முக்கியமான பயிர். அதிகமான அளவில் பயிரிடப்பட்டாலும் பழமையான விவசாயம் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால் விவசாயிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். இதைத் தடுக்க நாற்று முறை விவசாயம் கைகொடுக்கும். வம்பன்2, வம்பன்3 ஆகிய இரகங்கள் அதிக விளைச்சலும் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மையும் கொண்டது. இந்த இரகங்கள் 1999 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் வம்பன் பயிறுவகை ஆராய்ச்சி மையத்திலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சாகுபடி அட்டவணை

இரகம் வயது பருவம்
வம்பன்2 180 ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்)
வம்பன்2 110~120 ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்), செப்டம்பர்-அக்டோபர் (புரட்டாசிப் பட்டம்), பிப்ரவரி மார்ச் (மாசிப்பட்டம்)

எல்லா மண் வகைகளும் ஏற்றதே.

நாற்றங்கால்
துவரையில் நாற்று நடவு கோடை உழவிற்குப் பிறகு ஆரம்பமாகிறது. பயிர் அறுவடைக்குப் பின்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்வதன் மூலம் பயிர்களைத் தாக்கக் கூடிய பூச்சிகள், நுண்ணுயிர்கள் மற்றும் நிரந்தரமான களைகளை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்கலாம். மேலும் இதனால் மண் மற்றும் மழை நீர் சேமிக்கப் படுகிறது. நீரின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது. நாற்று நடவிற்கு மூன்று வாரத்திற்கு முன்பு மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 5 டன் வீதம் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்னும் விகிதத்தில் இடவேண்டும். இதன் மூலம் நிலத்தின் நீர் சேமிக்கும் திறன் மற்றும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

விதை அளவீடு
ஒரு ஏக்கருக்கு – 2.5 கிலோ விதை

விதை நேர்த்தி
ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் கால்சியம் குளோரைடு கலந்து கரைசலை தயார் செய்க
ஒரு கிலோ விதையை ஒரு லிட்டர் கரைசலில் ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் நிழலில் ஏழு மணிநேரல் உலர்த்துக
பின் வெல்லக் கரைசலில் 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 4 கிராம் டிரைக்கோடெர்மா கலந்த கலவையை ஒரு கிலோ விதையுடன் கலந்து உலர்த்தவும்

நாற்று தயார் செய்யும் முறை
6க்கு 4 இஞ்ச் அளவும் 200 மைக்ரான் தடிமன் உள்ள பாலிதீன் பைகள் அல்லது ஒரு மிமீ தடிமன் அளவும் 1.5 இஞ்ச் அளவுள்ள குழித்தட்டுக்களைத் தேர்வு செய்யவும்
சம அளவிலான மண், மணல் மற்றும் தொழு உரம் அல்லது மண்புழு உரம் கலவையை பைகளில் அல்லது குழிகளில் நிரப்பவும்.

ஒரு பை அல்லது குழியில் 2 விதைகளை ஊன்றி நீரிட்டு நிழலில் நிரப்பவும்

முளைப்பு வந்த பிறகு நாற்றுக்களை பாதி வெயில் படுமாறு வைத்து கடினப்படுத்தவும்

25~30 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.

இதன் நன்மைகள் என்ன?

 • வாளிப்பான நாற்றுக்கள்
 • விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன
 • தழை மற்றும் மணிச்சத்து இடும் அளவு குறைகிறது
 • உயிர் உர நேர்த்தி செய்வதனால் மண் வளம் கூடுகிறது
 • அதிக முளைப்புத் திறன்
 • சீரான நாற்று வளர்ச்சி
 • வறட்சி தாங்கும் திறன்

நடவு செய்யும் முறை
நன்கு உழுது நிலத்தைத் தயார் செய்யவும். நீண்ட காலப் பயிறுக்கு 5க்கு 3 அடியும் குறுகிய காலப் பயிருக்கு 3க்க 2 அடியும் இடைவெளிவிட்ட அரை சதுர அடி குழி எடுக்கவும்.

கடினப்படுத்தப்பட்ட நாற்றுக்களை நடவுக்குப் பயன்படுத்தவும்
இறவையில் ஒரு ஏக்கருக்கு 10:20:10:8 தழை:மணி:சாம்பல்:கந்தக சத்தை அடியுரமாக இடவும். யூரியா 22 கிலோ, சூப்பர் 125 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ மற்றும் ஜிப்சம் 44 கிலோ

டிஏபி கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான 2 சத டிஏபி கரைசலைத் தயாரிக்க 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு ஊற வைக்கவும்.
அதிலிருந்து தெளித்த கரைசலை 188 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் இலையில் நன்கு படும்படி பூக்கும் பருவத்தில் ஒரு முறையும் மீண்டும் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு முறையும் கை தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
பயிறு வகைப் பயிர்களில் முக்கிய குறைபாடு என்னவென்றால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் பெருமளவில் உதிர்ந்துவிடும். இதைத் தவிர்க்க துவரை போன்ற பயிறு வகைக்கு 40 பிபிஎம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் (பிளானோபிக்ஸ்) என்ற மருந்து 45 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து பூக்க ஆரம்பிக்கும் போது ஒரு முறையும் பின்னர் 15~20 நாட்களில் மறுமுறையும் தெளிக்கலாம்.

களை பராமரிப்பு
பெண்டி மெதாலின் களைக்கொல்லி ஏக்கருக்கு 800 மில்லி அல்லது புளுகுளோரலின் ஏக்கருக்கு 600 மில்லி வீதம் விதைக்கு மூன்று நாட்களுக்குள் ஈரம் உள்ளபோது தெளிக்கவும். பின்பு 30வது நாளில் கைக்களை எடுக்கவும்

துவரையில் ஒருங்கிணைந்த காய்ப்புழு நிர்வாகம்

 • எதிர்ப்புத் திறன் மிகுந்த வம்பன்2, வம்பன்3 இரகங்களைப் பயிரிடுதல்
 • பயிர் தாங்கிகளை அமைத்தல்
 • பச்சைப் புழுக்கான இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தல் (ஏக்கருக்கு 5)
 • முட்டை மற்றும் புழுக்களைக் கையால் பொறுக்கி அழித்தல்
 • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளித்தல்
 • பச்சைக் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த என்பிவி நச்சுயிரியை ஏக்கருக்கு 200 புழு சமன் என்ற அளவில் தெளித்தல்
 • பூக்கும் தருணத்தில் 50 சதம் எண்டோசல்பான் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி) அல்லது குளோர்பைரிபாஸ் (2 மிலி/லிட்டர்) தெளித்தல்

நோய் நிர்வாகம்
வேரழுகல் மற்றும் வாடல் நோய்
கார்பெனாசியம் (2 கி/கி) டிரைக்கோடெர்மா விரிடி (4 கி/கி) அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (10 கி/கி) விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்

துவரையில் மலட்டுத் தேமல் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழிக்கவும்
ஏக்கருக்கு 200 மிலி மானோகுரோட்டோபாஸ் தெளிக்கவும்

நன்மைகள்
100 சத பயிர் பாதுகாப்பு
ஏக்கருக்கு 2.5 கிலோ விதை போதுமானது
கடினப்படுத்தப்பட்ட விதை மற்றும் நாற்று துரிதமாக வேர் வளர்ச்சி அடையவும் வறட்சியைத் தாங்கவும் வழிவகை செய்கிறது.
தரமான நாற்றுக்களை தகுத்த இடைவெளியில் நடுவதால் அதிக மகசூல் கிடைக்கிறது
மானாவாரியில் மழை வந்தபின் நடுவதற்கு உகந்தது.
முதல் களை எடுப்பு தவிர்க்கப்படுகிறது

தொழில் நுட்பத்தின் நன்மைகள்
சரியான நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் மே மாதத்தில் நடவு செய்யலாம்
பருவத்திற்கு முன்பாக நடுவதால் காய்துளைப்பான் தாக்குதல் தவிர்க்கப்படுகிறது.
வேர் ஆழமாகச் செல்வதால் வறட்சியைத் தாங்குகிறது
பயிர்களுக்கு இடையே போதுமான இடைவெளி இருப்பதால் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது எளிது
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
போதுமான இடைவெளி, காற்று, மண் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது

பக்கக் கிளைகள் மற்றும் தாவர வளர்ச்சி நன்றாக உள்ளதால் காய் மற்றும் விதைபிடிப்புத் திறன் அதிகமாக உள்ளது

கடைபிடிக்க வேண்டியது என்ன?
நாற்றங்காலில் உள்ள நாற்றுக்களுக்கு தினசரி நீர் பாய்ச்சுதல்
ஜூன் மாதம் இரண்டாவது வார மழை நாட்கள் விதைப்பதற்க ஏற்றவை
நடவு வயலுக்கு நாற்றினைக் கொண்டு செல்லும்போது ஈரத்துணியினால் மூடி எடுத்துச் செல்லவேண்டும்
ஒவ்வொரு செடிக்கும் மண் அணைக்க வேண்டும்.
பயிருக்கு இடையில் உழவு செய்வதன் மூலம் நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கலாம்

தவிர்க்கவேண்டியவை என்ன?
அதிக அளவு நீர் ஆபத்து
செடியினை வளைக்கவோ உரிக்கவோ கூடாது

அறுவடை
80 சத காய்கள் நன்கு முற்றியதும் காய்களை அறுவடை செய்யவேண்டும். ஓரிடு நாட்கள் கழித்து காய்களை நன்கு வெயிலில் காய வைத்த பயிறைப் பிரித்தெடுத்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 450 முதல் 550 கிலோ வரை கிடைக்கும்

நவீன வேளாண்மை தகவல் – சீ.ராஜா ஜோஸ்லீன், ம. இரகுபதி, கிரீடு வேளாண் அறிவியல் மையம் அரியலூர். 04331 – 260 335

நடவு முறை துவரை சாகுபடி

ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது. நடைமுறை சாகுபடியில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நேரடி விதைப்பாக உழவு சால்களில் விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் துவரையை நாற்றுவிட்டு நடவு செய்து நல்ல விளைச்சல் கண்டு வருகின்றனர்.

முக்கிய நடவுமுறை சாகுபடி நுட்பங்கள்:

 • துவரை நடவு செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன் நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் இடப்படுகிறது.
 • இறவை மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5′ x 3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6′ x 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்) குழிகள் எடுக்கப்படுகின்றன.
 • நாற்றங்காலுக்கு 1 கிலோ விதை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையை 0.2 சதம் கால்சியம் குளோரைடு (20 கிராம்/லிட்டர்) கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் 7 மணி நேரம் நிழலில் உலர்த்தப்படுகிறது. இவ்விதையினை 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள், டிரைகோடெர்மா (10 கிராம்/ கிலோ) பூஞ்சாணத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்யப்பட்டு விதைக்கப் படுகிறது.
 • மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6” x 4”) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
 • பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க 3-4 துளைகள் போடப்படுகின்றன. பின் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்கப்படுகிறது.
 • இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப் படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்வது நல்லது.

நடவுமுறை:

 • நாற்றுக்களை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்படுகின்றன.
 • ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை போன்ற பயிர்களை விதைத்து பிறகு நடவு மேற்கொள்ளப்படுகின்றது.
 • நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப் படுகிறது. பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப 3-4 முறை பாசனம் செய்யப்படுகின்றது.
 • நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்கப்படுகிறது. நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்து பராமரிக்கப்படுகிறது.

உர நிர்வாகம்:

 • நடவு நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 10:23:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கும் வகையில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரங்களும் செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.
 • நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ் ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.
 • சோள விதைகளை துவரை வயலில் விதைத்து பறவைகள் அமர்வதற்கு ஏதுவாக வழிவகை செய்வது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கிறது.

தினமலர் தகவல்: பா.கலைச்செல்வன், செ.தே.சிவகுமார், விரிவாக்கக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1522

துவரையை தனிப்பயிராக செய்தால் லாபம் பெறலாம்: வேளாண்மை அதிகாரிகள்

நாளுக்கு நாள் துவரம் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் விவசாயிகள் துவரைச் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். தற்போதுள்ள பருவம் துவரைச் சாகுபடிக்கு ஏற்ற பருவம் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் துவரையை பெரும்பாலும் மணிலாவில் ஊடுபயிராக பயிர் செய்கின்றனர். மணிலாவில் செலுத்தும் கவனம் ஊடுபயிராக செய்யும் துவரையில் செலுத்தாததால், துவரை சரியாக விளைவதில்லை என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் தவறாக ஏற்பட்டுள்ளது.

மேலும் துவரையை 5 மாதம் முதல் 6 மாதம் வரை வளர்க்க வேண்டும் என்ற கருத்தும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

தற்போது 120 நாள்களில் (4 மாதம்) விளையக் கூடிய துவரை ரகங்கள் எல்லாம் வந்துள்ளன. வம்பன்-4, ஏபிகே 1, ஐபிசிஎல் போன்ற ரகங்கள் 120 நாள்களில் விளைந்து பயன்தரக் கூடியவை.

துவரைப் பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு 600 கிலோ வரை அறுவடை செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 80-க்கு விற்றால் கூட ரூ. 48 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.

இந்த துவரை உற்பத்தி செய்ய, 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செலவுகள் ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை, பயிர்கள் உற்பத்தி செய்ய வேளாண் துறை மூலம் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

இத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஜிப்சம், நுண்ணூட்டச்சத்து, ஸ்பிரேயர் மற்றும் தேவையான மருந்துகளை 50 சதவீத மானியத்திலும் துவரை சாகுபடி செய்வதற்கு பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர்கள் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் ஒட்டுமொத்தமாக 1500 ஏக்கரில் துவரை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

அவர்கள் ஏக்கருக்கு ரூ. 54 ஆயிரம் வரை லாபம் சம்பாதிக்கின்றனர். அதுபோல் இங்கு துவரையை தனிப் பயிராக பயிர் செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம். மேலும் துவரைப் பயிர் செய்வதன் மூலம் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும். துவரைப் பயிர் செய்வதற்கான மானிய உதவிகளை பெற அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.